ஞாயிறு, 11 ஜூன், 2017

இலவச குடிநீர்: மால்களுக்கு உத்தரவு!

மின்னம்பலம் : வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என மால்கள் மற்றும் உணவகங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
யஷ்வந்த்பூர் மாலில் உள்ள கே.எஃப்.சி. கடையில் சுதா கட்வா (47) என்பவர் கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி சென்றுள்ளார். அங்குப் பொறித்த சிக்கன் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தாகம் எடுத்ததால் குடிக்கக் குடிநீர் கேட்டுள்ளார். ஆனால், கடையில் குடிநீர் தர மறுத்துள்ளனர். பணம் கொடுத்து குடிநீர் பாட்டிலை வாங்குமாறு தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, மே, 30ஆம் தேதி பெங்களூரு மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் சுதா வழக்கு தொடர்ந்தார்.
நுகர்வோர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம், அனைத்து மால்கள் மற்றும் உணவகங்களில் இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும். இதை இரண்டு மாதங்களுக்குள் பெங்களூரு மாநகராட்சி செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதுகுறித்து சுதா கட்வா, “உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டியது அவர்களின் கடமை. ஆனால், அவ்வாறு வழங்கப்படுவதில்லை. மக்கள் குடிநீர் இருக்கும் இடத்தைத் தேடி அலைய வேண்டியுள்ளது அல்லது பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது. இலவசமாக வழங்கப்படும் குடிநீர் பெரும்பாலும் கழிவறை பக்கத்தில்தான் வைக்கப்படுகிறது. சில உணவகங்களில் குடிநீர் வழங்கப்பட்டாலும் அது தூய்மையாக இருப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், பெங்களூருவில் உள்ள பல மால்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் குடிநீருக்கு அதிக பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 10) பிபிஎம்பி (புருகத் பெங்களூரு மாநகர பலிகே) அனைத்து மல்டிபிளக்ஸ் மற்றும் உணவகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “பெங்களூருவில் உள்ள அனைத்து மால்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜய் கோபால் என்பவர் அங்குள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குக்குப் படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டுசென்ற தண்ணீர் பாட்டிலை திரையரங்குக்குக் கொண்டு செல்ல, திரையரங்கு ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் திரையரங்கில் 20 ரூபாய் விலையுள்ள தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஐநாக்ஸ் தியேட்டர் நிர்வாகத்தின்மீது, ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜய் கோபால் புகார் அளித்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் திரையரங்குகளில் எம்.ஆர்.பி. (அதிகபட்ச சில்லறை விலை) விலையைவிட அதிக விலைக்குத் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட்டது. 20 ரூபாய் விலையுள்ள தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்த திரையரங்குக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், திரையரங்கு நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். திரையரங்கில் மட்டுமல்லாமல், ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களில் செயல்படும் மால்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் இந்த உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்” என உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக