வியாழன், 20 ஜூலை, 2017

BBC :கத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது செளதி கூட்டணி;

தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்க்க உறுதி பூணுவது, ஆத்திரமூட்டல் மற்றும் தூண்டுதல் செயல்களை கத்தார் முடிவுக்குக் கொண்டுவருவது போன்றவை இந்த கோரிக்கையின் முக்கிய அம்சங்களில் அடங்கும்.. தீவிரவாதிகளுக்கு உதவுவதாகக் கூறப்படுவதை மறுத்து வரும் கத்தாரிடம் இருந்து இதற்கு உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை. தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது.


மேலும் அண்டை நாடுகள் விதித்துள்ள தடைக்கு கண்டனமும் தெரிவித்தது. மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய கத்தார் இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், ஆறு வாரங்களுக்கு முன்பு அண்டை நாடுகள் விதித்த தடையால், கத்தார் வான் மற்றும் கடல் வழியாக 2.7 மில்லியன் மக்களுக்கான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய நான்கு அரபு நாடுகளில் ராஜீய அலுவலர்கள், இந்த நெருக்கடியினை இணக்கமாகத் தீர்த்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர்.

 ஜூலை 5-ம் தேதி கெய்ரோவில் நடந்த சந்திப்பின் போது, ஆறு கொள்கைகளை செளதி கூட்டணி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதாகவும், கத்தார் அதற்கு உடன்படுவது எளிதானது என்றும் செளதி அரேபியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி அப்துல்லா அல்-மெளலிமி தெரிவித்தார். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக பேரிடுதல், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் அளிக்க மறுப்பது, வெறுப்பு, வன்முறையினை தூண்டுவதை நிறுத்துதல் மற்றும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துதல் போன்றவையே கொள்கைகளாக வைக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

தாங்கள் முன்வைத்துள்ள கொள்கைகளில் எவ்வித ``சமரசமும் கிடையாது``. ஆனால், இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து இரு தரப்பினரும் விவாதிக்கலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் அனைத்து வலையமைப்பினையும் நிறுத்துவது, துருக்கி ராணுவ தளத்தினை மூடுவது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான தொடர்பை முறித்துக்கொள்வது, இரானுடனான உறவுகளைக் குறைப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் ஜூன் 22-ம் தேதி கத்தாரிடம் அளிக்கப்பட்டது. அல் ஜசீராவை மூடுவது அவசியமில்லை என்றாலும் வன்முறையைத் தூண்டுவது மற்றும் வெறுக்கத்தக்கப் பேச்சினை அல் ஜசீரா நிறுத்துவது அவசியமான ஒன்று என செளதி பிரதிநிதி கூறினார்.

`அல் ஜசீராவை மூடாமலே இதனைச் செயல்படுத்த முடியும் என்றால், அதுவும் நல்லதே. நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் இடம்பெற்றிருக்க என்பதே முக்கியமான விஷயம்`` என அசோசியேடட் பிரஸிடம் அவர் கூறியிருக்கிறார். ``நமது பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அல்லது தீவிரவாதத்தை தடுக்கும் முக்கிய கொள்கைகளை கத்தார் ஏற்க விரும்பவில்லை என்றால், நிலைமை கடினமானதாக இருக்கும்``என வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் கத்தார் தொடர்ந்து இருப்பதைப் பற்றி குறிப்பிட்டு ஐக்கிய அரபு எமிரேட்டின் நிரந்தர பிரதிநிதி லானா நுஸ்ஸிபே கத்தாரை எச்சரித்துள்ளார்.

அண்டை நாடுகளால் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு உதவியதை கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், ஐ.எஸ் மற்றும் அல்-கய்தா போன்ற ஜிகாதி குழுக்களுக்கு உதவுவதாக் கூறப்படும் குற்றச்சாட்டினை கத்தார் மறுக்கிறது. ``இந்த கட்டத்தில், காய் நகர்த்த வேண்டியது கத்தார்தான்`` என ஐக்கிய அரபு எமிரேட்டின் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ரீம் அல் ஹாஷிமி கூறுகிறார்.

 அமைதித் தீர்வுக்கு பங்களிக்கும் அமெரிக்கா ``தற்போதைய நெருக்கடிக்கு ஓர் அமைதியான தீர்வை உருவாக்கும் வகையில், அமெரிக்கா மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது`` என அவர் கூறினார். கத்தார் மீது அழுத்தங்கள் கொடுப்பதற்கான புகழை விரைவாகத் தனதாக்கிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்,`` தீவிரவாத அச்சுறுத்தலின் முடிவுக்கான தொடக்கம் இது`` என கூறியுள்ளார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நிபந்தனை பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், அதில் உள்ள சில கூறுகளை நிறைவேற்றுவது, ``கத்தாருக்கு கடினமான ஒன்று`` என ஒப்புக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக