வியாழன், 22 ஜூன், 2017

சுப.உதயகுமாரன் அர்னாப் கோஸ்வாமி மீது அவதூறு குற்றச்சாட்டு பதிவு .. பிரஸ் கவுன்சிலில் ..

 பிரஸ் கவுன்சிலில் அர்னாப் மீது சுப.உதயகுமாரன் புகார்!

ரிபப்ளிக் டிவி ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் அவதூறு செய்தியை ஒளிபரப்பி தனது குடும்பத்தாரை தொந்தரவு செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளதாக ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மீது சுப.உதயகுமாரான் நேற்று ஜூன் 21ஆம் தேதி இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.
பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் அணு சக்தி திட்டத்துக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சுப. உதயகுமாரன் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைமைக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
ரிபப்ளிக் டிவியைச் சேர்ந்த அர்னாப் ரஞ்சன் கோஸ்வாமி மற்றும் அவரது சக பணியாளர்கள் ஸ்வேதா மற்றும் சஞ்ஜீவ் ஆகியோர் என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் வன்மத்துடன் தொந்தரவு செய்துள்ள சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி ஸ்வேதா சர்மா என்பவர் நாகர்கோயிலில் உள்ள எனது வீட்டுக்கு வந்து தன்னை இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் மாணவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
பின்னாளில்தான் அவருடைய பெயர் ஸ்வேதா கோத்தாரி என்று தெரியவந்தது. அவருடைய ஆராய்ச்சிக்கு என்னுடைய உதவி வேண்டுமென்று கூறினார். அவர் அவருடைய உள்ளூர் நண்பர் சஞ்ஜீவ் உடன் வந்திருந்தார். நான் அவருக்கு பல புத்தகங்களைக் கொடுத்தேன். அவருடைய பல கேள்விகளுக்கு பதிலளித்தேன்.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அவர் அவருடைய ஒரு ஹோட்டல் அறையில் என்னிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று கூறினார். அப்போது அவர் என்னிடம் கூறியது: தன்னுடைய பிரிட்டிஷ் பேராசிரியர் ஒருவர் கூடங்குளம் அணுசக்தி திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாளர். அவர் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருக்கிறார் என்றார். அதற்கு நான் அவரிடம் நாங்கள் வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை ஏற்றுக்கொள்வதில்லை. எங்களுடைய இயக்கத்துக்கு வங்கிக் கணக்கும் இல்லை. அதன்பிறகு, அவர் உங்களுக்கு நன்கொடை அளிக்க வேறு ஏதேனும் வழி உள்ளதா என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் என்னுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய கட்சி வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டு பணம் பெற முடியாது. அதனால், வெளிநாட்டிலிருந்து பணம் நன்கொடையாக அளிக்க முடியாது. ஆனால், இந்தியாவிலிருக்கும் அவருடைய பெற்றோர்கள் நன்கொடை அளிக்க முடியும். அவர் பணம் அனுப்ப வேண்டுமானால் அவர்களுக்கு அனுப்பலாம் என்று கூறினேன். பணம் கொடுத்தால் நாங்கள் முறையான ரசீதை கொடுத்துவிடுவோம் என்று நான் தெளிவாகக் கூறிவிட்டேன். மேலும், நாங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதில் விருப்பமில்லை என்றும் கூறியிருந்தேன்.
ஆனால், அர்னாப் கோஸ்வாமியும் அவரது குழுவினரும் என்னைப் பற்றிய ஸ்டிங் ஆபரேஷன் என சொல்லப்படுகிற வீடியோவை ரிபப்ளிக் டிவியில் ஜூன் 20ஆம் தேதி ஒளிபரப்பினார்கள். அவர்கள் எங்களுடைய கூடங்குளம் அணுசக்தி திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை சர்ச்கள் மற்றும் வெளிநாட்டு நிதிகளால் பணம் பெறப்பட்டு நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். நானும் ரிபப்ளிக் டிவியில் இது தொடர்பான விவாதத்தில் பதிலளித்தேன். என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக விளக்கினேன். ஆனால், அர்னாப் கோஸ்வாமி என் மீது வெறுக்கத்தக்க வகையில் வன்மத்துடன் தவறாக செயல்பட்டுள்ளார்.
நான் ஒரு போராட்டத்துக்காக கும்பகோணம் சென்றிருந்ததால் அங்கிருந்துதான் அவர்களுடைய டிவி விவாதத்தில் பேசினேன். அன்று ரிபப்ளிக் டிவி நிருபர் சஞ்ஜீவ் நாகர்கோயிலில் உள்ள என்னுடைய வீட்டின் முன்பு பகல் 2 மணி முதல் இரவு 11 மணிவரை நின்றிருக்கிறார். என்னுடைய மனைவி பள்ளி செல்லும் மகன் எனது வயதான பெற்றோர்கள் அன்று இரவு அவர்களால் தொந்தரவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சஞ்ஜீவ் அவர்களுடைய ஸ்டிங் ஆபரேஷன் எனப்படும் வீடியோவுக்கு எனது குடும்பத்தினர் பதிலளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். எனது குடும்பத்தார் நான் வெளியே சென்றிருப்பதாகக் கூறியுள்ளார்கள். ஆனாலும், அந்த நிருபரும் அவருடைய சக பணியாளர்களும் அதிகப்பிரசங்கித் தனமான நடவடிக்கையால் எனது குடும்பத்தினரை கேள்வி கேட்க விரட்டியிருக்கிறார்கள்.
சஞ்ஜீவ் ஜூன் 21ஆம் தேதி காலை என்னுடைய வீட்டை மீண்டும் டிவியில் காட்டுகிறார். என்னுடைய குடும்பத்தினர் மீதான தொந்தரவு மீண்டும் தொடங்கியது. என்னுடைய வயதான அப்பா அவர்களுடைய இரக்கமற்ற நடத்தையை எதிர்த்துள்ளார். நான் அவரை தனிப்பட்ட முறையில் திட்டியதாக அவர் டிவிக்கு மோசடியாக செய்தி அனுப்பியுள்ளார். இந்த சம்பவமெல்லாம் நான் மாலை வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
அவர்களுடைய டிவியின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்துவதற்கு என்னைப் பற்றி அவதூறான செய்தியை ஒளிபரப்பு செய்கிறார்கள். இது சமூக ஊடகங்களிலும் பரவலாகி வருகிறது. ஒரு டிவி தொகுப்பாளர் மற்றும் நிருபரின் இப்படியான தவறான நடத்தை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாதது. ரிபப்ளிக் டிவியும் அவர்களுடைய நிருபர்களும் அனைத்து எல்லைகளையும் மீறி இருக்கிறார்கள். என்னுடைய குடும்பத்தாருக்கும் எனக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த சூழலில், இப்படியான மக்கள் விரோத டிவியிடமிருந்து பாதிக்கப்பட்டுள்ள என்னையும் வருங்காலத்தில் மக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய பிரஸ் கவுன்சில் தயவு செய்து உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்று சுப.உதயகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக