புதன், 26 ஜூலை, 2017

பாஜகவில் பன்னீர்செல்வம் அணி இணைய டெல்லி நெருக்கடி!

Raj o Oneindia Tamil   சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் ஓபிஎஸ் அணி இணைய வேண்டும் என டெல்லி நெருக்கடி கொடுப்பதால் தமிழகம் முழுவதும் இது தொடர்பாக ஆதரவாளர்களிடம் திடீரென ரகசியமாக கருத்து கேட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. டெல்லியில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறப்பட்டு வர அழைப்பு வந்தது. டெல்லியில் முகாமிட்டு ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் மைத்ரேயனுடன் இணைந்து மோடியை தனியாக சந்தித்தார். இச்சந்திப்புகளுக்குப் பின்னர் பாஜகவில் இணைவது தொடர்பாக ஆதரவாளர்களிடம் ரகசியமாக ஓபிஎஸ் கருத்து கேட்டு வருகிறார். பாஜகவில் கூண்டோடு இணைய நெருக்கடி கொடுக்கப்படுவதால்தான் கருத்து கேட்பதில் ஓபிஎஸ் அவசரம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் ஓபிஎஸ் பாஜகவில் இணையும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை முதலில் சந்தித்து காலூன்றிவிடலாம் என்பதுதான் பாஜகவின் கணக்காம். இதற்காகவே இந்த நெருக்கடி கொடுக்கப்படுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாஜக மற்றும் ஓபிஎஸ் அணியின் இந்த திடீர் நகர்வுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும். ஓபிஎஸ்ஸை பாஜகவின் தமிழக முகமாக மாற்றும் முயற்சியை கட்சி நிர்வாகிகள் ஏற்பார்களா? தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்து வரும் பாஜகவின் முகமாக ஓபிஎஸ் மாறுவதை மக்கள் ஏற்பார்களா? என்ற கேள்வியும் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களிலும் நாட்டின் பிற மாநிலங்களிலும் கட்சிகளை கபளீகரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் பாஜகவின் பாணி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக