புதன், 31 மே, 2017

நாட்டில் சிவில் யுத்தம்: திருமாவளவன்

நாட்டில் சிவில் யுத்தம்: திருமாவளவன்
மின்னம்பலம் : மாட்டிறைச்சி தொடர்பான சட்டவிதிகளை விலக்கிட மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும், என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மே 31-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் வகுப்புவாத சக்திகளின் வன்முறை வெறியாட்டம் தலைதூக்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஏ.பி.வி.பி. என்னும் மாணவர் அமைப்பினர், சுராஜ் என்னும் மாணவரை தாக்கியதில் அவரது வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் என்னும் அமைப்பைச் சார்ந்தவர் என்பதாலும், மாட்டிறைச்சிக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கும் வகையில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்வை ஏற்பாடு செய்தார் என்பதாலும் தான், அவர் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

அவ்வாறு தாக்கும் போதே, உன்னைத் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்வோம் என்றும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர் என்றும் தெரியவருகிறது. மாணவர்களிடையில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட வகுப்புவாத வெறி அரசியலே இத்தகைய கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகும். இவ்வாறு நாடு முழுவதும் வகுப்புவாத வெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மென்மேலும் தலைவிரித்தாட வாய்ப்புள்ளது. மாடுகளை வைத்திருக்கும் யாரையும் அவர் இறைச்சிக்காகத் தான் மாடுகளை வைத்திருந்தார் என்று தாக்குவதற்கு, மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கான(1960) தற்போதைய விதிகள் வழிவகுக்கும்.
அதாவது, இது மக்களுக்கிடையிலான ஒரு சிவில் யுத்தத்திற்குத் தூண்டுகோலாக அமையும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டியுள்ளோம். இதற்கான ஒரு சான்றாகவே தற்போது சென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இந்தப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அம்மாணவரைத் தாக்கியவர்கள், தூண்டியவர்கள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.அத்துடன்,பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய சிகிச்சை அளித்திட தமிழகஅரசு பொறுப்பேற்று ஆவன செய்ய வேண்டும். மேலும், கேரளா மற்றும் புதுவை மாநில அரசுகளைக் போலவே தமிழக அரசும் மாட்டிறைச்சி தொடர்பான சட்ட விதிகளை விலக்கிட வேண்டுமென மைய அரசை வலியுறுத்த வேண்டும். இத்தகைய வன்முறை வெறியாட்டம் தேசம் முழுவதும் பரவாமல் தடுத்திட ஏதுவாக, மோடி அரசு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தற்போது இணைத்துள்ள புதிய விதிகளை முற்றிலும் கைவிட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக