அப்துல் கலாம் சிலையருகே வைக்கப்பட்ட இரண்டு புனிதநூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு எனுமிடத்தில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம், அப்துல்கலாமின் இரண்டாமாண்டு நினைவுதினமான ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நினைவுமண்டபத்தில் அப்துல்கலாம் வீணை வாசிப்பதைப் போன்ற சிலை உள்ளது. அதன் அருகே பகவத் கீதை இடம்பெற்றிருந்தது. சமயங்களுக்கு அப்பாற்பட்ட அப்துல் கலாம் அருகே இந்து சமய நூலான பகவத் கீதையை வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என அரசியல் கட்சித்தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் விமர்சித்தனர்.
இந்நிலையில் இன்று காலை அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம், அப்துல் கலாமின் சிலை அருகே பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை வைத்தார். அனுமதியின்றி அந்த புத்தகங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த இரண்டு புனித நூல்களும் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவை அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தில் உள்ள கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக