thetimestamil.com :ஜி. கார்ல் மார்க்ஸ்:
கருணாநிதி தனது தொண்ணூற்று நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அது
அறுபதாம் ஆண்டு வைர விழாவாக அவரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக்
கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முதல் முறையாக சமூக ஊடகங்களில்
அவர் குறித்த நெகிழ்ச்சியான பதிவுகளை எல்லா தரப்பிலிருந்தும் காணமுடிகிறது.
Hindu உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் தலையங்கமாக, கட்டுரையாக அவரைப்
பாராட்டியும், அவரது குறைகளை கவனப்படுத்தியும் உன்னிப்பான பத்திகள் இன்று
எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படிப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக
இருந்தது. இன்றைய இந்திய மற்றும் தமிழக அரசியலின் வெளிச்சத்தில் வைத்து
அவரது அரசியல் உத்திகளை மதிப்பிட்டு நிறைய எழுதியிருக்கிறார்கள்.
கருணாநிதியின் வாழ்க்கையில் லட்சியவாதத்துக்கு எப்போதும் இடம் இருந்தது
என்பதில் தொடங்குகிறது அவரது அரசியல் இருப்பு. அதை எதார்த்தத்துடன் மிகச்
சரியாக பொருத்திக்கொள்வதில் அவர் சமர்த்தர் என்பதுதான் அவரது அரசியல்
வெற்றி. நிலைத்த நீடித்த சமரசங்களை உள்ளடக்கிய அரசியல் பயணம் அவருடையது.
அன்றைய காலகட்டத்தில் எல்லாராலும் மிகக் கீழாக பார்க்கப்பட்ட சாதியப்
பின்னணியில் இருந்து வந்தவர். இப்போது வரை, அவரை அவமதிப்பதற்கு அவரது சாதி
சுட்டப்படுகிறது என்பதிலிருந்து அவர் எத்தகைய வழிகளைக்
கடந்துவந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவரிடம்
‘அவமதிப்பிற்கு எதிரான மூர்க்கம்’ வெளிப்பட்டதே இல்லை. தனது சாதி ரீதியான
காயங்களை அவர் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டதே இல்லை. அது அவரை
முடக்கவே இல்லை என்பதை ‘ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்’
அரசியலை முன்னெடுக்கும் இளைய தலைமுறையினர் கவனிக்கவேண்டும். ஆனால், அவரிடம்
அந்த மூர்க்கம் இல்லையே தவிர சாதி வேற்றுமைகளுக்கு எதிரான உறுதியான குரல்
அவருடையது.
மதம் என்று வருகிறபோது, இந்தியாவில் நிலைத்த மிக முக்கியமான மதச்சார்பற்ற அரசியல் குரல் அவருடையது. இத்தனை வருடங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்தபோதும், ஒப்பீட்டளவில் வேறு எந்த கட்சியும் கைகொள்ள முடியாத அளவுக்கு நேர்மையைக் கடைபிடித்தது திமுகதான். அதை உறுதிசெய்தவர் கருணாநிதி. நிர்வாகம் என்று பார்த்தால், அவருடையது அசுர உழைப்பு. இன்று கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் யாருக்கும் அந்த உழைப்பு மலைக்க வைக்கும் தூரத்தில் இருக்கும் ஒன்று. ஸ்டாலின் உட்பட. அதை பதவி மீதான வெறி என்றோ, அதிகாரத்தின் மீதான ஆசை என்றோ நாம் கருதிக்கொள்ளவேண்டியதில்லை. அவர் அரசியலின் மீது தீராத வேட்கை கொண்டவராக இருந்தார் என்பதே முக்கியக் காரணம். அதன் அலைக்கழிப்புகள் எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்க்கும் மனநிலை அவருக்கு இருந்தது. பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் மற்றும் தமிழின் அருமையான இலக்கியப் பாரம்பரியத்தின் மீதான அவரது பரிச்சயத்தில் இருந்து அவர் பெற்ற உத்வேகம் அது.
அவரது கலை மீதான வேட்கையும் அத்தகையதே. வெகுமக்களிடம் தொழிற்பட்ட கலைகளின் பின்னணியில் வைத்துப்பார்த்தால் அவரது மேதைமை உச்சம் தொட்டதே எப்போதும். அதை கட்சிக்கும், கட்சியினது கொள்கைக்கும் அவர் பயன்படுத்திய விதம் முன்னுதாரணம் இல்லாதது. மிக முக்கியமாக அது வெறுப்பைப் பரப்புவதற்கு பயன்பட்டதே இல்லை. பல சமயங்களில் அவரது மோசமான சமரசங்களுக்கு முட்டுகொடுக்க தனது மொழியை அவர் லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அப்படி முட்டுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று கருதிய போனதலைமுறை அரசியல்வாதி அவர். ஆனால், அப்படி எந்த அவசியமும் இல்லை என்று மதர்ப்பாகத் திரியும் அரசியல் தலைமைகளால் நிரம்புகிறது இன்றைய நமது அரசியல். மாட்டுக்கறி அரசியல் குறித்து குழந்தை கூட படம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் நாட்டில், ‘உங்களது ட்வீட்டைப் பார்த்திருக்கிறேன்’ என்று வெளிநாட்டில் கிண்டலடித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார் நமது பிரதமர். அரசியல் உறுதிக்கும், மக்களை துச்சமாக மதிக்கும் ஃபாசிசத்துக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டே வரும் காலத்தில் கருணாநிதி போன்றவர்களின் ஆகிருதிகள் இதயத்தில் இருத்திக்கொள்ளப்பட வேண்டியவை.
கருணாநிதியை முன்னிட்டு நிகழ்ந்துகொண்டிருக்கும் இப்போதை ‘வைர விழா’ கொண்டாட்டமும், அதன் கூடுகையும் அரசியல்ரீதியாக பெறுமதி மிகவும் வாய்ந்தவை. நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு. கருணாநிதியின் சிறப்பே, ‘ஒற்றை அதிகாரத்துக்கு எதிரான’ அவரது அரசியல் முன்னெடுப்புகள்தான். மாநில சுயாட்சி என்பதை குறைந்த பட்சமாவது மத்திய அரசுகள் கவனத்தில் கொள்கின்றன என்றால் அத்தகைய அழுத்தத்தை இந்திய அளவில் உருவாக்கி நிறுத்தியதில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானது. பிஜேபிக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் திமுக இப்போது செய்திருப்பது ஒரு பிரகடனம். மோடியின் காலில் விழுந்துகிடக்கும் இன்றைய அதிமுக தலைமையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்து நாம் இந்த செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
‘தேசிய முன்னணி’ போன்ற மாற்று அரசியல் குழு உருவாக்கத்தில் அவரது பங்கு மகத்தானது. அவருக்காக நடத்தப்படும் இந்த வைரவிழா அந்த பாதையில் ஒரு உத்வேகத்தைத் தருமெனில் இந்திய ஜனநாயகத்திற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரதான கட்சியான காங்கிரஸ் பல மட்டங்களில் வலுவிழந்திருக்கும் சூழலில் திமுக போன்ற கட்சிகள் முன்னெடுக்கும் இத்தகைய ஒருங்கிணைப்பு நடவடிக்கைள் மிக முக்கியமானவை. மூர்க்கமான சிந்தனையைக் கொண்ட அமைப்பு ஒன்றின் வழிகாட்டலில் நாட்டின் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. அதிகாரக் குவிப்பை நோக்கி அரசின் உறுப்புகள் உந்தப்படுகின்றன. அதைக் கொஞ்சமேனும் தடுப்பதற்கு நமக்கு சில பெயர்கள் வேண்டும். பெரும் மக்கள் திரளால் காதலுடன் உச்சரிக்கப்படும் பெயர்களாக அவை இருக்கவேண்டும். கருணாநிதி எனும் பெயர் இந்திய அரசியலில் அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் அப்படி ஒரு பெயர். அவரை வாழ்த்துவது நாம் அவருக்கு செய்யும் சலுகை அல்ல. நன்றியுணர்ச்சியுடன் கூடிய கடமை அது!
ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவர் நூல்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக