சனி, 3 ஜூன், 2017

BBC: பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பத்ததில் இருந்து அமெரிக்கா ... தலைவர்கள் கண்டனம்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பருவ நிலை மாற்றம் தொடர்பான 2015ல் கையெழுத்தான ஒரு ஒப்பந்தத்தில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதற்கு ஆதாரவாகவும், எதிராகவும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.  
பாரிஸ் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின்போது, அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ''பாரிஸ் ஒப்பந்தத்தில் நீடிக்கும் நாடுகள்தான் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் மூலம் பயன்களை பெரும் நாடுகள் ஆகும். இந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் அமெரிக்காவின் தலைமை இல்லாத நேரத்தில் கூட, எதிர்காலத்தை நிராகரிக்கும் ஒரு சில நாடுகளுடன் இந்த நிர்வாகம் கைகோர்த்தால் கூட, நமது மாகாணங்கள், நகரங்கள், தொழில்நிறுவனங்கள் முயற்சித்து, ஒப்பந்தத்தில் இருப்பதை காட்டிலும் அதிகமாக செய்து, நமக்குக் கிடைத்தி்ருக்கும் ஒரே உலகத்தை, நம் எதிர்கால சந்ததிகளுக்காக காப்பாற்ற உதவ வேண்டும்.''
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்
''இன்று இரவு நான் உறுதியாக சொல்லுகிறேன்: ஒரு ஆர்வம் குறைந்த உடன்பாட்டை எட்ட மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நிச்சயமாக செய்யமாட்டோம். காலநிலை பற்றி தவறாக எண்ணாதீர்கள்; நம்மிடம் வேறு திட்டம் இல்லை ஏனெனில் நம்மிடம் வேறு பூமி இல்லை.''
அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்
''உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பேரழிவுகளை ஏற்படுத்திவரும் இந்த நேரத்தில்,நமது எதிர்கால சந்ததியினருக்காக இந்த பூமி கோளை பாதுகாக்கும் முயற்சிகளில் இருந்து விலகிகொள்ளும் தார்மீக உரிமை நமக்கில்லை.''




முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி
''முதலில் அமெரிக்கா ("America First") என்ற உறுதிமொழியைத் தந்த அதிபர் நம்முடைய நாட்டை கடைசியாக வைக்கும் சுய அழிவு நடவடிக்கையை எடுத்துள்ளார். இது அமெரிக்க தலைமையை இதற்கு முன் எப்போதும் காணாத வகையில், செல்லாக்காசாக்கும் ஒரு முடிவு. இதன் வாயிலாக அமெரிக்காவின் செல்வாக்கு இழப்பு, வேலை இழப்பு, மற்ற நாடுகள் மனிதகுலத்தின் இருத்தலியலுக்கான நெருக்கடியை சமாளிப்பதில் இருந்து வெளியேற அழைப்பு விடுக்கும் விதமாக அமைகிறது. நாம் இந்த உலகத்தை இணைக்கும் நடவடிக்கைகளை எடுத்த பிறகு, இந்த முடிவு அமெரிக்காவை அதிலிருந்து தனிமைப் படுத்துகிறது''
அமெரிக்க குடியரசு கட்சியின் சபாநாயகர் பால் ரயன்
''பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நியாயமற்ற ஒரு ஒப்பந்தம். செனேட்டின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் ஒபாமாவால் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், மின்சார விலையை உயர்த்தியது, நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் அமெரிக்கர்கள் கடுமையாக தாக்கியது. அமெரிக்க மக்களுக்காக தனது பொறுப்பை நிறைவேற்றியதற்காகவும் இந்த மோசமான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்காவும் நான் அவரை பாராட்டுகின்றேன்.''




ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமர் தெரீசா மேவின் அறிக்கை
''அமெரிக்காவின் முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஐக்கிய ராஜ்யம் பாரிஸ் உடன்பாட்டில் உறுதியாக உள்ளது என்று வலியுறுத்தினார்.
''எங்களது குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிசக்தி மலிவான மற்றும் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி அதே நேரத்தில் பாரிஸ் ஒப்பந்தம் வருங்கால தலைமுறையினரின் செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சரியான உலகளாவிய வடிவமைப்பை வழங்குகிறது.''
ஐநா சபையின் பொது செயலாளர் அன்டோண்யோ கூடெர்ரெஸ் (செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டஜார்ரிக் வாயிலாக)
"காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு,
கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை குறைப்பதற்கும் உலகின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், எடுக்கப்பட்டுவரும் உலகளாவிய முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. அமெரிக்கா சுற்றுச்சூழல் பிரச்சினையில் ஒரு தலைமை பொறுப்பு வகிப்பது முக்கியம்."




கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக எடுத்துள்ள முடிவு எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. காலநிலை மாற்றத்தை தடுக்கவும், தூய்மையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும் உள்ள அர்ப்பணிப்பில் கனடா உறுதியாக உள்ளது. "
ஹில்டா ஹெய்ன், பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தல் நிலையில் உள்ள மார்ஷல் தீவின் அதிபர்
"இன்றைய தீர்மானம் ஏமாற்றத்தை மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்திக்கும் முன்னணி வரிசையில் வாழும் எங்களைப் போன்ற நாடுகளுக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது. உலகின் மற்ற நாடுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு உறுதியுடன் உள்ளன. எங்களின் உறுதிப்பாடு, அதிலும் எங்கள் பரந்த பசிபிக் நாடுகளின் குடும்பம் அதை ஒருபோதும் கைவிடவதில்லை.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக