வெள்ளி, 23 ஜூன், 2017

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு மன்னிப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் 7 பேரின் மன்னிப்பை ஏற்று சஸ்பெண்டு நடவடிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் பதவி ஏற்றது. அவர் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூப்பித்து காட்ட வேண்டும் என கவர்னர் வித்யாசாகர்ராவ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக சட்டசபை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடத்தப்பட்டது. அன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேசினார்கள். அப்போது சட்டசபையில் கடும் ரகளை ஏற்பட்டது. நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் அதனை ஏற்கவில்லை. இதனால் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.


அவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பினர். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் சபையில் அமைதி ஏற்படவில்லை.

ஒரு கட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு கோ‌ஷமிட்டனர். அப்போது சில உறுப்பினர்கள் தங்கள் இருக்கையின் மீது ஏறி நின்று கோ‌ஷமிட்டனர். சிலர் புத்தகங்களை கிழித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரிசை மீது வீசி எறிந்தனர்.

சட்டசபை செயலாளர் மேஜை மீது இருந்த புத்தகங்கள், கோப்புகளும் கிழித்தெறியப்பட்டன. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. சட்டசபை துணை செயலாளரையும் சிலர் சூழ்ந்து கொண்டு அமளியில் ஈடுபட்டனர்.

சட்டசபை செயலாளரின் எழுது பலகையை எடுத்து 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வீச முயன்றனர். செயலாளரின் இருக்கையும் தலைக்கு மேல் தூக்கி வீச முயன்றனர். அவரது மேஜை தள்ளிவிடப்பட்டது.

இதற்கிடையே சபாநாயகர் அருகே வைக்கப்பட்டிருந்த குப்பை கூடையை தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தூக்கி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பகுதி மீது வீசினார். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் எச்சரித்தார். ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கையில் அமர மறுத்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அமளி அதிகரித்ததால் சபையை 1 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன் ஆகியோர் சபாநாயகரை சூழ்ந்து கொண்டனர். சபாநாயகர் தனது இருக்கையில் இருந்து எழுந்து செல்ல முயன்ற போது அவரது சட்டை கிழிக்கப்பட்டது. சபை காவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனார்.

மதியம் 1 மணிக்கு சட்டசபை கூடிய போது மீண்டும் ரகளை ஏற்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன் இருவரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்த பிளாக் 1, 2 வரிசைக்கு இடையில் வந்தனர். சில தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்தனர்.

இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே சபை காவலர்கள் உள்ளே சென்றனர். ஆனால் தி.மு.க.வினர் வெளியேற மறுத்தனர்.

அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பகுதியில் இருந்து தண்ணீர் பாக்கெட்டுகள் வீசப்பட்டது. சபை காவலர் ஒருவரின் தொப்பியும் தட்டி விடப்பட்டது. ரகளை அதிகரித்ததால் சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.


மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு சபை கூடியது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் சட்டசபையில் நடந்த ரகளை தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் பிப்ரவரி 20-ந்தேதி உரிமை மீறல் பிரச்சனை கொடுத்தார். அதை சபாநாயகர் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பி வைத்தார்.

சட்ட பேரவை விதி 226-ன் கீழ் அந்த உரிமை மீறல் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. உரிமை மீறல் குழுவின் தலைவரான துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அந்த மனு ஆய்வு நடந்தது.

அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தண்டனை வழங்க கூடாது என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்பேத் குமார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், சுரேஷ்ராஜன், கார்த்திகேயன், முருகன், கு.க.செல்வம் ஆகிய 7 பேருக்கும் விளக்கம் கேட்டு உரிமை குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் ஒரே மாதிரியான பதில் விளக்கம் அளித்தனர்.

இவை அனைத்தையும் ஆய்வு செய்த உரிமை மீறல் குழு அதை அறிக்கையாக தயாரித்தது. இன்று அது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. உரிமை குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அதை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், ‘‘சட்டசபையில் உறுப்பினர் பேச்சு சுதந்திரம் பேணிக் காக்கப்பட வேண்டும். வரும் காலத்தில் கண்ணியமான முறையில் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாமல் உறுப்பினர்கள் ஜனநாயக கடமையாற்ற வழிவகை செய்ய வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் ரகளையில் ஈடுபடும் செயலுக்கு முற்றுபுள்ளி வைக்கவும், மற்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாடமாக அமையவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேரையும் தலா 6 மாதம் சபையில் இருந்து சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், ஆதாயங்கள், தகுதிகள், சலுகைகள் பெற இயலாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை மீறல் குழு பரிந்துரை செய்திருந்தது.

இதற்கான தீர்மானத்தை அமைச்சர் செங்கோட்டையன் முன்மொழிந்தார். இதையடுத்து சட்டசபையில் அதை சபாநாயகர் இன்று எடுத்துக் கொண்டார். அவர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும் மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார்.

இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் உரிமை மீறல் குழு பரிந்துரையை கடந்து சஸ்பெண்டு நடவடிக்கையில் இருந்து தப்பினார்கள்.

சபை நடவடிக்கைகளை சுமூகமாக கொண்டு செல்லும் நல்லெண்ண அடிப்படையில் சபாநாயகர் தனபால் இந்த முடிவை மேற்கொண்டதாக அறிவித்தார்.

7 தி.மு.க. உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முயன்றதற்கு முதலில் நன்றி தெரிவித்த சபாநாயகர், பிறகு அவர்களை பற்றி குறிப்பிடுகையில் கூறியதாவது:-

7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் என்னை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தனர். அதோடு கடிதம் கொடுத்து மன்னிப்பும் கேட்டனர்.

இனி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதியளித்தனர். இதில் சுரேஷ் ராஜனை தவிர ஏனைய உறுப்பினர்கள் புதியவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்ததின் பேரில் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

எனவே பேரவை அனுமதியோடு அந்த தண்டனையை திரும்பப் பெற்றுக் கொண்டு 7 பேரையும் எச்சரித்து பிரச்சனையை இத்துடன் விட்டுவிட கருதுகிறேன்.

இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

பின்னர் அவை முன்னவர் செங்கோட்டையன் 7 பேர் மீதும் தண்டனை வழங்குமாறு கொண்டு வந்த தீர்மானத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “7 பேருக்குரிய தண்டனையை எச்சரித்து விடுவதாக சபாநாயகர் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். மேலும் அந்த தீர்மானத்தை அவரே திரும்பப் பெற்று கொண்டு நிறைவேற்றி தந்ததற்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்  malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக