சனி, 24 ஜூன், 2017

கலாம் சாட்’டுக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர்!

‘கலாம் சாட்’டுக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர்!
உலகிலேயே குட்டி செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்களுக்கு முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரிஃபாத் ஷாரூக். இவருக்கு வயது 18. இவர் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோளை 4 கியூபிக் செமீ அளவில் 64 கிராம் எடையில் வடிவமைத்துள்ளார். முகமது ரிஃபாத் ஷாரூக், கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 750 தான். ஆனால் அவர் செய்த சாதனை உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுவரை விஞ்ஞானிகள் யாரும் வடிவமைக்காத அளவுக்குச் சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார்.
நாசா மற்றும் டூடுல் லியர்நிங் நடத்திய கியூப்ஸ் இன் ஸ்பேஷ் என்ற போட்டியில் கலந்து கொண்ட ஷாருக் 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.
மறைந்த விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல்கலாம் அவர்களின் நினைவாக இந்த செயற்கைக்கோளுக்கு ‘கலாம்சாட்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
இந்த செயற்கைக்கோள் வாலப்ஸ் தீவில் உள்ள நாசா மையத்தில் இருந்து கடந்த ஜூன்-22 ஆம் தேதி அதிகாலை மூன்று மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. கலாம்சாட்டை உருவாக்க ஷாருக்கின் நண்பர்கள் 6 பேர் உதவி செய்துள்ளனர். புதுவகை ஆன்-போர்ட் கணினி மூலம் உள்ளடக்கப்பட்ட எட்டு சென்சார்களை கொண்ட இந்த சிறிய செயற்கைக்கோள் 240 நிமிடங்கள் மட்டுமே விண்ணில் நிலைநிறுத்தப்படும். மேலும் இது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, அங்கிருக்கும் சூழல், அவற்றால் செயற்கைக்கோள்கள் அடையும் மாற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இவருடைய செயலுக்கு உலக அளவில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.
இது குறித்து ஜூன்-24 ஆம் தேதி சட்டசபையில், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர் ஷாருக் மற்றும் அவரது குழுவினர் 6 பேருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமையை தேடி தந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், மாணவர்கள் பல சாதனைகளை நிகழ்த்த ஊக்குவிக்கும் வகையில் ஷாருக் மற்றும் அவரது நண்பர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக