வெள்ளி, 16 ஜூன், 2017

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்!

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்!சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 36 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறைக்குப் பின் இன்று ஜூன்-16 ஆம் தேதி மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதை, காவல்துறையினர் தடுத்தனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்காக கல்லூரி முதல்வர் காளிராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது 18 மாணவர்களிடம் அடையாள அட்டை கேட்டு கல்லூரி நிர்வாகம், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெளியே நின்ற 18 மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது மாணவர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர். அப்போது காவல்துறையினர் மீது வீசப்பட்ட கல் எதிர்பாராதவிதமாகக் கல்லூரி முதல்வர் காளிராஜ் தலைமீது விழுந்துள்ளது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார். மேலும் அவரது காரையும் மாணவர்கள் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 36 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கத்தியுடன் நுழைந்ததால் 70 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக