புதன், 31 மே, 2017

கைதான’ திருமுருகனும் ‘கைதாகாத’ வைகோவும்!

‘கைதான’ திருமுருகனும் ‘கைதாகாத’ வைகோவும்!
மின்னம்பலம் : தமிழக அரசு செயல்படவே இல்லை என்று எதிர்க்கட்சிகள் எல்லாமே ஒரே குரலில் முழங்கிக் கொண்டிருந்த நிலையில்... கடந்த சில நாட்களாக, ‘மெரினாவில் நினைவேந்தல் நடத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டிக்கிறோம்’ என்று போராட்டங்கள், அறிக்கைகள், சினிமா இயக்குனர்களின் கூட்டுப் பேட்டிகள் என்று தமிழக அரசை நோக்கி விமர்சனக் குரல்கள் வீசப்படுகின்றன.
‘’இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா? தமிழக அரசு செயல்படுகிறது என்று?” -என நிர்மா விளம்பர பாணியிலே சிரித்துக் கொண்டே கேட்கிறார்கள் மூத்த போலீஸ் அதிகாரிகள்.

அவர்களிடம் மேலும் பேசியபோது,
‘’அரசின் முக்கியமான திறமையே மக்கள் ஒரு விஷயத்தை மிக சீரியசாக யோசிக்க தொடங்கும்போதே அதிலிருந்து லாகவமாக திசை திருப்பி விடுவதுதான். இது இன்று நேற்றல்ல... எம்.ஜி.ஆர்., கருணாநிதி காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் திருச்செந்தூர் முருகனின் வைரவேல் காணாமல் போனபோது கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் அறிவித்தார். அது மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. எம்ஜிஆர் ஒரு கணம் திணறினார். அப்போது ஒரு மூத்த அதிகாரியின் யோசனைப்படி, ‘தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்றலாமா என்று அரசு யோசித்து வருகிறது’ என்ற தகவலை வெளியிட வைத்தார். உடனே ஊடகங்கள், மக்கள் எல்லாருமே திருச்செந்தூர் வேலை விட்டுவிட்டு திருச்சியை பிடித்துக் கொண்டனர். எம்ஜிஆரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
கருணாநிதி ஆட்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஈழப் பிரச்னைக்காக முத்துக்குமார் தன்னை தானே எரித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு முதல்வர் கருணாநிதி முதுகு வலியால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது உளவுத்துறை அதிகாரிகளை அழைத்து, ‘வைகோவை கைது செய்யுங்கள்’ என்று சொன்னார். மற்ற முதல்வர்களை விட கருணாநிதி கொஞ்சம் சுதந்திரம் கொடுப்பவர். இதைப் பயன்படுத்தி அதிகாரிகள் அப்போது அவரிடம், ‘ஐயா... வைகோ இப்ப பெரிசா ஒன்னும் ஆக்டிவா இல்ல. ஈழப் பிரச்னை பத்திதான் பேசிக்கிட்டு இருக்காரு. அவரை கைது பண்ணா அவருக்குதான் அரசியல் ஆதாயம் கிடைக்கும். இன்னும் சில மாசத்துல எம்பி. தேர்தல் வேற வருது... இப்ப வைகோ கைது தேவையா?” என்று கேட்டனர். கருணாநிதி இரண்டு, மூன்று முறை வைகோவை கைது செய்ய வலியுறுத்தியும் அதிகாரிகள் அதை செய்யவில்லை. அவர்
முதுகுவலியால் மருத்துவமனையில் இருந்ததால் மேலும் அழுத்தம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் சில நாட்கள் கழித்து முத்துகுமார் தன்னையே எரித்து சாஸ்திரி பவன் முன் தற்கொலை செய்துகொண்டார். அப்போது அதே அதிகாரிகளை அழைத்து கடுமையாக திட்டிய கருணாநிதி, ‘இது மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்னுதான் அப்பவே வைகோவை கைது பண்ண சொன்னேன். வைகோவை கைது பண்ணியிருந்தா வைகோவை விடுதலை செய் என்ற முழக்கம் வெடித்து போராட்டம் கொஞ்சம் திசை திரும்பியிருக்கும். முத்துக்குமாரும் செத்திருக்க மாட்டான். அனுபவசாலி சொல்றேன். சொன்னதை செய்யுங்கய்யா..’ என்று கடிந்துகொண்டார்’’ என்று கிசுகிசுத்த அதிகாரிகள் திருமுருகன் கைது மேட்டருக்கு வந்தனர்.
‘’மெரினாவில் ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முயன்ற திருமுருகன் காந்தியை வழக்கமாக கைது செய்து ரிமான்ட் பண்ணினார்கள். அப்போது தமிழக அரசு செயல்படாத அரசு என்ற விமர்சனம் ஊடகங்களில் பெரிதாக இருந்தது. ஆனால் திருமுருகன் காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததும்... தமிழக அரசின் செயல்பாட்டை கண்டிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். செயல்படாத அரசு என்று சொல்லிவந்த ஸ்டாலினே... அரசின் செயல்பாட்டை கண்டித்தால் அரசு செயல்படுகிறது என்றுதானே அர்த்தம். அந்த குண்டாஸ் நீதிமன்றத்தில் உடையும் என்று அரசுத் தரப்புக்கும் தெரியும். ஆனாலும்... பிரச்னைகளை திசை திருப்பி அரசியல் ஆதாயத்தை அடைவதற்கு இதுபோல சில மூவ் கள் தேவைப்படுகின்றன’’ என்று முடித்தனர்.
மத்திய அரசின் அழுத்தம் ஒருபக்கம் இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்தாலும், திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததின் மூலம் தன் 'செயல் திறனை' காட்டியிருக்கிறது தமிழக அரசு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக