புதன், 28 ஜூன், 2017

குஜராத் பாணி ... மேற்குவங்கத்தில் பாஜகவின் மதக் கலவரத் திட்டம்

மேற்குவங்க மாநிலம், வடக்கு டினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்காபூர் என்னும் கிராமத்தில் கடந்த 22 ஜூன் 2017 அன்று, மாடு திருட முயன்றதாகக் கூறி மூன்று முசுலீம் இளைஞர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட நசிருதீன் (24), நசிருல் ஹக்(28) மற்றும் முஹம்மது சமிருதீன்(32) ஆகியோர் சாதாரண கட்டிடத் தொழிலாளர்களாகவும், சிறு வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இப்படுகொலை குறித்து, வடக்கு டினாஜ்பூர் போலீசு சூப்பிரண்டெண்ட் அமித்குமார் பாரத் கூறுகையில், அவ்விளைஞர்கள் மூவரும் கால்நடைத் திருடர்கள் தான் என்றும், அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் இதனை இம்மூவரின் குடும்பத்தினர் மட்டுமல்லாது அவர்களது அக்கம்பக்கத்தினரும் மறுத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நசிருதீனின் தந்தை அசின் அலி இது குறித்துக் கூறுகையில், நசிருதீன் ஒரு கட்டிடத் தொழிலாளி என்றும் அன்று மாலையில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பிற்குப் பின்னரே தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியே சென்றார் என்றும் அதன் பின்னர் மறுநாள் அவர் மரணமடைந்து விட்டதாகச் செய்தி மட்டும் தமக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். நசிருதீனை நம்பி அக்குடும்பத்தில் அவரது தாய், தந்தை மற்றும் அவரது மனைவி அனீசா பேகம் மற்றும் அவர்களது 4 மாதக் குழந்தையும் உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞர்களுல் ஒருவரான நசிருல் ஹக், அருகில் உள்ள குட்டிபரா கிராமத்தைச் சேர்ந்தவர். இக்கொலை குறித்து கர்ப்பிணியான ஹக்கின் மனைவி மர்ஜினா காட்டுன் கூறுகையில், அவரது கணவர் டில்லியில் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாகவும், இரம்ஜான் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், கொல்லப்பட்ட மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் பல்வேறு சமயங்களில் ஒன்றாகப் பணி புரிந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
மற்றொரு இளைஞரான சம்ருதீன், அதே பகுதியைச் சேர்ந்த கண்டர்பரா கிராமத்தைச் சேர்ந்தவர். தனது தந்தை, தனது அண்ணி, தனது மனைவி, இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர் கொண்ட அவர்களது குடும்பம், அவரை மட்டுமே சார்ந்திருக்கிறது. அவரது மனைவி ஹஸ்னெரா பேகம், தனது கணவர் கொல்லப்பட்டது குறித்துக் கூறுகையில், கான்கிரீட் திண்டுகள் தயாரிக்கும் தொழிலை இலாபகரமாகச் செய்து வரும் சம்ருதீன், புதியதாக ஒரு ஆட்டோ வாங்கவும் திட்டமிட்டிருந்தார் என்றூம், அவருக்கு மாடு திருட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

நசீருதீன் மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் ஜரினா பேகம் (இடது)
இப்பிரச்சினை நடந்த பிறகு இக்கொலைகள் தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்திருப்பதாகக் கூறியிருக்கிறது போலீசு. சம்பவம் நடந்த மறுநாள் போலீசு நிலையத்தின் முன்பு உள்ளூர் பாஜக கிரிமினல்கள் சூழ்ந்து கொண்டு, கைது செய்யப்பட்டவர்கள் மீதான புகார்களை இரத்து செய்ய வேண்டும் என்று கூறி கூச்சல் போட்டிருக்கின்றனர்.
மாடு திருடப் போன இடத்தில் ஊர்மக்களின் கோபத்துக்கு இலக்காகி, இம்மூன்று இளைஞர்களும் அடித்துக் கொல்லப்பட்டதாகவே போலீசும், பாஜகவும், ஊடகங்களும் சித்தரிக்கின்றன. ஆனால், பல்வேறு சந்தேகங்கள் போலீசால் விசாரிக்கப்படாமல், கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளன. உயிரிழந்த மூன்று இளைஞர்களின் உடலில் உள்ள காயங்கள் அனைத்தும், கத்தி வெட்டுக் காயங்களாக இருக்கின்றன. அவ்விளைஞர்களின் கழுத்தில் ஆழமாக வெட்டப்பட்டிருக்கும் காயமும், அவ்விளைஞர்களின் பிறப்புறுப்பு நசுக்கப்பட்டிருப்பதையும் அவர்களது உறவினர்கள் குறிப்பிட்டு, அது போலீசு தரப்பு குறிப்பிட்டிருப்பது போல கும்பலால அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்றும், திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகள் போலவுமே தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அம்மூன்று இளைஞர்களும், தங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பெயரிலேயே வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிகமாக மாட்டுக்கறி வைத்திருந்தாலோ, மாட்டை ‘திருடினாலோ’ யார் வேண்டுமானாலும் அவர்களைக் கொல்லலாம் எனும் காட்டு தர்பார்தான் முக்கியமானது.
இதன் பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடத்தாமலேயே, அவ்விளைஞர்களை கால்நடை திருடர்கள் என்று முத்திரை குத்தியிருக்கிறது போலீசு. இஸ்லாம்பூர் – சோப்ரா பகுதியில் பீகார் மற்றும் வங்கதேசத்திற்கு கால்நடைகள் கடத்தப்படுவது குறித்த பிரச்சினை நெடுநாளாகவே இருந்து வருகிறது. இப்பகுதியில் பாஜகவும் இதனை வைத்து மதவெறி அரசியல் நடத்த முயற்சித்து வருகிறது. கடந்த ஆண்டும் சோப்ரா பகுதியில் நடைபெற்ற ரதயாத்திரையில், ரதத்தை அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்ததாகக் கூறி பெரும் கலவரம் ஒன்று உருவாக்கப்பட்டது.
தற்போது அதைப் போன்றதொரு கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது பாஜக கும்பல். ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தது போல், மேற்குவங்கத்தில் தன்னை வளர்த்துக் கொள்ள பாஜக, மதக் கலவரங்களைக் கையில் எடுக்க எத்தினித்திருப்பதை இச்சம்பவங்கள் மூலம் நம்மால் உணர முடிகிறது.
செய்தி ஆதாரம்:  வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக