வியாழன், 15 ஜூன், 2017

மாடு விற்கத்தடை : பார்ப்பனப் பாசிச சதியில் ஒரு பன்னாட்டு ஒப்பந்த விதி ! Cow Ban is a Multi National Racket!

ந்தியாவில் ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 150 மில்லியன் டன்கள். இதன் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய். இது ஒரு ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி அல்லது கோதுமையின் மதிப்பைவிட அதிகம். விற்பனை செய்யப்படும் பாலில் 70% சிறு உற்பத்தியாளர்களாலேயே விநியோகிக்கப்படுகின்றன. 30% மட்டும்தான் அமுல் மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் விற்கப்படுகின்றன. இவர்களும் ஓரிரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்தே பாலைக் கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையை 2020 க்குள் 1,44,000 கோடியாக அதிகரிப்பது தனியார் பண்ணைகளின் திட்டம். சிறு உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டித்தான் இந்த இலக்கை அவர்கள் எட்டுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் நகரில் தனது பால் விற்பனையை அமுல் நிறுவனம் தொடங்கியது. அங்கு லிட்டர் 47 ரூபாய்க்கு பால் விற்று வந்த நிலையில், லிட்டர் 38 ரூபாய்க்கு தன் பாலை இறக்கியது அமுல். இதன் விளைவாக மற்ற கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகளும் விலையைக் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, பால் கொள்முதல் விலையைக் குறைத்தன. விளைவு பால்மாடு வளர்த்த சிறு உற்பத்தியாளர்கள் அழிந்தனர்.

அமுல் ஐதராபாத்தில் என்ன செய்ததோ அதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் செய்கின்றன. நாம் இந்திய பால்பண்ணைகள் என்று கருதிக்கொண்டிருப்பவையெல்லாம் இந்திய நிறுவனங்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, திருமலா பால் நிறுவனத்தின் உரிமையாளர் லாக்டாலிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம்.
இந்தத் தனியார் பால்பண்ணைகளே, சிறு உற்பத்தியாளர்களை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டி வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, பன்னாட்டு பால்பண்ணைகள் தமது பொருட்களை இந்திய சந்தையில் இறக்க அரசை நிர்ப்பந்தித்து வருகின்றன. குறிப்பாக ஏசியான் (Association of South East Asian Nations) நாடுகளுடன் தற்போது மோடி அரசு நடத்தி வரும் சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தையில், தங்களது பால்பண்ணைப் பொருட்கள் மற்றும் இறைச்சியின் மீது விதிக்கப்படும் சுங்கவரியை இந்தியா முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் கோருகின்றன. ரத்து செய்யப்பட்டால், அமுல், ஆவின், நந்தினி போன்ற நிறுவனங்களின் விலையை விடக் குறைவான விலையில் ஆஸ்திரேலியாவின் பால் இந்திய சந்தையில் பெருக்கெடுத்து ஓடும்.
எனவேதான், “சுங்கவரியை ரத்து செய்யாதீர்கள். பால் மாடுகளை தமது வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் இந்தியாவின் 15 கோடி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிடாதீர்கள்” என்று மோடி அரசை எச்சரிக்கிறார்  அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி. இருப்பினும் மோடி அரசு ஆஸ்திரேலியாவின் ஐ.டி சந்தையில் வர்த்தக சலுகைகளைப் பெறுவதற்காக, இந்தியாவின் பால் சந்தையைக் காவு கொடுத்துவிடும் என்று பொருளாதாரப் பத்திரிகைகள் ஊகிக்கின்றன. நமது பால் உற்பத்தியாளர்களின் எதிர்காலம் பேரம் பேசப்படுவது, ஐ.டி முதலாளிகளுக்காகவா, அல்லது ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்கியிருக்கும் அதானிக்காகவா என்பது இப்போதைக்கு நாம் அறிந்து கொள்ள முடியாத அரசாங்க இரகசியமாகவே இருக்கும்.
இந்தியச் சந்தை திறந்துவிடப்படும் பட்சத்தில், விவசாயிகளின் எதிர்ப்பை அரசு சந்திக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே விலை கட்டுப்படியாகாமல் பாலைத் தெருவில் கொட்டிப் போராடுகிறார்கள் விவசாயிகள். தற்போதைய விதிகள் மாட்டுச்சந்தையையே இல்லாமல் ஆக்குவதால், கணிசமான விவசாயிகள் பால்மாடு வளர்க்கும் தொழிலிலிருந்து விரட்டப்படுவார்கள். தொழிலை விட்டே துரத்திவிட்டால், அந்த அளவுக்கு விவசாயிகளின் எதிர்ப்பும் குறையும் என்பது மோடி அரசின் கணக்காக இருக்கக்கூடும்.  வினவு
நெற்களஞ்சியமான தஞ்சை, விவசாயம் நடக்காத தரிசாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்த போது, பிற்காலத்தில் மீத்தேன் திட்டமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் வரப்போகிறதென்று நமக்குத் தெரிந்திருந்ததா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக