செவ்வாய், 20 ஜூன், 2017

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம் .... பட்டுகோட்டை நீங்காத நினைவுகள் paddukotai neengatha ninaivugal

மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இந்த ஆவணப்படம் ஏனோ தெரியவில்லை மக்களை சரியான முறையில் இன்னும் சென்று அடையவில்லை.. இந்த  ஆதங்கத்தில் அதை இங்கு மீண்டும் பதிவு செய்துள்ளோம் 
பட்டுக்கோட்டையில் இருந்து வடக்கே திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் சாலையின் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 'சங்கம் படைத்தான்காடு' என்னும் சிற்றூர். இங்கு அருணாசலம்பிள்ளை - விசாலாட்சி தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம். ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த கல்யாணசுந்தரம் உள்ளூர் திண்ணைப் பள்ளியில் மூன்றாவது வகுப்பிற்கு மேல் படிக்க வசதியும் வாய்ப்பும் இல்லாததால், ஏழெட்டு வயதிலேயே வயலில் இறங்கி ஏர் உழவேண்டிய நிலை ஏற்பட்டது. தகப்பனாரான அருணாசலம் பிள்ளை பிழைப்புத்தேடி சிங்கப்பூர் சென்றுவிட்டார். அவர் 'இயற்கைப்புலமை' பெற்றிருந்தார். அதைக்கொண்டு 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்மி' என்னும் தலைப்பில் கவிதைகள் - பாட்டுகள் இயற்றி அவற்றை ஒரு நூலாக அங்கு வெளியிட்டார்.
இளமையிலேயே முறையான கல்வி அறிவு பெறாத கல்யாணசுந்தரம், தந்தை 'மரபணு' மூலம் பெற்ற கவிதை அறிவு உதிரத்தில் பெருக்கெடுத்து ஓடியதால், 'எழுத்து', 'சொல்', 'பொருள்', 'யாப்பு', 'அணி' என்னும் ஐந்து பகுதியான
ஐந்திலக்கண வரம்பு முறைக்கெல்லாம் அப்பாற்பட்டு, எதுகை மோனையை மட்டும் பிடித்துக்கொண்டு அதை வைத்து தனது கற்பனையில் தோன்றியவாறு 'இட்டுக்கட்டிப்பாடுதல்' என்னும் பழைய வழியைப் பின்பற்றிப் பாடல்களை எழுதுகோல் கொண்டு எழுதாமலே வாயாலேயே பாடலானார்.


வரப்பில் அமர்ந்தவாறு சிந்தித்த அந்த இயற்கை இளங்கவி இனி வயலில் இறங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்து, அந்நாட்களில் பிரபலமாயிருந்த 'சக்தி நாடக சபா'வில் போய்ச் சேர்ந்தார்.

எதுவுமே தெரியாத அவரை 'எதற்கும் இருக்கட்டுமே' என்று சபாவின் முதலாளியான சக்தி டி.கே.கிருஷ்ணசாமி தம் நாடகக்குழுவில் சேர்த்துக்கொண்டார். இந்த சக்தி நாடக சபாவில்தான் சிவாஜிகணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, எஸ்.ஏ.நடராஜன், ஓ.ஏ.கே.தேவர் முதலியோர் நடிகர்களாக இருந்தனர்.

கல்யாணசுந்தரம் சிறுசிறு நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துக்கொண்டே கவிதைகளும் எழுதி வந்தார். அவற்றில் 'எண்ணம்' சரியாக இருந்தது. ஆனால், எழுத்துப்பிழைகள் நிறைய இருந்ததைப்பார்த்த அவரது நாடக நண்பர்கள், "நீ முறையாகத் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தில் ஒரு சிறந்த கவிஞனாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நடிப்பதை விட்டு விட்டு நேராக பாரதிதாசனிடம் போய்ச்   சேர்ந்துவிடு. பலர் அவரிடத்தில்தான் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு, கவிஞர் களாகியிருக்கின்றனர்" என்று கூறினார்கள்.

அதைக்கேட்டு கல்யாணசுந்தரம் புதுச்சேரிக்குப் போய் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பார்த்துக் கும்பிட்டு, அவர் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து பணிவுடன் நிற்க, பாரதிதாசன் அவரைக்கேட்டார்:-

பாரதி:- யாருப்பா நீ?
கல்யாணசுந்தரம்:- கல்யாணசுந்தரம்.
பாரதி:- எந்த ஊரு?
கல்யாணசுந்தரம்:- பட்டுக்கோட்டைக்குப் பக்கத்துல சங்கம்படைத்தான்காடு.

பாரதி:- என்ன விஷயமா இங்கே வந்திருக்கே?
கல்யாணசுந்தரம்:- பாட்டு எழுதணும்.
பாரதி:- என்ன படிச்சிருக்கே?
கல்யாணசுந்தரம்:- (சற்று நேர மவுனத்திற்குப்பின்) சொல்லிக்கிற மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லேங்கய்யா.

பாரதி:- பரவாயில்லே சொல்லு.
கல்யாணசுந்தரம்:- (விரலைக்காட்டி) மூணாங்கிளாஸ்.
பாரதி:- தமிழ் எழுதத் தெரியும்ல.
கல்யாணசுந்தரம்:- தப்புத்தப்பா எழுதுவேன்.

பாரதி:- அப்ப எதை வச்சு பாட்டெழுதணும்னு ஆசை உனக்கு உண்டாச்சு?
கல்யாணசுந்தரம்:- எங்கப்பா ஒரு கவி. முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்மின்னு சிங்கப்பூர்ல புத்தகம் போட்டாரு. அப்பா மாதிரி நானும் ஒரு கவி ஆவணும்னு ஆசை.

பாரதி:- வேற என்ன வேலை தெரியும்?
கல்யாணசுந்தரம்:- விவசாயம் நல்லா செய்வேன். பாத்திங்களாய்யா? (தன் கைகளைக்காட்டி) கலப்பை புடிச்சு உழுது உழுது, மம்பட்டி புடிச்சு வெட்டி வெட்டி எங்கையே காய்ச்சிப்போயிடுச்சு. அதோட வீட்டு வேலைங்கள்ளாம் செய்வேன். வேட்டித் துணிமணித் தொவைச்சிப் போடுவேன். உங்களுக்கு முதுகு தேய்ச்சி விடுவேன். எண்ணெய் தேச்சிக் குளிப்பாட்டி விடுவேன். நீங்க எந்த வேலை சொன்னாலும் தட்டாமச்செய்வேன். வேணும்னா பாருங்க.

பாரதி:- இந்த ஊர்ல உனக்கு வேண்டியவுங்க, தெரிஞ்சவுங்க வேற யாராவது இருக்காங்களா?
கல்யாணசுந்தரம்:- இல்லிங்கய்யா. அதான் நீங்க இருக்கீங்களே. அப்புறம் என்னா?
கள்ளங்கபடம் இல்லாத கல்யாணசுந்தரத்தின் வெள்ளை மனதையும் வெகுளித்தனத்தையும் நன்கு விளங்கிக்கொண்ட கனகசுப்புரத்தினம் என்கின்ற பாவேந்தர் பாரதிதாசன் சற்று யோசித்து, "பழனியம்மா" என்று அழைக்க, உள்ளிருந்து அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் வந்து நின்று...

பழனி:- என்னங்க?

பாரதி:- இந்தப்பையன் எங்கிட்டே பாட்டெழுதக் கத்துக்குறதுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து வந்திருக்கான். இங்கே அவனுக்கு வேற யாரும் இல்லே. நம்ம வீட்டோட இருந்துக்கட்டும். கிராமத்துப் பையன். வீட்டை நல்லா கவனிச்சிக்குவான். பார்த்துக்க.

பழனி:- சரிங்க. வாப்பா சாப்பிடலாம். வா.

ந்நாட்களில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ அதிபர் அமரர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 'பொன்முடி' (புரட்சிக்கவிஞரின் குறுங்காப்பியமான 'எதிர்பாராத முத்தம்' திரைப்பட வடிவத்தின் மாற்றுப்பெயர் 'பொன்முடி') 'வளையாபதி', 'சதி சுலோசனா' முதலிய படங்களுக்கு பாரதிதாசன் திரைக்கதை - வசனம் - பாடல்கள் எழுதியதன் மூலம், அந்தப்பட நிறுவனத்தின் நிரந்தர ஆஸ்தான ஆசிரியராக இருந்து வந்தார்.

பொதுவாக பாரதிதாசனிடம் ஒரு வழக்கம் உண்டு. படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை அவர் எழுதிய பிறகு அவற்றில் மற்றவர்கள் திருத்தமோ அல்லது மாற்றமோ சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார். தப்பித்தவறி சில வேளைகளில் ஏற்றுக்கொள்வதும் உண்டு. அது அப்போதைய அவருடைய மனோ நிலையைப் பொறுத்தது.

ஒருமுறை தன் மாணவன் கல்யாணசுந்தரத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் வந்த பாவேந்தர் அப்போது அங்கு தயாராகிக் கொண்டு இருந்த 'மகேஸ்வரி' படத்திற்காக எழுதிய ஒரு பாடலில் அவரது குணமும், கோபமும் தெரிந்தும்கூட, வேறு வழி இன்றித் திருத்தம் சொன்னார்கள். உடனே அவருக்குக் கோபம் வந்து வழக்கம்போல அவர்களைத்திட்டி, "இந்தப்பாட்டை நான் எழுதமாட்டேன். இதோ எங்கூட வந்திருக்கான் பாரு - என் மாணவன் கல்யாணசுந்தரம். இவன் நல்லா எழுதுவான்.

இவன்கிட்டே எழுதி வாங்கிக்குங்க. அப்பா நீ எழுதுடா" என்று கூற இதை எதிர்பாராத அவர் வெல வெலத்துத் தயங்கியபடி கூறினார்.

கல்யாணசுந்தரம்:- ஐயா! என்னங்க திடீர்னு இப்படிச் சொல்லிட்டிங்க? நான் எப்படி எழுதுறது?... எனக்கு...

பாரதி:- (குறுக்கிட்டு) பயப்படாதே! நான் சொல்றேன். தைரியமா எழுது. எல்லாம் நல்லா வரும். எழுது என்று அவரைத் தட்டிக்கொடுத்தார். ஆகவே தன் பக்திக்கும், பாசத்திற்கும் உரிய ஆசானின் பாதம் தொட்டு வணங்கி முதன் முதலாக அவர் சினிமாவுக்கென்று எழுதிய பாடலின் பல்லவி இது:-

"அம்பிகையே முத்து மாரியம்மா - உன்னை
நம்பி வந்தேன் ஒரு காரியமா
ஆளை விழுங்குற காலமம்மா - இங்கு
ஏழை நிலைமையைக் கேளுமம்மா."


இந்தப் பாடலை இசை அமைப்பாளர் பாடிப்பார்த்தார். சரியாக இருக்கவே இன்புற்று எல்லோரும் பாராட்டினர். செய்தி அதிபர் டி.ஆர்.எஸ்ஸின் செவிகளுக்குச் சென்றது.

உடனே அவர் உத்தரவிட்டார். "இனிமே இந்தப் பையனை வச்சே நம்ம மத்த எல்லாப் படங்களுக்கும் வேண்டிய பாட்டுங்களை எழுதி வாங்கிக்குங்க. பெரியவருக்கு சிரமம் கொடுக்கவேண்டாம். அவரோட சிஷ்யன் தானே! ஒண்ணும் சொல்லமாட்டாரு."

முதல் முறையாகத் தன் குருநாதருடன் சேலம் வந்த கல்யாணசுந்தரம் அடுத்தடுத்து அவரது அனுமதியுடனும், ஆசியுடனும் அடிக்கடி தனியாகப் பாட்டெழுத வரவேண்டியதாயிற்று.

விஞர் புதுச்சேரியில் இருந்தபொழுது பாவேந்தர் 'குயில்' என்னும் கவிதை இதழை வெளியிட்டு வந்தார். அதில் அ.கல்யாணசுந்தரம் என்பதைச் சுருக்கி 'அகல்யா' என்ற புனைப்பெயரில் அவர் ஒரு கவிதை எழுதி அஞ்சலில் அனுப்ப அது அங்கு வந்து அதனுடன் சேர்ந்து வந்த மற்ற தபால்களையும் அவரே கொண்டுபோய் குருநாதரிடம் கொடுத்தார்.

தனக்கு வந்த தபால்களுடன் சேர்ந்திருந்த உறையைப் பிரித்து குறிப்பிட்ட அந்த கவிதையைப் படித்துப்பார்த்த பாவேந்தர் மனம் மகிழ்ந்து மற்றவர்களிடம் காட்டி "யாரோ 'அகல்யா'ன்னு ஒரு பொண்ணு இந்தக் கவிதையை எழுதி அனுப்பியிருக்கு. நல்லாருக்கு. இதை இந்த வாரம் நம்ம 'குயில்' இதழ்ல பிரசுரிங்க" என்றார். அதற்கு அவர்கள்:-

"ஐயா! அகல்யாங்குறது வேறு யாரும் இல்லேங்க. நம்ம கல்யாணசுந்தரந்தான். அ.கல்யாணசுந்தரம்கிற தன் பேரைச் சுருக்கி 'அகல்யா'ன்னு வச்சிக்கிட்டிருக்காரு" என்று கூறியதைக்கேட்டு, அப்பொழுதே அவர் தன் இளங்கவிஞரின் கைநாடியைப் பிடித்துப் பரிசோதித்துப் பார்த்ததுபோல, "இந்தக் கவிக்குயில் வருங்காலத்தில் மிக இனிமையாகக் கூவிப் புகழ் பெறும்" என்று சொல்லி வாயார வாழ்த்தினார். அதன் எதிரொலிதான் 'மகேஸ்வரி' படத்திற்கு அவரைப் பாட்டெழுதச் சொல்லி, உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியது.

'மகேஸ்வரி' வழங்கிய ஆசியுடன் மாடர்ன் தியேட்டர்ஸின் 'ஆரவல்லி' மற்றும் 'பாசவலை' ஆகிய படங்களுக்கும் கல்யாணசுந்தரம் பாடல்கள் புனையலானார்.

அடங்காப்பிடாரிகளான ஆரவல்லி - சூரவல்லி சகோதிரிகளால் சிறையில் அடைக்கப்பட்ட ஆண் கைதிகள் கழுதையை வைத்துக்கொண்டு சிலேடையாகப் பாடுவதாக அவர் எழுதிய பல்லவி இது:-

"பழக்கமில்லாத கழுதைகிட்டே கொஞ்சம்
பாத்துக் கறக்கணும் பாலை - அது
பட்டுன்னு தூக்கிப்புடும் காலை - அப்போ
பல்லு போகுமோ மூக்குப் போகுமோ சொல்லமுடியாது அதனால்" (பழக்கமில்லாத)
'பாசவலை' படத்தில் புகழ் பெற்ற அவருடைய வேதாந்த பாடல் வரிகள் இவை:-

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்; குள்ள நரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பாக்கப்போனா எட்டடிதான் சொந்தம்."


இந்தத் தத்துவப்பாடலைக்கேட்டு அதிபர் டி.ஆர்.எஸ். மட்டுமல்ல, மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவின் அத்தனை பேரும் மயங்கி நம் கவிஞரைப் பாராட்டினர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டுப் புகழ்க்கொடி சேலத்தைத் தொடர்ந்து சென்னைப் பட உலகிலும் பறக்கத்தொடங்கியது. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோரை வைத்துப் படம் தயாரிக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் கல்யாணசுந்தரத்தின் கால எழுச்சிப் பாடல்களுக்காகக் காத்திருந்தன.

வருடைய பாடல்கள் எழுச்சி பெற்ற அந்தக் காலக்கட்டம் 1957, 1958-, 1959 ஆகிய மூன்றே மூன்று ஆண்டுகள் மட்டும்தான். அவருடைய பாடல்கள் எதுவுமே என்னால் மறக்க முடியாதவை!

1957-ல் நான் துணை வசனகர்த்தாவாகப் பணிபுரிந்து ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த 'சவுபாக்கியவதி'யில் கவிஞர் முதன் முதலாக ஒரு முழு படத்திற்குமான எல்லாப் பாடல்களையுமே எழுதுவதற்கு அதன் வசனகர்த்தாவான அமரர் ஏ.எல்.நாராயணனும், நானும் ஏற்பாடு செய்தோம்.

'சவுபாக்கியவதி' படத்தைத்தொடர்ந்து அதுவரையில் பின்னணிப் பாடகராக மட்டுமே இருந்த என் இனிய நண்பர் ஏ.எம்.ராஜா முதன் முதலாக இசை அமைத்து ஸ்ரீதர் முதன் முதலாக இயக்கிய 'கல்யாணப்பரிசு' படத்தின் எல்லாப் பாடல்களையுமே கல்யாணசுந்தரம் அற்புதமாக எழுதித் தன் பாட்டுக்கோட்டைக்கு ஒரு பலமான அஸ்திவாரத்தைப் போட்டுக்கொண்டார்!

இதைப்போல நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், 'நாட்டியப் பேரொளி' பத்மினியும் நடித்த ஜூபிடர் பிக்சர்ஸ் 'தங்கப்பதுமை' படத்தில் ஒரு சோகக்காட்சி: கண்கள் குத்தப்பட்டுக் குருடாக்கப்பட்ட தன் கணவனைக் கண்டு அவன் மனைவி கதறித் துடித்துக் கண்ணீர்ப் பெருக்கோடு கேட்கிறாள்:-

"அத்தான்! இக்கொடிய தண்டனை பெறக்கூடிய அளவிற்கு அப்படி என்ன கொலைக்குற்றம் புரிந்துவிட்டீர்கள்?" அதற்கு அவன் கூறுகின்ற பதிலாக நம் கவிஞர் வடித்த கவிதைப் பாடலின் தொகையரா (கஜல்) இது:-

'ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான் - அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத்தகுந்தவளை வாழாமல் செய்துவிட்டுப்
பாழும் பரத்தையரால் பண்பதனைக் கொன்றவன் நான்,
அந்தக் கொலைகளுக்கே ஆளாயிருந்து விட்டேன் இனி
எந்தக் கொலை செய்தால்தான் என்னடி என் ஞானப்பெண்ணே'.


திரைப்பட உலகில் பாடல் துறையில் அவர் ஆரம்பித்த அந்தத் 'தன்னாட்சி' மிகக் குறுகிய காலமான மூன்றே ஆண்டுகளில் முடிந்து போய்விட்டது. புகழின் உச்சாணிக் கொம்பைத் தாவிப் பிடித்த அவரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அக்கொம்பு தானும் முறிந்து அவரையும் தள்ளி வீழ்த்திவிட்டது.

மூக்கின் உட்பகுதியில் தோன்றிய ஒரு சிறு கட்டியை (பரு) அகற்றுவதற்காக அதன் மீதே தவறாக ஊசி குத்தியதால் மூளை பாதிக்கப்பட்டு மூர்ச்சையாகி சொற்ப நேரத்திற்குள் அவரது விழிகளை மூடச் செய்துவிட்டது. வியப்பிற்குரிய வேகத்துடன் விறுவிறு என்று வளர்ந்து வந்த அந்த விந்தைமிகு கவிஞரின் விஷயத்தில் 'விதி' சற்று முந்திக்கொண்டு அவசர அவசரமாக அதன் வேலையை முடித்துக்கொண்டு விட்டது!

"கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி - மானே
வளர்த்தவனே எடுத்துக்கொண்டான்டி"


என்று 'தங்கப்பதுமை' படத்தில் அவர் பாடியது அவருக்கே பலித்துவிட்டது.

கல்யாணசுந்தரம் 29 ஆண்டுகள் 5 மாதங்கள் 28 நாட்கள் மட்டுமே இந்த நற்றமிழ் மண்ணில் நடமாடினார். அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒரு நூறு பாடலுக்குச் சமம். அப்படிப்பார்த்தால் 1957, 1958, 1959 ஆகிய மூன்று ஆண்டுகளில் அவர் பாடிய 200 பாடல்களும் இருபதாயிரம் பாடல் களுக்கு நிகரானவை ஆகும்.
(மரணத்தை வென்ற கண்ணதாசன் - அடுத்த வாரம்).

பட்டுக்கோட்டையாரின் வருத்தம்

ருநாள், என் இதயங்கவர்ந்த கவிஞரிடம் இதைக்கேட்டேன்:-

'ஏன் கவிஞரே? பாரதிதாசன்கிட்டே நீங்க என்ன செய்தீங்க? பழைய இலக்கண இலக்கியங்கள்ளாம் படிச்சிங்களா? அவர் கவிதைங்க சொல்லச் சொல்ல அதையெல்லாம் உங்கக் கைப்பட எழுதினீங்களா?'.

இதற்கு அவர் சொன்ன பதில் இது:-

'ஊகூம், அதெல்லாம் ஒண்ணுமில்லே. அவரு எழுதி வைக்குற காகிதங்கள்ளாம் காத்துல பறக்கும். அதை  எடுத்துச் சரியா அடுக்கி வைப்பேன். அப்பப்போ எனக்குத் தோண்றதை எழுதி அவர்கிட்டே காட்டுவேன். அதுல இருக்கிற தப்பையெல்லாம் திருத்துவாரு. எப்படி எழுதணும்? எப்படி எழுதக்கூடாதுன்னு எனக்குச் சொல்லிக்கொடுப்பாரு. அவ்வளவுதான்.

எப்படியோ, பாட்டு எழுதுற அந்த முறையை முழுசா அவர்கிட்டேருந்து நான் கத்துக்கலேன்னாலும் முக்கால்வாசி தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு முந்தியெல்லாம் சும்மா வாயாலேயே இஷ்டத்துக்குப் பாடிக்கிட்டிருந்த நான், அவர்கிட்டே போய் சேர்ந்தப்பறந்தான் அதைக் காகிதத்துல கவிதையா எழுத ஆரம்பிச்சேன்.

அவர் மட்டும் என்னை சேலத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, அங்கே அவருக்கு கோவம் வந்து, அவர் எழுதவேண்டிய 'மகேஸ்வரி' படப்பாட்டை என்னை எழுதச் சொல்லலேன்னா, இன்னும் ரெண்டு வருஷம் அவரோடயே இருந்து, நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டு இன்னும் நல்லா கவிதைங்க எழுதக் கத்துக்கிட்டு ஒரு முழுக்கவிஞனா ஆகியிருப்பேன். அதுக்குள்ளே எனக்கு சினிமா சான்ஸ் வந்திடுச்சு. அதான் தப்பா போயிடுச்சு. அதான் எனக்கு வருத்தமாயிருக்கு'.

தவிட்டோடும், உமியோடும் தம்மிடம் வந்த கல்யாணசுந்தரம் என்னும் அந்த அரிசியை புரட்சிக் கவிஞர் புடைத்து, நேம்பிக்கல் பொறுக்கி, வேக வைத்துச் சோறாக ஆக்கி அவரைச் சமைத்தார். சரியாக அமைத்தார்!

பட்டுக்கோட்டையின் வயல் வரப்பில் தானாக முளைத்த அந்தத் தமிழ்ச்செடிக்கு புதுச்சேரி பாவேந்தர் தண்ணீர் வார்த்து வளர்த்திடாவிடில் அந்த இட்டுக்கட்டிப்பாடல்கள் எல்லாம் சங்கம் படைத்தான் காட்டுச் செம்மண்ணில் கலந்து செத்து மடிந்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும்.

அந்தக் குரு பக்தியினால்தான் கல்யாணசுந்தரம் எதை எழுதினாலும் அக்காகிதத்தின் உச்சியில் 'பாரதிதாசன் துணை' என்று எழுதினார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக