திங்கள், 29 மே, 2017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுயமரியாதை மரண சாசன ஆவணம் (WillDeed)

Athi Asuran :கழுத்தில் கத்தியை வைத்த நேரத்திலும், கொள்கைக்காக வீரமரணமடைந்தான் மாவீரன் ஃபாரூக். ஆனால் தனது இறுதிப் பயணத்தை மதச்சடங்குகளோடு - மதவாதிகளோடுதான் நிறைவுசெய்தான். அந்நிலை இனி நாம் யாருக்கும் வரக்கூடாது. எதிர்பாரத ஒரு சூழலில் நடந்த வீரமரணம் அது. ஆனால், இயல்பாக முதுமையில் – நோய்வாய்ப்பட்டு மரண மடையும் எண்ணற்ற தோழர்களுக்கும் இதுபோன்ற அவலநிலை நேர்ந்து விடுகிறது.
மரணம் நமக்கு எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். அந்தச்சூழலுக்கான முன்ஏற்பாடுகளைத் திட்டமிட்டுக்கொள்வது பகுத்தறிவாளர்களுக்கு அழகு.
வாழும் வரை ஜாதி, மதச்சடங்கு சம்பிரதாயங்களையும் மதப் பண்பாடுகளையும் எதிர்த்து – மறுத்து வாழ்ந்துவிடுகிறோம். இறந்த பிறகு நமது உயிரற்ற உடலுக்கு, நமது இரத்த உறவினர்களால் நடத்தப்படும் ஜாதி, மதச் சடங்குகளிலிருந்த நம்மைக் காப்பாற்றிக் கொள்வது மிக மிக அவசியமான பணி.

எவ்வித ஜாதி, மதச் சடங்குகளும் அற்ற முறையில் நமது இறுதி நிகழ்வுகளை நடத்திக் கொள்ளும் பொருட்டு, நமது விருப்பத்தை, மரண சாசனத்தை விருப்ப ஆவணமாக (WillDeed) உயிலாக, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால், இறுதி நேரத்தில், உறவினர்களோ, பெற்றோர்களோ, நமது உடலுக்கு ஜாதி, மதச் சடங்குகள் செய்வதற்கு ஒரு தடையாக அது அமையும்.
80 களில் திராவிடர் கழக மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் இதுபோன்ற மரண சாசனங்கள் அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். அவற்றைப் பார்த்து, 1996 ல் தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி தி.க தோழர் முத்துப்பாண்டியுடன் இணைந்து மரணசாசனங்களை அச்சிட்டு விற்பனை செய்திருக்கிறோம். அந்த மரண சாசனங்களை வாங்கி, அதில் தங்களது படத்தை ஒட்டி, வீட்டில் மாட்டி வைத்திருக்கும் பெரியார் தொண்டர்களையும் பார்த்திருப்போம்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான சுயமரியாதைக் கலை பண்பாட்டுக் கழகம் 2014 செப்டம்பர் 17 ல் இந்நிலைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை ஒரு விழாவாகவே நடத்தியது. அப்போது அந்த விழாவை ‘ஏற்பாடு’ செய்த தோழர்கள் காட்டாறு குழுவாக இயங்கத் தொடங்கிய பிறகும், தொடர்ச்சியாக அந்தப் பதிவுப்பணியை மேற்கொண்டனர். தோழர் ஓவியா அவர்களின் புதியகுரல் அமைப்பும் இது போன்ற பதிவுகளுக்கு முயற்சி எடுத்தது.
இதுபோன்ற மரணசாசனப் பதிவை விருப்ப ஆவணமாக, (WillDeed) ‘உயிலாக’ எழுதி, அதை பதிவாளர் அலுவலகங்களில் பதிவுசெய்து, அந்தப் ஆவணத்தை ஃப்ரேம் செய்து வீட்டில் அலங்காரமாக வைக்க வேண்டும். நமது குடும்பத்தினர், நமது வீடுகளுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நமது மரணநிகழ்வு பற்றிய ஒரு பரப்புரையாகவும், விழிப்புணர்வு ஊட்டும் பணியாகவும் இதைச் செய்ய வேண்டும். இதை ஒரு “பண்பாட்டுவிழா” வாக ஒவ்வொரு அமைப்பும் முன்னெடுப்பது மிக மிக அவசியமாகும்.
மரண உயில் மாதிரி Will Deed Draft தேவைப்படுவோர். காட்டாறு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். jpeg ஆக இந்தப் பதிவிலும் உள்ளது. சட்ட நிபுணர்கள் யாரிடமாவது ஆலோசித்து இதைவிடச் சிறப்பான ஒரு ஆவணத்தைக்கூடத் தயாரித்துக்கொள்ளுங்கள். "மரண உயில் பதிவு" நமது கடமை. Kaattaaru2014@gmail.com


AThi Asuran விருப்ப ஆவணம் (Will Deed)

----------மாவட்டம், ------------வட்டம், ------------------------------என்ற முகவரியில் வசிப்பவரும், ----------------------அவர்கள் மகனும் / மகளும் -----------வயதுடையவருமான --------------ஆகிய நான் தன்புத்தியுடனும், நன்கு ஆலோசித்
தும் பிறர் தூண்டுதல் இன்றியும் என் முழுமன ஒப்புதலுடன் எழுதிவைத்துக் கொண்ட விருப்ப ஆவணம் என்னவென்றால்,

எனக்கு தற்போது -------- வயதாகிறது. மனித வாழ்வு நிலையற்றது என்பதால் என் இறப்புக்கு பின்னர் என் உடலை அடக்கம் அல்லது எரியூட்டுவது தொடர்பாகவும், யார் நடத்துவது, எப்படி நடத்துவது என்பவைகளைப் பொருட்டும், என் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குள் வீண் கருத்துவேறுபாடுகள் ஏற்படாதிருக்கும் பொருட்டும், மேற்கண்ட செய்திகளைப் பொறுத்து என் ஆயுள்காலத்திலேயே ஒரு ஏற்பாடு செய்து வைத்துவிட வேண்டும் என்கிற என் உறுதியான முடிவின்பேரிலும், எனது இறுதி அடக்கம் நான் விரும்புகிறபடியே அமைய வேண்டும் என்கிற எனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டும் இந்த விருப்ப ஆவணத்தைப் பிறப்புவித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இந்துவாக / இஸ்லாமியராக / கிறித்துவராகப் பிறந்ததாகச் சொல்லப்பட்டாலும், என் வாழ்நாளில் தோழர் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால் நான் இறக்கும்போது ஜாதி, மத அடையாளங்களோடு இறக்க விரும்பவில்லை.

எனவே எனக்கு இயற்கையாகவோ அல்லது திடீரென்று ஏதாவது நேர்ந்தோ இறப்பு நேரிட்டால், எனது உடலை எவ்வித மதச் சடங்குகளோ, சாதிச் சடங்குகளோ, சம்பிரதாயமோ இன்றியும், எவ்விதமான மூடநம்பிக்கைச் சடங்குகளோ, சம்பிரதாயமோ அறவே இல்லாமல் கருப்பு உடை அணிவித்து, / என் துணைவர் -----------, என் மகள் / மகன் ஆகியோரால் என் இறுதி நிகழ்வு மருத்துவ ஆய்வுக்கு உடலை ஒப்படைத்தல் அல்லது மின் மயானத்தில் எரியூட்டல் நடைபெற வேண்டும். அதற்குப்பிறகும் காரியம், கருமாந்திரம், திதி, சடங்குகள், வெள்ளை உடை அணிதல் போன்ற சடங்குகளையும் யாரும் நடத்தக்கூடாது.

என் குடும்ப உறுப்பினர்களையும் கட்டாயப்படுத்தக்கூடாது.
என் ஆயுளுக்குப்பின் என் உடலின் இறுதி அடக்கத்தை மேலே சொல்லப்பட்டபடி என் வாழ்க்கைத் துணையும், மகள் / மகன்களும் முன்னின்று எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி நடத்த வேண்டியதே தவிர, என் குடும்பத்தாரோ, உற்றார் உறவினரோ சாதிய, மதச் சடங்குகள் முறையில் இறுதி அடக்கம் செய்ய யாருக்கும் எவ்வித பாத்திய சம்பந்தமும் உரிமையும் கிடையாது.

கையொப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக