செவ்வாய், 4 ஜூலை, 2017

மஞ்சள் : சாதிய சமூகம் தான் மலம் அள்ளும் தொழிலை மனிதர்களைக் கொண்டு இன்னும் ..

Meena Somu : மஞ்சள். வெள்ளியன்று காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது,
அதில் 80 % மேல் இளைஞர்கள் கூட்டம்.
நான் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து... இத்தனை கூட்டமா என ஆச்சர்யத்துடன் கேட்டேன். திருமா வருவதால் இருக்கலாம் என தோழி விளக்கம் சொன்னார். இருந்தாலும் நீலம் அமைப்பும், ஜெய்பீம் அமைப்பும் செய்த விளம்பரமும் காரணம் என்றார். கூட்டம் கூடியிருந்தது பெரிதில்லை, ஆனால் இப்படியொரு சமூக நாடகத்தினை முழுமையாக 2.30மணி நேரம் பார்த்ததோடு விசில், கைத்தட்டல், கோஷம் என அதிர வைத்தது பார்த்து மனசு சந்தோசப்பட்டது. ஆமாம் கையால் மலமள்ளும் கேடுகெட்ட சமூகத்தை விமர்சிக்கும் நாடகத்தில், ஜாதி கட்டமைப்பை காட்டமாக விமர்சிக்கும் இடமெல்லாம் ஆமோதிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது... இளைய தலைமுறையில் மாற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கை வந்தது.
கையால் மலம் அள்ளும் நிலையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டு அரசாங்கம், அப்படிப்பட்ட நிலையே இல்லை என உச்சநீதிமன்றத்தில் பொய் சொல்கிறது.
உச்ச நீதிமன்றமோ அந்த வழக்கை தள்ளுபடி செய்கிறது. அப்படியென்றால் தலப்பாக்கட்டி கடையில் செப்டிக் டாங்கில் இறங்கி மூச்சு முட்ட இறப்பவர்கள் என்ன கணக்கில் வருகிறார்கள் என கேள்வியை வைக்கிறது மஞ்சள். நாளும் அடுத்தவன் மலத்தை கையால் அள்ள ஒரு ஜாதியை வைத்திருக்கும் கேடுகெட்ட இந்து அமைப்பின் மீது விமர்சனத்தை வைத்து பகிரங்கமாய் குற்றம்சாட்டும் மஞ்சள் நாடகத்தின் பலம், இந்த கேடுகெட்ட சமூக இழிவை எந்தவித சமரசமின்றி அதன் ஆணிவேரான ஜாதிய கட்டமைப்பை மையப்படுத்துவது தான்.
நீதிமன்ற காட்சிகளும், ஸ்வச் பாரதம் மீதான விமர்சனமும் கையால் மலம் அள்ளும் தொழிலில் நிர்பந்தப்படுத்தப்படும் மனிதனின் பார்வையில் எத்தகைய ஏய்ப்பு மொள்ளமாறித்தனம் என்பதை அருமையாக காட்சிப்படுத்தியது மஞ்சள்.
இந்த சமூக அவலம் குறித்த எந்த சுரணையுமற்ற பொது சமூகத்தின் மீது சரமாறி கேள்விகளை தொடுக்கிறது மஞ்சள்.
இந்து சமூகத்தின் மங்கலமான மஞ்சள் குறியீடு உண்மையில் ஜாதிய கழிசடை சமூகத்தின் மலம் என்பதாக உருவகப்படுத்தியது சிறப்பு. அம்மக்களின் வலியை வலியாக மட்டுமே காண்பிக்காமல், அவர்களை மீளமுடியாமல் மலக்குழிக்குள் தள்ளிய ஜாதிய சமூகத்தை விமர்சிக்கும் இந்த கோணம் தான், வேற தொழில் பார்க்கலாமே என்று மேலோட்டமாய் சொல்லும் மேடுக்குடிகளின் புத்தியில் அறையும் கோணம்.
நாடகத்தின் நீளம் கொஞ்சம் அதிகமென்றாலும் எல்லோரையும் உட்கார்ந்து பார்க்க வைத்தது தான் வசனமெழுதி வடிவமைத்தவர்களின் வெற்றி.
( தோழர் ஜெயராணி- வசனம், தோழர் ஸ்ரீஜித் சுந்தரம் அவர்களின் கட்டியக்காரி நாடக குழுவினர் மற்றும் தோழர் சரவணன்)
இந்த நாடகம் முடிய இரவு 9.30மணியானது. அதற்கு பின் நீண்ட அரசியல் மற்றும் சினிமாத்துறை ஆளுமைகளின் பேச்சினையும் கேட்க அரங்கத்தின் பாதி மக்கள், இரவு 11மணி வரை உட்கார்ந்திருந்தது சிறப்பு.
ஆக இதிலிருந்து தெரிவது... எல்லோரும் ஜாதிய சமூகத்தின் அடிமைகள் அல்ல என்பது தான்.
நாடகத்தின் மீதான விமர்சனமாக தோழர் திருமாவளவன் பேசிய இரண்டும் மிக சரியான வாதம். மனித மாண்பினை மீட்க, பார்ப்பனிய அதிகாரத்தை உடைக்கனும். அதிகாரத்தை நாம் வென்றெடுக்கனும் என்றார்.
திரைத்துறையை சேர்ந்த அனைவரும் ஜாதிய சமூகத்தை விமர்சிக்காத சினிமாவின் இன்றைய போக்கு மாற்றம் பெறவேண்டும் என தாங்கள் விரும்புவதாக தெரிவித்தார்கள். பார்ப்போம் செயலில் காண்பிக்கிறார்களா என.
பக்கா கட்சிக்காரர்களின் சுயநல மனநிலை அப்பட்டமாக வெளிப்பட்டது திருநாவுக்கரசு அவர்களின் விமர்சனத்தில். அவர் விமர்சித்த காட்சி.
//ஒரு பக்கம் மலம் அள்ளும் தொழிலில் நிர்பந்திக்கபட்ட பெண்ணுக்கு பிரசவம் நடக்கிறது. அவள் தான் அனுபவிக்கும் இந்த கேவலமான வாழ்க்கை தன் குழந்தைக்கு வேண்டாம் என கதறுகிறாள். மற்றொரு பக்கம், பார்ப்பனர்கள் பூசை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே பார்ப்பன குழந்தைக்கு பூணூல் அணிவிக்கும் போது, இது சாதாரண நூல் இல்லை, அதிகாரம் என சொல்லி அணிவிக்கின்றனர். அந்த பக்கம் குழந்தையை கையில் ஏந்தி, நான் உன்னை படிக்க வைத்து, இந்த தொழிலுக்கு வராமல் மானமுடன் வாழவைப்பேன் என பிரசிவித்த பெண் சொல்கிறாள். ஆனால் அந்த பக்கத்திலிருந்து பார்ப்பனர்களால் ஏவப்பட்ட இடைநிலை ஜாதியை சேர்ந்தவன், அவளிடம், அப்படியெல்லாம் உங்களை விட்டுவிடுவோமா என ஜாதி அடிமை சங்கிலியை எடுத்து மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் அப்பெண்ணின் குழந்தைக்கு அணிவிக்கிறான். அப்பெண் கதறுகிறாள். எங்களை மலம் அள்ளுவதால் நாற்றமெடுக்கும் தொழில் செய்வதாக மூக்கை மூடுகிறீர்கள். ஆனால் மலத்தை விட நாற்றமெடுக்கும் உங்கள் சிந்தனையை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள் என காரி துப்புகிறாள். //
இந்த காட்சி தான் நம் திருநாவுக்கரசு அய்யா அவர்களுக்கு தவறாக தோன்றுகிறதாம். ஜாதிய அமைப்பை விமர்சித்து துப்பலாமாம். ஆனால் ஐந்து பார்ப்பனர்களில் நான்கு பேரை அனுப்பிவிட்டு அந்த ஒருவரை வைத்துக் கொண்டு துப்பியது அந்த சமூகத்தின் மனதை புண்படுத்துமாம். இந்த நாடகம் ஜாதி வன்மங்களை சொல்கிறது. அதை எல்லோரும் பார்க்க வேண்டுமல்லவா என்று கூறி, அந்த பார்ப்பனரையும் அனுப்பிவிட்டு துப்புவது போல காட்சி அமைத்திருக்கலாம் என தனது விமர்சனத்தை வைத்தார்.
அட ஜாதி மனநிலை உள்ளவர்களின் மனதை வருடி இந்த கேடுகெட்ட ஜாதி அமைப்பை எப்படி ஒழிப்பது ?! அது மட்டுமின்றி அந்த நாடகத்தில் மலம் அள்ளும் தொழிலில் நிர்பந்தப்படுத்தப்படும் ஜாதியினரை உயர் ஜாதியினர் எவ்வளவு இழிவாக நடத்துகிறார்கள் என்பதை காண்பிக்கும் போது, மலம் அள்ளும் தொழில் புரிபவர்களின் புண்பட்ட நிலை குறித்து கிஞ்சித்தும் புண்படாத பார்ப்பன ஜாதி வன்மம் பிடித்தவர்களுக்கு மனசு புண்பட்டால் தானே வலிக்கும் ?
பார்ப்பனர் மனசு புண்படக்கூடாது என யோசிக்கும் இந்த இடைஜாதி அடிமைகள் தான், பார்ப்பன ஜாதிய சமூகத்தை நிலைநிறுத்த உதவும் ஜாதி அடிமைகள். சுரணையற்ற ஜென்மங்கள்.
அய்யா சுபவீ நறுக்குத் தெரித்தது போல கூறினார். இந்த நாடகத்தை ஜாதிமறுப்பாளர்கள் பார்க்கவேண்டியதில்லை, ஜாதியை இறுக்கி வைத்திருக்கும் பொது சமூகத்தின் வீதி தோறும் நாடகத்தை நடத்துங்கள் என கோரிக்கை வைத்தார்.
ஜாதிய சமூகம் தான் இந்தியாவில் மலம் அள்ளும் தொழிலை இன்னும் மனிதர்களைக் கொண்டு செய்ய வைக்கிறது என்பதை காரி உமிழ்ந்து சொல்கிறது மஞ்சள். இந்தியாவின் மனசாட்சியை உலுக்க இத்தகைய நாடகங்கள் அவசியம். இப்படியொரு முயற்சியை மேற்கொண்ட நீலம் அமைப்பு மற்றும் ஜெய்பீம் அமைப்பு தோழர்களுக்கு வாழ்த்துக்களும் அன்பும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக