செவ்வாய், 18 ஜூலை, 2017

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு இலவச தொழிற்கல்வி கொடுத்த கலைஞர்!

2006-07-ஆம் கல்வியாண்டில்தான் எங்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப் பள்ளியானது. நாங்கள்தான் பள்ளியின் முதல் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது.
நானும் ஏக்கிமுத்துவும் பள்ளியிலே இணைபிரியா நண்பர்கள். அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வோம். ஆனால் பிரிந்ததில்லை. அந்தளவிற்கானது எங்கள் நட்பின் ஆழம்.
2008-ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தோம். நானும் நண்பனும் ஏறத்தாழ 80 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருந்தோம். இருவருக்குமே பொறியியல் படிப்பதே லட்சியம்.
ஏக்கிமுத்துவின் அப்பாவோ, மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி. என் அப்பாவோ தறி ஓட்டுகிறவர். இருவருக்கும் இருந்த பொறியியல் படிப்பென்பது பேராசைதான். இருந்தாலும் வீட்டிலே எடுத்துச் சொன்னோம். அப்போதெல்லாம் கல்விக்கடன் வாங்குவதற்கு வங்கிகளில் அடமானத்திற்கு பத்திரங்களைக் கொடுக்கவேண்டும். எங்கள் வீட்டில் பத்திரம் வைத்துக் கொள்கிற அளவிற்குக் காணி நிலம்கூட சொந்தமாகக் கிடையாது. குடியிருக்கக்கூட வாடகை வீடுதான். அந்த நிலையில் வீட்டில் பொறியியல்தான் படிப்பேன் என்று குடும்ப சூழ்நிலையறியாமல் அடம்பிடித்தேன்.
பொறியியல் சேர்க்காத விரக்தியில் நானோ வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டேன். பக்கத்து வீட்டு மாமா எதேச்சையாக வந்து பார்க்காமலிருந்திருந்தால் அடுத்த சிலநொடிகளில் மடிந்திருப்பேன். மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். ஒருவார காலம் சுயநினைவு கூட இல்லாமல் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு, பின்னர் நலமடைந்து வீடு திரும்பினேன்.
அதற்குப் பின்னும் வெகுசிரமப்பட்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றிலே நான் சிவில் இன்சினியரிங் பிரிவில் சேர்ந்தேன். அதே கல்லூரியில் ஏக்கிமுத்துவும் ஊஊஊ பிரிவில் சேர்ந்தான். நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்பட்ட நாங்கள் மூன்றாம் ஆண்டை நோக்கி நன்றாகவே படித்துக் கரைசேர்ந்து கொண்டிருந்தோம்.
ஏக்கிமுத்துவின் தங்கையும் பனிரெண்டாம் வகுப்பை முடித்து கல்லூரிப் படிப்புக்கு ஆயத்தமானாள். ஒரு பிள்ளையைத்தான் ஒரு வருடத்திற்கு கல்லூரிப் படிப்பைப் படிக்க வைக்கமுடியுமென்று சொல்லி ஏக்கிமுத்துவின் தங்கையின் கல்லூரிப் படிப்பை காத்திருப்போர் பட்டியலில் வைத்தார் அவன் தந்தை.
வெகுசிரமப்பட்டுக் கல்லூரியிலே சேர்ந்த நான், குடும்ப வறுமை காரணமாக, பாலிடெக்னிக் கல்லூரிப் படிப்பை இரண்டாம் ஆண்டோடு நிறுத்தவேண்டியதாயிற்று. என் வாழ்க்கை அத்தோடு வெறுமையானது?.
ஏக்கிமுத்து பாலிடெக்னிக் படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியேவந்தான்.
ஏதாவதொரு  தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என வேலை தேடிக் கொண்டிருந்த நேரத்தில், அப்போதைய தமிழக அரசு, ஏழைக் குடும்பங்களில் இருந்து பொறியியல் படிக்க விரும்பும் “முதல் பட்டதாரி’ மாணவ மாணவியருக்கு கல்விச் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றொரு அறிவிப்பை வெளியிட்டது.
அதே நேரத்தில் நாங்கள் படித்த பாலிடெக்னிக் கல்லூரியும் கூட, புதிதாக பொறியியல் கல்லூரியைத் தொடங்கியிருந்தது. ஏக்கிமுத்து பாலிடெக்னிக்கிலும் நன்றாக படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவன் என்பதால், கல்லூரி நிர்வாகம் அரசாங்க அறிவிப்பை எடுத்துக் கூறி, அவனைத் தங்கள்  பொறியியல் கல்லூரியிலேயே சேர்த்துக்கொண்டது.
ஏக்கிமுத்து பொறியியல் படிப்பையும் சிறப்பாக முடித்து, கல்லூரி அருகே இயங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டுக் கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்தான். அந்த நிறுவனமே சில மாதங்களில் அவனை வெளிநாட்டுக்கும் அழைத்துச் சென்றது.
முதல் பட்டதாரி திட்டத்திலே படித்த என் நண்பன் ஏக்கிமுத்து இப்போது வெளிநாட்டிலே மாதம் லட்சத்தை நெருங்கிச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான். இப்போதும் அவன் தந்தை மூட்டை தூக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்போது சுமந்த பொருளாதாரச் சுமையை இப்போது சுமக்கவில்லை. ஏக்கிமுத்துவின் குடும்பத்தில் தங்கை, தம்பி என இப்போது மேலும் இரண்டு பட்டதாரிகள் வந்துவிட்டார்கள். ஏக்கிமுத்துவும் கூட சிலநேரங்களில் “முதல் பட்டதாரி திட்டம் வந்ததால்தான் நானும் கூட பொறியியல் படிக்க முடிந்தது’ எனப் பெருமைகொள்வான்.
சிலநேரங்களில் அரசாங்கங்கள் கொண்டு வருகிற திட்டங்கள் தனிப்பட்டதொரு குடும்பத்திற்கே இவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதென்றால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த “முதல் பட்டதாரி’ திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு இலவச தொழிற்கல்வி என்ற திட்டத்தைக் கொண்டு வந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்திய கலைஞர் அரசைக் கண்டு வியக்கிறேன்.
nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக