ஞாயிறு, 30 ஜூலை, 2017

தமிழக அரசு அதிகார வர்க்கத்துடன் இணைந்து போலீஸ் ராஜ்ஜியம் நடத்துகிறது?

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் அரசியல் கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் தனது கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் செயல்படத் தொடங்கும். இது பொதுவான எதிர்பார்ப்பு. அந்த வகையில் ஆட்சி செம்மையாகச் செயல்படுவதற்கு சட்டங்களின் அடிப்படையில் அதிகார வர்க்கம் துணை நிற்கும்; நிற்க வேண்டும். ஆட்சியாளர்கள் தவறு செய்தால், அடுத்தத் தேர்தலில் மக்கள் அவர்களை ஓரங்கட்டும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் அதிகார வர்க்கம் கடமைகளை சரிவரச் செய்கிறதா என்று கண்காணிக்கும் பொறுப்பும் ஆட்சியாளர்களுக்குக் கட்டாயம் உண்டு. மக்கள் செல்வாக்குள்ள முதல்வர் பொறுப்பிலிருக்கும்போது, அவரது உத்தரவுகளை அல்லது வழிகாட்டுதல்களை (அது தவறானவைகளாக இருந்தாலும் சரி) அதிகார வர்க்கம் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு செயல்படுத்தும்.
அதேசமயம் ஓர் அரசியல் உறுதி (political will) அல்லது ஸ்திரத்தன்மை இல்லாத பலவீனமான அரசு, சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாகப் பொறுப்பிலிருக்கும்போது ஆட்சியாளர்களின் கட்டளைகளை அப்படியே அதிகார வர்க்கம் நிறைவேற்றும் என்று சொல்ல முடியாது.
அதிலும் மிகக் குறிப்பாக காவல்துறை தனது விருப்பப்படி செயல்படுவதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு. அதற்குக் காரணம் தங்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்குத் துணிவு இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும், காவல்துறையின் அத்துமீறிய சில செயல்பாடுகள் ஆட்சியாளர்களின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதாக இருக்கும். காவல்துறையின் நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளைக் கால்களில் போட்டு மிதிப்பதாக இருந்தாலும், பலவீனமான அரசுக்கு அரசியல் ரீதியாகவும் அவை தேவைப்படும் வகையில் இருப்பதால், அத்துமீறல்களை நியாயப்படுத்தும் போக்கே ஆட்சியாளர்களிடம் இருக்கும். தங்களது செயல்களுக்குக் கேள்வி கேட்காத, தவறு செய்தால் தண்டிக்கத் துணிச்சலில்லாத அரசு தொடர்வதையே காவல்துறையும் விரும்பும்.
இப்படி நேர்மையற்ற காரணங்களுக்காக ஆளும் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் குறிப்பாக காவல்துறையும் கூட்டணி அமைக்கும்போது, அங்கு அடிப்படை உரிமைகள் பறிபோகும்; ஜனநாயக நடைமுறைகள் மற்றும் உரிமைகள் நசுக்கப்படும்; அடக்குமுறை அரங்கேறும். இவ்வளவு நீண்ட விளக்கங்களுடன் இந்தக் கட்டுரையை தொடங்குவதற்குக் காரணம், இன்று தமிழ்நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற எண்ண அலைகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதுதான். பல அழுத்தங்களின் காரணமாகவும், எந்தவிதத்திலும் பதவியைப் பறி கொடுத்து விடக்கூடாது என்ற ஒற்றைச் சுயநல நோக்கோடு செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், பல அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அரசாங்கம் எடுக்கும் எல்லா முடிவுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமும், நிர்பந்தமும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்கள் போராடத்தான் செய்வார்கள். அமைதியாகப் போராடுவது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறையின் பல செயல்பாடுகள் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போல இருப்பதாக அழுத்தமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எதிர்ப்பைக் காட்டுவோர் தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். அரசியல் சட்டப்பிரிவு 19இல் வழங்கப்பட்டுள்ள பேச்சு, கருத்து சுதந்திரம், ஆயுதங்கள் ஏதுமில்லாமல் கூடும் உரிமையும் போகிற போக்கில் பறிக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் காவல்துறை கையாண்ட அடக்குமுறை கண்டனத்துக்குரியது. சிங்கள ராணுவத்தால், கொத்துகொத்தாகப் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி நடத்த ‘மெழுகுவத்தி’ என்ற பயங்கர ஆயுதத்தை ஏந்தி வந்ததற்காக திருமுருகன் காந்தியும், அவரது தோழர்களும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மூன்று போகம் விளைந்த டெல்டா மாவட்டங்கள் இன்று காவிரி நீரின்றி பாலைவனமாக மாறி விட்டன. மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம்’ என்ற நோக்கில் நிலத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும் செயல்களில் அசுரத்தனமாக இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இதைத் தட்டிக்கேட்க தைரியமில்லாமலிருக்கிறது மாநில அரசு.
நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் போராடும் மக்கள்மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. பயமுறுத்தி போராட்டத்தை அடக்கும் நோக்கில் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ‘எதிர்ப்பைத் தெரிவிக்க ஒன்று கூடுவோம்’ என்று துண்டு பிரசுரம் கொடுத்த மாணவி வளர்மதி குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது அத்துமீறலின் உச்சம். ‘இது என்ன அநியாயம்’ என்று ஜனநாயக ஆர்வலர்கள் குரல் கொடுத்தால் அவர்மீது வேறு பல வழக்குகள் இருப்பதாகச் சொல்கிறது காவல்துறை. இதுபோன்ற காரணங்களுக்காக, ஒருவரை குண்டாஸில் போடலாம் என்றால், இன்று மாநிலத்திலும், மத்தியிலும் அதிகாரத்தில் இருக்கும் பலர் குண்டாஸில் உள்ளே போவதற்குத் தகுதியானவர்களே. அவர்கள்மீது வளர்மதிமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைவிடக் கடுமையான குற்றச்சாட்டுகள் உண்டு. வளர்மதி கைதைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாணவர்களை ஒருங்கிணைத்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் குபேந்திரனும் கைது செய்யப்படுகிறார். டாஸ்மாக் கடைகளை எதிர்த்துப் போராடும் பெண்கள் காவல்துறையின் தடியடிக்கு உள்ளாகிறார்கள்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒரு பெண்மணியை கன்னத்தில் அறையும் காட்சி தொலைக்காட்சி சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி லட்சக்கணக்கான மக்கள் பார்த்தார்கள். அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுத்து கௌரவித்ததிலிருந்தே, இந்த அரசுக்குக் காவல்துறைமீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சலில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். பல துறைகளைச் சார்ந்தவர்கள்மீதும் காவல்துறையின் சட்ட விரோத நடவடிக்கைகள் பாய்ந்திருக்கின்றன. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. ‘அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை யாரும் ஜனநாயக வழியில் எதிர்க்கக் கூடாது; போராடுவதற்கு ஒன்றுசேரக் கூடாது; அப்படி நடக்க முயற்சித்தால் அடக்குமுறை அரங்கேறும்’ என்பதுதான் அந்தச் செய்தி. இப்படி கைதுகள் நடக்கும்போது பாஜக-வினர் ‘காவல்துறை நடவடிக்கை சரியே’ என்று பேசுவது குறித்து ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. பண மதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. போன்ற பல பிரச்னைகளில் மத்திய அரசும் கல்லடிப்படும்போது பாஜக-வினர் பதற்றப்பட்டு ‘தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புகொண்டவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள்’ என்று கூறுவது இயல்பானதுதான்.
உட்கட்சி பிரச்னைகளாலும், சுமந்துகொண்டிருக்கும் ஊழல் மூட்டைகள் காரணமாகவும் மத்திய பாஜக ஆட்சிக்கு அடங்கிப் போக வேண்டிய நிலையில் எடப்பாடி அரசு இருப்பது பாஜக-வுக்கு தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வசதியாக இருக்கிறது. போராட்டங்களை ஒடுக்குவதில் மாநில அரசு காட்டும் சுறுசுறுப்பு மத்திய அரசைத் திருப்திப்படுத்தும் வகையில் இருப்பதால் அத்துமீறல்கள் ரசிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன.
மாநில அரசு சகட்டு மேனிக்கு குண்டாஸைப் பயன்படுத்துவது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 1982இல் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கைதுசெய்ய கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் காலப்போக்கில் போதை மருந்து கடத்துபவர்கள், வனவளத்தைச் சுரண்டுபவர்கள், விபசாரத்தில் ஈடுபடுபவர்கள், நில அபகரிப்பாளர்கள் மற்றும் திருட்டு விசிடி விற்பவர்கள் ஆகியோரும் சேர்க்கப்பட்டார்கள். இந்தச் சட்டத்துக்குள் ‘குண்டாஸ்’ என்ற வார்த்தையும் இடம்பெற்றிருக்கிறது. பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும்வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவரைத்தான் குண்டாஸ் சட்டத்தில் உள்ளே போட வேண்டும். வளர்மதி கைது விவகாரத்தைப் பார்க்கும்போது, ‘பொது அமைதியைக் கெடுப்பது’ என்ற வார்த்தைப் பிரயோகத்துக்குக் காவல்துறை பார்வையில் ‘ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்துவது’ என்று பொருள் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ‘இது போன்ற சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன’ என்று உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆனாலும் குண்டாஸ் தவறாக கையாளப்படுவது தொடர்கிறது. ஒரு வழக்கில் முழு விசாரணை நடத்திக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காலதாமதமாவதால், அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களை ‘உள்ளே’ வைக்க காவல்துறைக்குக் குண்டாஸ் கைகொடுக்கிறது. மேலும் நியாயமாக அறவழியில் போராடுபவர்களைப் பயமுறுத்தி ஒடுக்க ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
திருமுருகன் காந்தி, வளர்மதி ஆகியோர் மீது போடப்பட்ட குண்டாஸை எதிர்த்து தமிழகத்தில் ஒன்றுபட்ட குரல்கள் வலிமையாக வராத நிலையில் அத்துமீறல்கள் தொடர்கின்றன. ஜனநாயக வழியில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குலைக்க காவல்துறை முயற்சி செய்தது. கட்சிக்காரர்கள் தூர் வாரிய ஏரியைப் பார்க்கவிடாமல் எதிர்க்கட்சித் தலைவர் தடுக்கப்படுகிறார்; கைது செய்யப்படுகிறார். (நீதிமன்றம் தலையிட்டு இப்போது அனுமதி கொடுத்திருக்கிறது) ஒரு பலமான எதிர்க்கட்சியே தனது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றப் போராட வேண்டிய நிலையிலிருக்கிறது. எனவே மற்ற அமைப்புகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவை அடக்குமுறைக்கு ஆளானால், தட்டிக்கேட்க ஆளிருக்காது. இந்தச் சூழலில்தான் ஜனநாயக நெறிகளையும், அத்துமீறல்களையும் எதிர்த்துப் போராட மற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.
ஒவ்வோர் இயக்கமும் தனியாகப் போராடினால் பயனிருக்காது. சில இயக்கங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ இன்று அடிப்படை கட்டுமானத்துடன் பலமான அரசியல் இயக்கமாக இருப்பது திமுக மட்டுமே. எனவே, ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றுவதற்காக திமுக தலைமையில் என்றுகூட இல்லாமல் ஒரு தோழமையாக இணைந்து ஜனநாயக வழியில் அறப்போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதை ஒரு குறைந்தபட்சத் திட்டமாக திமுக-வை ஏற்காத கட்சிகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் கூட்டணித் தொடர்பாக கட்சிகள் எந்த முடிவுகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அடிப்படை உரிமைகளைக் காக்க இந்த நடவடிக்கை உடனடி தேவையாக இருக்கிறது. பலவீனமான மாநில அரசை எதிர்த்து இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாடு தேவையா என்ற கேள்வி எழக்கூடும். ஆனால், முதல் பத்தியில் சொல்லப்பட்ட காரணங்களைத் தவிர, இந்த மாநில அரசு அரசியல் சூழல் காரணமாக ஒரு பலமான மத்திய அரசின் ‘கைக்குள்’ அடங்கியிருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக