திங்கள், 29 மே, 2017

கவண், காற்று வெளியிடை போன்ற படங்கள் ஆணாதிக்க வெறி பிடித்தவை ... அசிட் கலாசார ஊக்குவிகள்?

AThi Asuran : இதுபோன்ற படங்களை விமர்சனங்களின்றி ஏற்றுக்கொள்கிறோம். பிறகு பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்போது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். நாடகத் தனமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஒழிய வேண்டுமானால் கவண், காற்று வெளியிடை போன்ற படங்களின் மீது கடும் விமர்சனங்கள் எழ வேண்டும். கே.வி.ஆனந்த், மணிரத்னம் போன்றவர்கள் மீது அனைத்து அமைப்புகளும் மக்களும் கண்டனங்களைப் பதிவுசெய்யவேண்டும். கருத்துரீதியாக கடும் எதிர்வினைகளை நிகழ்த்த வேண்டும். இவைகளின் வணிகம், விளம்பரம், ப்ரமோஷன் போன்றவைகளை எதிர்க்க வேண்டும்." ஆணாதிக்கப் பொதுப்புத்திக்குத் தீனி போடுவதில் காற்று வெளியிடை, கவண் இரண்டு படங்களுமே போட்டி போட்டுள்ளன. இரண்டு படங்களையும் வெளியான முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். கவண் பட உரையாடல்களில் உள்ள ஆணாதிக்கம் குறித்து யாராவது ஒருவர் சமூகவலைத் தளங்களிலோ, அச்சு ஊடகங்களிலோ விமர்சனத்தை வைப்பார்களா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்று வரை எவரிடமிருந்தும் அந்தக் கோணத்தில் எதுவும் வரவில்லை. காற்று வெளியிடை யின் ஆணாதிக்க உரையாடல்கள் குறித்து இன்றே கவிதா முரளிதரன் பதிவு செய்துள்ளார்.
கவண் படத்தின் உரையாடலை சு.பா வும், கபிலன் வைரமுத்துவும் எழுதியுள்ளனர். தொடக்கத்திலேயே வரும் ஒரு படப்பிடிப்புக் காட்சியில், காதலியான மடோனாவுக்கு எதிரிலேயே விஜய் சேதுபதி வேறொரு பெண்ணை இறுக அணைத்து முத்தமிடுவார். தேவைக்கு அதிகமான நெறுக்கம் தொடர்வதைப் பார்த்து, மடோனா கோபப்படுவார். உடனே
" தேளு..னா கொட்டும், பாம்புனா கொத்தும், ஆம்பளை..னா சபலப்படுவான்" என்று விஜய் சேதுபதி பேசுகிறார். திரையரங்கில் உள்ள அனைத்து இளைஞர்களும், மாணவர்களும் விசில் அடிக்கிறார்கள். பதிலுக்கு மடோனா, "இந்த மாதிரி நான் செஞ்சிருந்தா ஏத்துக்குவியா?" என்கிறார். அந்த வசனம் விசில் சத்தத்தில் அடங்கி விடுகிறது. அடுத்தடுத்த காட்சிகளும், மடோனாவின் சுயமரியாதை உணர்வைக் கிண்டல் செய்தவாறே பயணிக்கின்றன. அந்தச் செயலுக்காக மடோனா கொண்ட கோபம், வெறும் ஊடலாக மட்டுமே காட்டப்படுகிறது.
அதே போன்ற பல காட்சிகளை காற்று வெளியிடையிலும் பார்க்கலாம். கார்த்தி, அதிதி யிடம் பேசும் போது, "ஆம்பளயோட நேச்சரே, Hurt பண்றது தான்." என்கிறார். "பொம்பளதான் அனுசரிச்சுப் போகணும்" என்று தொடர்ந்து வர வேண்டிய வரிகளை நாம் புரிந்துகொள்ளும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேச்சராவே ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இருக்கு, டாக்டரா அது உனக்கும் புரியும்" என்று கூறுகிறான். வேறுபாடு என்பதில் உயர்வு, தாழ்வு என்ற உள்ளடக்கத்தைப் பார்வையாலேயே புரிய வைத்திருக்கிறார் மணிரத்னம். இவை தான் Directorial touch போல.
குறிப்பாக, படத்தின் டீசரிலேயே வரும் வசனம், "நீ என்ன வெறுத்தாலும் உன்ன விரும்புவேன்" என்று வருகிறது. வெறுத்தா விட்டுட்டுப் போக வேண்டியது தானே? அதுதானே ஆண், பெண் இருவரின் சுயமரியாதைக்கும் நல்லது. இது கடுமையான ஈவ்டீசிங், டார்ச்சர் இல்லையா?
பெண்கள் விமானப்படைக்குப் போவதாக இருந்தாலும் அழகா இருக்கணுமாம். “பெண்கள் fighter pilot ஆக வரலாம். ஆனா அழகா இருக்கணும்” இப்படிப் படம் முழுக்க வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பெண் ஓர் உயிரற்ற பொருள். அவளுக்கு ஆசைகள், கனவுகள், திட்டங்கள் இருக்கக்கூடாது. ஆணின் எண்ணங் களைச் செயல்படுத்துபவளே பெண் என்ற கருத்துதான் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலியும் ஒரு உயிர் தான், அவளுக்கும் சுயமரியாதை உண்டு, உணர்வுகள், உணர்ச்சிகள் உண்டு என்பதைக் கொஞ்சம்கூடக் கவனத்தில் கொள்ளாத ஒரு பொறுப்பற்ற, சராசரி இளைஞன் பாத்திரம் இந்தப் படத்திற்கு எதற்காகத் தேவை எனப் புரியவில்லை.
ஷேவ் செய்து மிலிட்டரி ட்ரஸ் போட்டிருக்கிறார் என்ற வேறுபாட்டைத் தவிர, பருத்திவீரனுக்கும், வருணுக்கும் கேரக்டர்படி எந்த வேறுபாடும் நமக்குத் தெரியவில்லை. 'கற்பு' என்பதைப் போலவே, காதல் என்பதும் பெண்களின் முன்னேற்றத்துக்கு எதிரிதான் என்று நாமே பரப்ப வேண்டிய காலம் வெகு விரைவில் வந்துவிடும் போல் உள்ளது.
மௌனராகம் கார்த்திக் கேரக்டர் ரேவதியிடம், "நாளைக்கு சாயந்தரம் 4 மணிக்கு பஸ்ஸ்டாண்ட்ல மீட் பண்றோம்" என்று மிகத் திமிராக, சந்திக்கத் தூண்டுகிறார். காற்றுவெளியிடை கார்த்தியும் அதேபோலத்தான் நடந்து கொள்கிறார். இதையெல்லாம் இதே படங்களில் வேறொருவன் செய்தால் அவன் வில்லன்.
இன்னும் இந்தக் காலத்துப் பெண்களைப் பற்றி ஒரு இயக்குநருக்கே தெரிய வில்லையா? அல்லது இன்றைய கொஞ்சம் சுதந்திரமான பெண்களின் நிலையை மணிரத்னம் விரும்பவில்லையா? என்று தெரியவில்லை.
கவண் படத்தில் வரும் டி.ஆரின் குத்துப்பாட்டுக்கு திரையரங்கில் இருந்த கல்லூரி மாணவிகள் கூட்டமாக டான்ஸ் ஆடினார்கள். படத்தின் பல காட்சிகளில் மாணவிகளின் கோரஸ் சத்தம் தியேட்டரையே அதிரவைத்தது. வழக்கமாக முதல் நாள் முதல் ஷோக்களில் விசிலடிக்கும் இளைஞர் கூட்டம், கவண் வெளியிட்ட தியேட்டரில் மாணவியரின் அதிரடியைப் பார்த்து உறைந்து போய்த் தான் இருந்தது. அந்த அளவுக்குப் பெண்கள் தடைகளைத் தகர்த்து வந்தாலும், அதே படத்தில் வரும் ஆணாதிக்க வசனங்களை அமைதியாகவே கடந்து சென்றார்கள். அவர்களுக்கே அது நியாயம் தானே என்ற எண்ணம் இருக்கலாம். அதுதான் சிக்கல்.
எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைச் சொல்ல முடிந்த கருத்தாளர்கள் எவரும் கவண் பட ஆணாதிக்க உரையாடல்களையும், ஒட்டுமொத்தப் படத்தின் ஆணாதிக்கப் போக்கையும் சுட்டிக்காட்டக்கூட இல்லை. தடைகளைத் தகர்க்க பெண் இனம் தயாராகியுள்ளது. ஆனால் தடை எங்கு இருக்கிறது என்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஆணும் புரிந்து கொள்ள அனுமதிப்பதில்லை-
இதுபோன்ற படங்களை விமர்சனங்களின்றி ஏற்றுக்கொள்கிறோம். பிறகு பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்போது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். நாடகத் தனமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஒழிய வேண்டுமானால் கவண், காற்று வெளியிடை போன்ற படங்களின் மீது கடும் விமர்சனங்கள் எழ வேண்டும். கே.வி.ஆனந்த், மணிரத்னம் போன்றவர்கள் மீது அனைத்து அமைப்புகளும் மக்களும் கண்டனங்களைப் பதிவுசெய்யவேண்டும். கருத்துரீதியாக கடும் எதிர்வினைகளை நிகழ்த்த வேண்டும். இவைகளின் வணிகம், விளம்பரம், ப்ரமோஷன் போன்றவைகளை எதிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக