திங்கள், 29 மே, 2017

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது ...

குண்டர் சட்டத்தை உடனே விலக்கிக் கொண்டு திருமுருகன், டைசன் மற்றும் இளமாறன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மற்றும் டைசன், இளமாறன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மே 21 அன்று இலங்கை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு சம்பவத்தில் பலியான தமிழர்களுக்காக நினைவேந்தல் கூட்டத்தை அரசின் தடையை மீறி நடத்தியதாகவும் ஏற்கெனவே உள்ள வழக்குகளின் அடிப்படையிலும் திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தடையை மீறி தமிழ் மக்களுக்காக ஒரு நினைவேந்தல் நடத்தியதால் குண்டர் சட்டத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது. தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரின் குரல்வலையை நசுக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாசிசத்திற்கு எதிரான கருத்துகளை ஊடகங்களின் வாயிலாக வலுவாக எடுத்துரைப்பவர் திருமுருகன் காந்தி. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளத் திராணி அற்றவர்களின் சூழ்ச்சியால் திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாசிச சக்திகளின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும் சிக்கியுள்ளது வருத்தத்திற்குரியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜகவின் அழுத்தத்திற்கு ஏற்றவாறு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது திருமுருகன் கைது வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
எனவே, குண்டர் சட்டத்தை உடனே விலக்கிக் கொண்டு திருமுருகன், டைசன் மற்றும் இளமாறன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக