வியாழன், 6 ஜூலை, 2017

மோடி அரசின் சானிடரி நாப்கின் துரோகம் .. இலவசமாகவே வழங்கவேண்டும் .. அநியாய வரி !

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எதிரிகள் கூட இன்றுவரை பாராட்டும் இலவச சானிடரி நாப்கின் திட்டமும் விரைவில் நீர்த்து போகச்செய்யும் முயற்சிகளை மோடியின் அதிமுக அரசு மேற்கொள்ளும்?  . Hariharasuthan Thangavelu சாமியார்கள் அரசும், சானிட்டரி நாப்கின் துரோகமும் :
GST வரி விதிப்பு நல்லதா கெட்டதா என்ற முடிவு தெரிய இன்னும் சிலகாலம் ஆகும் என்றாலும் பொருட்களுக்கான வரி நிர்ணயம் செய்ததில் ஒரு வரலாற்று கேனத்தனத்தை மத்திய அரசு நிகழ்த்தியுள்ளது என சர்வ நிச்சயமாக இப்போதே கூறலாம். 
பூஜை சாமான்கள், பிரசாதங்கள், காந்தி தொப்பி என வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாத பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்த அரசு, பெண்கள் மாதவிலக்கின் போது பயன்படுத்த கூடிய சானிட்டரி நாப்கின்களுக்கு 12% வரி விதித்துள்ளது, ஏற்கனவே சந்தையில் 150 முதல் 200 வரை ஏக விலையில் விற்று கொண்டிருந்த நாப்கின்கள் இதன் மூலம் 20 ரூபாய் முதல் 25 வரை மேலும் விலையேற்றம் அடைந்துள்ளது.
என்னடா 20 ரூபாய் விலையேற்றியதில் பெண்கள் வாழ்க்கை அழிந்து விட போகிறதா என நினைத்து விடாதீர்கள், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களை தான் இந்த விலையேற்றத்தின் பாதிப்பு அதிக அளவில் இருக்கும், ஒவ்வொரு கிராமப்புற பள்ளிகளிலும் மாதத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வகுப்பிற்கு வராத எத்தனையோ மாணவிகளும் மாதம் 200 ரூபாய் செலவு செய்து தனக்கு சானிட்டரி நாப்கின்கள் வாங்க முடியாத எத்தனையோ பெண்களும் இன்றும் உள்ளனர்.


Community development org plan India வின் 2011 ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் உள்ள 60 கோடி பெண்களில் 35 கோடி பெண்கள் மாதவிடாய் வயதில் உள்ளவர்கள், இவர்களில் வெறும் 12 சதவீத பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்கள் வாங்கும் நிலையில் உள்ளனர், மிச்ச 88 % பெண்கள் துணி, சாம்பல் போன்ற பொருட்களைத்தான் இன்னும் பயன்படுத்துகின்றனர், இதற்க்கு காரணம் அதன் விலை, மாதம் 200 ரூபாய்க்கு ரேஷனில் பொருள் வாங்கி வாழ்க்கை நடத்தும் இவர்களால் எப்படி அதே விலை கொடுத்து நாப்கின்களை வாங்க முடியும்,

இது போல வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவிகள் நிலை இன்னும் துயரம், மாதத்திற்கு மூன்று நாட்கள் லீவு எடுத்து எடுத்து ஒரு கட்டத்தில் படிப்பே வேண்டாம்டா சாமீ என உதறி தள்ளி விலகிய மாணவிகள் எதனை சதவீதம் தெரியுமா 23 % , படிப்பை விடுங்கள், இந்தியாவில் படித்தால் மட்டும் பெண்களை மதித்து விட போகிறோமா என்ன ? நாப்கின்களுக்கு மாற்றாக சுகாதாரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் ( Urinary and Reproduction tract infection - UTI, RTI ) என பல்வேறு நோய் தாக்குதலுக்கும் பெண்கள் ஆளாகியுள்ளனர். அப்படியே நோய் தாக்கினாலும் விவசாயம் அழிந்து போய் சாவதற்கு விஷம் கூட வாங்க வழியில்லாமல் இருக்கும் தந்தையிடம் போய் எப்படி தன நிலை சொல்லி நாப்கினுக்கு காசு கேட்பாள் மகள், ஆக ஆரோக்யத்தைவிட தன் குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரம் தான் இப்பெண்களிடத்தே முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போது சொல்லுங்கள் சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விதிப்பு அவசியமா ! அதும் முதல் நிலை வரிவிதிப்பான 5 % விட இரண்டாம் நிலை வரிவிதிப்பு 12 % கொண்டு செல்லும் அளவுக்கு நாப்கின்கள் என்ன அவ்வளவு ஆடம்பர பொருளா ? இந்த வரியை எதிர்த்து காங்கிரஸ் எம்பி சுமடா தேவ் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் குரல் எழுப்பாமல் இல்லை, ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கும் நாப்கின்கள் மீதான வரிவிலக்கு கோரிக்கைக்கும் அருண் ஜெட்லீ தந்த அற்புத பதில் என்ன தெரியுமா , " இது அரசுக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று இவர்களுக்கு தெரியாது என்பது தான் ", இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், தங்கத்திற்கும் வைரத்திற்கும் சலுகை வரி விதிப்பான தலா 3 % , 0.25 % விதித்ததில் வராத வரி இழப்பு, கடவுள் பெயரில் கல்லா கட்டும் ப்ரசாதத்திற்கும் பூஜை சாமான்களும் இலவச வரி விதித்ததில் வராத இழப்பு எப்படி நாப்கின்களுக்கு இலவச வரி விதிப்பதால் ஏற்பட போகிறது என்பது மோடிக்கும் அருணஜெட்லீக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.

இந்த பதிவின் நோக்கம் ஜிஎஸ்டியை சாடுவதோ மோடியை எதிர்ப்பதோ கிடையாது, ஏற்கனவே அதிக விலையில் விற்கும் நாப்கின்களுக்கு வரி விதித்து ஏன் இன்னும் விலைஏற்றியிருக்கிறீர்கள், சொச்சு பாரத் திட்டம் மூலம் நாட்டின் தூய்மையை மேம்படுத்த நினைக்கும் அரசு, நாட்டு மக்களின் ஆரோக்யத்தில் மட்டும் காசு பார்க்க நினைப்பது ஏன்? காண்டம்களுக்கும் கருத்தடை மாத்திரைகளும் வரி விலக்கு அளிக்க எடுத்த முடிவு கன்னியரின் ஆரோக்யத்தை கருத்தில் கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பவதே ஆகும். காந்தி தொப்பிக்கு வரி விலக்கு அளித்திருக்கிறது மத்திய அரசு, அட்டகாசம், தேகமெங்கும் நாட்டுப்பற்று தெறித்து சிலிர்க்கிறது, காந்தி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயம் வெறும் தொப்பி மட்டும் அவருக்கு தேவைப்பட்டிருக்காது,

குங்குமத்திற்கும், வளையலுக்கும் வரிவிலக்கு அளித்திருக்கிறீர்கள், அருமை , ஆனால் பாரம்பரியத்தை விட பாதுகாப்பான நோயற்ற சமூகம் தான் மக்கள் தேவை என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள் ? ஒவ்வொரு திட்ட அறிவிப்பின் போதும் மக்களுக்காக ஒரு புதிய இந்தியா பிறந்ததாக பூரிக்கிறீர்கள் , மகிழ்ச்சி, ஆனால் என்று நியாய விலைக்கடைகளில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படுகிறதோ அன்று தான் மகளிருக்காகவும் ஒரு புதிய இந்தியா உண்மையில் பிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக