திங்கள், 8 மே, 2017

நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

thetimestamil :சந்திர மோகன் : நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்காக டெல்லியில் பல நாட்கள் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராடினார்கள். நிர்பயாவுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டு, 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது.

குற்றவாளிகளில் 6 பேரில், முதன்மைக் குற்றவாளியான ராம்சிங், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம், திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 18 வயதுக்கு குறைவான குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றத்தில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் சிறைக்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங், அக்‌ஷய் தாகூர், வினய் ஷர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகள் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையைக் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர்.
ஆனால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தண்டனைகளை வலுவாக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அடங்கிய அமர்வு முன் மேல்முறையீட்டு மனு விவசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.
அதிகரிக்கும் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை !
2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 707 ஆக 2013ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டில் டெல்லியில் 585 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2013ல் இரண்டு மடங்காக அதாவது 1, 441 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 923 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 3 பலாத்காரங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் பலாத்கார சம்பவங்களில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது.கடந்த 2012ல் மாநிலம் முழுவதும் 291 பாலியல் வழக்குகள் பதிவாயின. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.
நந்தினி பலாத்காரம் & கொலை!
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகடம்பூர் கிராமம் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்த நந்தினியை கடந்த டிசம்பரில் இந்து முன்னணியை சேர்ந்த ஆதிக்க சாதிக் கயவர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.அவரது உடல் கொடூரமான முறையில் கிணறுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
நந்தினியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள், அவளது வயிற்றில் இருந்த கருவை கிழித்து எடுத்து எரித்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்யவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகே சிலரை கைது செய்தது காவல்துறை. முக்கியமான VIP க்கள் வெளியில் தான் உள்ளனர்.
நந்தினிக்கும் நீதி கிட்டுமா?
நந்தினி போல தமிழகத்தில் பல தலித் சிறுமிகள், சிறு பிஞ்சுகள் கசக்கி எறியப்பட்டுள்ளனர். போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள்.
உயர்சாதி, பலமானவர்கள் எனப் பாரபட்சம் பாராமல், ஏழை தலித் பெண்களின் மரணத்திற்கும் சமமான நீதி கிடைக்குமா ? நமது நீதியும் நிர்வாகமும் சாதி, மதம் கடக்குமா ?
பெண் என்றால், எந்த சாதியாக இருந்தாலும் பெண் தானே ! ஒரே சட்டம், ஒரே நீதி தானே! நந்தினி வழக்கில் நீதித்துறையும், காவல்துறையும், ஆட்சியாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள் ? பார்ப்போம்!
 சந்திரமோகன், சமூக – அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக