சனி, 24 ஜூன், 2017

கர்நாடகாவில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!


இந்தி எதிர்ப்பு என்றாலே தமிழ்நாடுதான் என்று இந்திய வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டில் 1937ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அதற்கு அடுத்து 1963 - 65ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் இந்தியை வேர்பிடிக்கவிட முடியாமல் செய்துவிட்டது. இன்று தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டாலும் இன்னும் இந்தி தமிழகத்தில் பரவாமல் முக்கியத்துவமற்ற மொழியாகவே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழக மக்களின் தமிழ் மொழிப்பற்றுதான்.
மத்திய அரசு அவ்வப்போது நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறும்போதெல்லாம் இந்தியாவின் தென்கோடியில் இந்தி எதிர்ப்பு என்று குரல் ஓங்கி ஒலிக்கும். அந்தக் குரல் தமிழ்நாட்டின் குரல். இந்தி மொழி விஷயத்தில் எப்போதும் மத்திய அரசுக்கு தமிழகம் தலைவலிதான். ஆனால், சில ஆண்டுகளாக இந்த இந்தி எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய பல மாநிலங்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இது பிரிவினைக் குரல் என்று பார்க்காமல் மாநில மொழி பேசும் மக்களின் உரிமைக் குரலாகவே பார்க்க வேண்டும்.

அண்மைக் காலமாக பாஜகவினரும் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று கூறிவறுகிறது. அவ்வப்போது மத்திய அரசும் இதே குரலை ஒலித்துவருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் இந்தி மொழியில் அறிவிப்பதை எதிர்த்து நேற்று ஜூன் 23ஆம் தேதி பெங்களூரு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் முன்பு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் இந்தி திணிக்கப்படுவது குறித்து கன்னட வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூருவில் கன்னடம், தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளைப் பேசுவோர் பெரும் பான்மையாக வசிக்கிறார்கள். இங்கே இந்தி மொழி எழுத, படிக்க தெரிந்தவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. அதனால், பெங்களூரு மெட்ரோ ரயிலில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இந்தி தெரியாத‌ பயணிகளைக் கடுமையாக பாதிக்கிறது. அதனால், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளூர் மொழிக்கும், ஆங்கில மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தி திணிக்கப் படுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமில்லாமல், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் சார்பாக நேற்று ஜூன் 22ஆம் தேதி பெங்களூரு மெட்ரோ அலுவலகத்துக்கு எதிரே இந்தி திணிப்புக்கு எதிராக‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, இந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் இந்தி மொழியில் அறிவிப்பது குறித்தும் இந்தி திணிக்கப்படுவது குறித்தும் ஊடகங்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இது மத்திய அரசின் உத்தரவு என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகம் 80 ஆண்டுகளுக்கு முன்பே இந்தி திணிப்பை எதிர்த்து களம் கண்ட நிலையில் கர்நாடகா இந்தி எதிர்ப்பில் களம் இறங்கியிருக்கிறார்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக