ஞாயிறு, 30 ஜூலை, 2017

விடுதலை சிறுத்தைகள் :திமுக-வுடன் இணைந்துச் செயல்படுவோம்!

திமுக-வுடன் இணைந்துச் செயல்படுவோம்!‘கதிராமங்கலம் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்னைகளுக்காக திமுக-வுடன் இணைந்துச் செயல்படுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலனின் தாயார் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், “மாற்றம் வேண்டும் என்று கூறும் திருமாவளவன் எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத்கீதை இடம் பெறுகிறது என்றால் அது மதவாதத்தைத் திணிக்கும் செயல். உலக புகழ்பெற்ற திருக்குறள் அப்துல் கலாம் நினைவிடத்தில் இடம்பெறவில்லை” என்று கூறினார்.

இதுகுறித்து நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ஸ்டாலினுடைய அழைப்பு எனக்கான அழைப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கான அழைப்பு. தமிழக அரசியல் தற்போது ஒரு நிலையற்ற சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் நிகழலாம். பாஜக-வைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவர் தேர்தல் வரை பொறுமையாக இருக்கும். அதன்பிறகு தமிழக அரசை நிலைகுலையச் செய்யும் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழக அரசியலில் தற்போது ஓர் அமைதியான சூழல் நிலவுகிறது. இருந்தாலும்கூட எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலை உள்ளது. ஆகவே தமிழக அரசியல் சூழல் மாறும்போது எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை கூறுவோம்.
தற்போதைய சூழ்நிலையில் திமுக-வோடும் மற்ற எதிர்க்கட்சிகளோடும் மக்கள் பிரச்னைக்காக இணைவதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. எனவே இணைந்தே இயங்குவோம். நீட் தேர்வைப் பொறுத்தவரை திமுக சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டோம். அதேபோல கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்காக திமுக-வுடன் இணைந்துச் செயல்படுவதில் எங்களுக்குத் எந்தத் தயக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக