திங்கள், 8 மே, 2017

நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை ? ; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடிதத்தை படியுங்கள்….

thetimestamil.com :சென்னை, மருத்துவ கல்வியில் தேசிய பொது நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் மறுசீராய்வு மனுவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.<இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஏற்கனவே எழுதிய கடிதம்தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு செய்யும் மத்திய அரசின் முயற்சியை கடுமையாக எதிர்த்து கடந்த பிப்ரவரி 9–ந் தேதி கடிதம் எழுதியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அந்த தேர்வு எந்த பெயரில் எந்த விதத்தில் வந்தாலும், அது தமிழக மாணவர்களின் நலனை, குறிப்பாக ஊரகப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், மிகவும் பின்தங்கிய மாணவர்களை கடுமையாகப் பாதிக்கும். மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விவகாரங்களில் தமிழக அரசுக்கு இருக்கும் கொள்கை மற்றும் உரிமைகளையும் அது பாதிக்கும் என்பதை எனது கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.

உரிமையில் தலையீடுமருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் விஷயத்தில் கடந்த 2005–ம் ஆண்டில் இருந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பின்னர் இளநிலை தொழில்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தது.
இதற்காக, தமிழ்நாடு தொழில் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைச் சட்டம் 2006 என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது. சமமான போட்டியை எதிர்கொள்வதற்கு வகை செய்யும் வகையில், கிராமத்து மாணவர்களின் நலனை, அதுவும் குறிப்பாக பின்தங்கிய வகுப்பினரின் நலனை கருதியே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நீட் என்ற தகுதி நுழைவுத் தேர்வை எந்த விதத்திலும் மத்திய அரசு அறிமுகம் செய்வது, தமிழகத்தின் உரிமையில் நேரடியாகத் தலையிடுவதாக அமைந்துவிடும்.
தமிழக அரசின் வாதம் ஏற்புஇளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் ‘நீட்’ தேர்வை அறிமுகம் செய்து இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை பிறப்பித்த அறிவிப்பாணையை கடந்த 18.7.13 அன்று தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதில் தமிழக அரசு எடுத்து வைத்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
ஆனால் இந்த தீர்ப்பை ஏற்காமல் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுவை முந்தைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்தது. அதைத் திரும்பப்பெற வேண்டும் என்று கடந்த 28.7.13 அன்று அப்போதைய பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். மறுசீராய்வு மனுவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கும் தாக்கல் செய்தது.
துரதிருஷ்டம்சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் மறுசீராய்வு மனுவை திரும்ப பெற வேண்டும் என்றும் 3.6.14 அன்று உங்களிடம் மனு கொடுத்தேன். பின்னர் 7.10.15, 9.2.16 ஆகிய தேதிகளிலும் உங்களுக்கு கடிதம் எழுதினேன்.
இவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தும் அதை தவிர்த்துவிட்டு, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை இந்த அரசு திரும்ப பெறவில்லை என்பது துரதிருஷ்டவசமாக உள்ளது.
மாநில ஒதுக்கீட்டுக்கும் பாதிப்புஇந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்த முன்மொழிவின் அடிப்படையில், மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்ற கருத்துருவை வரைவறிக்கையாக மற்ற அனைத்துத் துறைகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அனுப்பியிருப்பதாகவும், அதன் மூலம் இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு நட த்த வகை செய்யப்படும் என்றும் தெரிய வருகிறது.
ஏற்கனவே மாநில அரசின் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். கல்வி இடத்தில் 15 சதவீதத்தையும், மருத்துவ மற்றும் பல் மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத இடத்தையும், பொது நுழைவுத் தேர்வின்படி மாணவர் சேர்க்கை மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கிறோம் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். இந்த நிலையில் மாநில அரசின் ஒதுக்கீடுகளையும் சேர்க்கும் வகையில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது, மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நியாயமாகவும், வெளிப்படையாகவும் சீட் ஒதுக்கீட்டைப் பெற்று வரும் மாணவர்களுக்கு மிகுந்த அநீதி இழைப்பதாக அது அமையும்.
கிராமத்து மாணவர்கள்நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுக்கு சாதகமாகவே இருக்கும் பொது நுழைவுத் தேர்வில், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த தேர்வுக்காக நகர்ப்புறங்களில் கிடைக்கும் பயிற்சி வசதி எதுவும் ஊரகப் பகுதியில் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு இந்த தேர்வில் பின்னடைவுதான் ஏற்படும். பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால் ஊரகப் பகுதி மாணவர்கள் பலர் நல்ல பலன் அடைந்தனர்.
முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு, ஊரகப் பகுதியில் சேவை செய்யும் டாக்டர்களுக்கும், மலைப் பிரதேசம், பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கும் தமிழக அரசு சிறப்பு சலுகை அளிக்கிறது.
அதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுடன் அரசு ஒப்பந்தம் செய்து கொள்வதால், அரசு ஆஸ்பத்திரிகளில் தேவைப்படும் சிறப்பு மருத்துவ தேவைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது.
திரும்ப பெறுங்கள்நீட் அல்லது பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தால் இதுபோன்ற தமிழக அரசின் கொள்கை அமலாக்க நடவடிக்கை அனைத்தும் இல்லாமல் போய்விடும். தமிழகத்தில் நிலவக்கூடிய சமுக பொருளாதார மற்றும் நிர்வாக சூழ்நிலைக்கு ஏற்றவகையில் இந்த தேசிய தேர்வு இல்லை.
எனவே மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் மீண்டும் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட்டில் 15–ந் தேதி நடக்க இருக்கும் விசாரணையின்போது திரும்ப பெறுவதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு தகுந்த அறிவுரையை நீங்கள் வழங்கவேண்டும்.
தமிழக அரசின் வாதத்தை ஏற்று கடந்த 2013–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறுத்தும் வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அந்தக் கடித்ததில்  கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக