வியாழன், 6 ஜூலை, 2017

புதுச்சேரி .. பறிபோகும் மாநில சுயாட்சி உரிமைகள் .. கிரண்பேடியின் அடாவடி

அருண் நெடுஞ்செழியன்: மேற்கு வங்காள மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், பாஜக ஆளுநர்கள் தங்களின் ஆட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய பாஜக அதிகார மையத்திற்கும் பாஜக அல்லாத மாநில அதிகார மையத்திற்குகமான மோதல் நாளுக்கு நால் தீவிரப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுனர் கிரண் பேடிக்குமான மோதலும், மேற்கு வாங்க முதல்வர் மம்தாவிற்கு திரிபாதிக்குமான மோதலும் வேகமாக வெளிப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வருகிற சில நாட்களில் ஆளுனர் கிரண் பேடியின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி, ஆளுநர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் மத்திய ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இவ்வகையான சிக்கல் இல்லை. ஏனெனில் வடிவேலு நகைச்சுவை போல “படுத்தேவிட்டானய்யா”  கதையாக நெடுஞ்சாங்கடையாக பாஜகவின் காலில் எடப்பாடி அரசு விழுந்து கிடைக்கிறது. மத்திய அரசின் மாநில அங்ககக் கட்சியாக செயல்பட்டு வருகிறது.
அறுபதாண்டுகளாக மத்தியில், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோது மேற்கொண்ட மாநில உரிமை பறிப்பை, மைய அதிகார குவிப்பு அரசியலின் மறுபதிப்பை தற்போது பாஜக மேற்கொண்டு வருகிறது.
மேலும், வரி வசூலிப்பு அதிகாரத்தை கூட மாநில அரசுகளிடம் இருந்து ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை பறித்துவிட்டது. ஜி. எஸ்.டி. கவுன்சில் என்ற மைய அதிகார மையம் மட்டுமே, இனி மறைமுக வரி வருவாய் மீது செல்வாக்கு செலுத்துகிற சர்வாதிகார நிர்வாக அலகாக செயல்படும்.
மாநில அரசின் சுயாட்சி உரிமைகள், உலகமயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சில சமயங்களின் தடையாக உள்ள காரணத்தால், 90 களின்
தொடக்கம் தொட்டே, மத்திய அரசின் மைய அதிகார குவிப்பு நடவடிக்கைகள் மாநில அதிகாரங்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியது.
பிராந்தியக் கட்சிகளோ மைய அரசின் உலகமய கொள்கை அமலாக்கத்தில் கரைந்து, சர்வதேச முதலாளிகளுடன் இணைந்து தேசவளத்தை சூறையாடிக் கொழுத்தனர். இந்திய அளவில் மாநில உரிமை, மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்த திமுக, ஒருகட்டத்தில் தேசிய கட்சிகளின் அங்கமாக மாறியது.
தனதுகடந்த கால “கொள்கை சமரசங்கள்” நிகழ்கால வாய்ப்பிற்கு தடையாகி உள்ளது.
மைய அரசின் அதிகார குவிப்பிற்கு எதிரான போராட்ட சக்தியாக தன்னை நிறுவக் கொள்ள ஸ்டாலின் முயன்றாலும் திமுகவின் இந்த மறுவருகை அரசியல் மக்களிடம் எடுபடவில்லை. அறுபதுகளில் திமுக ஒரு ரெபெல் சக்தியாக மக்கள் நம்பினார்கள். இன்று மக்கள் நம்பத் தயாராக இல்லை.
நாட்டின் ஒற்றை அதிகார மையமாக பாஜக வளர்வது என்பது ஒரு வகையில் இந்திய ஆளும் வர்க்கமானது தனக்கான சவக்குழியை வேகமாக தோண்டுவதற்கு ஒப்பாகும். நாட்டின் அரசியல் பொருளாதார முடிவுகள் கூடவே மத அடிப்படைவாத சர்வாதிகார ஆட்சியானது, அரசின் மீதான மக்களின் நல்லெண்ணங்களை ஒரே அடியில் அடித்து நொறுக்கி வருகிறது.
இந்திய முதலாளித்துவ ஆட்சியின் அவலங்களை வேகமாகவும் ஆழமாகவும் மக்களிடம் எடுத்துச் செல்வதும், உழைக்கும் வர்க்கத்தையும், இளைஞர்களையும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒன்றுபடுத்துவது மட்டும்தான் இன்று நம்முன் உள்ளே ஒரே முதனமையான பணியாகும்.
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.  thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக