திங்கள், 31 ஜூலை, 2017

நிலநடுக்கப் பாதிப்பில் 29 இந்திய நகரங்கள்!

இந்தியாவில் டெல்லி உட்பட 29 நகரங்கள் நிலநடுக்கப் பாதிப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
தேசிய நிலநடுக்க இயல் மையத்தின் தகவலின்படி இந்தியாவின் 29 நகரங்கள் நிலநடுக்கப் பாதிப்பு மண்டலங்களின்கீழ் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்பது மாநிலங்களின் தலைநகரங்களும் வருகின்றன.
மேலும், பெரும்பாலான நகரங்கள் இமயமலையை ஒட்டிய பகுதிகளாக உள்ளன. உலகளவில் இப்பகுதியில் அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, பாட்னா, ஸ்ரீநகர், கொஹிமா, புதுச்சேரி, கவுஹாத்தி, கேங்டாக், சிம்லா, டெஹராடூன், இம்பல், சண்டிகார்க் போன்ற முக்கிய நகரங்கள் உள்ளன. இவற்றின் மக்கள்தொகை மட்டும் மூன்று கோடியைத் தாண்டும்.
நிலநடுக்கத்தின் பதிப்புகளை வைத்து இந்தியப் பகுதிகள் மண்டலம் இரண்டு முதல் மண்டலம் ஐந்து வரையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் ஐந்து என்பது பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாகும். மொத்த வடகிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவற்றின் சில பகுதிகள், வடக்கு பீகார், அந்தமான் மற்றும் நிகோபார் ஆகியவை அதிக பாதிப்பு உள்ள பகுதிகளின்கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது 84 நிலநடுக்கக் கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக 31 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளரான ராஜீவன் தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக