புதன், 24 மே, 2017

நேபாளம ..தனித்துவமான மரபணு பெற்ற ஷெர்பா இன மக்கள்

BBC :நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா இன மக்களின் உடல்கூறு இயற்கையாகவே பிராணவாயுவை திறமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
தசை மாதிரிகளை கொண்டு சோதனை
கடல் மட்டத்தில் உள்ள சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களைவிட இந்த ஷெர்பா இன மக்களின் பிராணவாயுப் பயன்பாட்டுத்திறன் அதிகமாக உள்ளது என அந்த ஆய்வு கூறுகின்றது.
உயரமான மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வாறு அந்த இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து கொள்கின்றனர் என்று கண்டறிய நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
5,300 மீட்டர் உயரத்தில் உள்ள மலையேறுபவர்களின் தசை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவது மற்றும் எவெரெஸ்ட் மலையின் அடிவார முகாமில் அவர்களை உடற்பயிற்சி செய்வதற்கான வண்டியை ஓட்ட வைப்பது போன்றவற்றை கொண்டதாக இந்த ஆய்வு அமைத்தது.
ஷெர்பா மக்களின் உடலில் உள்ள சாதகமான ஒரு மரபணு மாற்றமானது , அவர்களது இந்த நிலைகளில் உயிர்வாழத் தேவையான ரசாயன வழிமுறையை ( மெட்டபொலிசம்) அவர்களுக்கு அளிக்கின்றது என்கிறது அந்த ஆய்வு.

இமய மலைப் பிரதேசத்தைப் பார்க்கவருபவர்களை விட, குறைந்த பிராணவாயு உள்ள சூழலில் ஷெர்பா மக்கள் மட்டும் மூச்சுத்திணறலை சமாளிக்க முடிகிறது என்பது நீண்டகாலமாக ஒரு புதிராக இருந்தது.

மலையேறுபவர்கள், குறைந்த பிராணவாயு இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவேண்டும். அதன்மூலம் பிராணவாயுவை கொண்டுசெல்லும் திறனை அதிகரிக்கமுடியும்.
இதற்கு மாறாக, ஷெர்பா மக்களின் ரத்தம் இயற்கையாகவே லேசானதாக, குறைவான ரத்த அணுக்கள் மற்றும் பிராணவாயுவை கொண்டதாக உள்ளது.
'` எவ்வளவு பிராணவாயுவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதைவிட, அதைவைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்பதை இது காட்டுகிறது,'' என்கிறார் புதிய ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ முரே.



ஷெர்பாக்களுடன் ஐரோப்பிய ஆராச்சியாளர்களின் பயணம்
"ஷெர்பா மக்கள் அசாதாரணமாகச் செயல்படுபவர்கள். குறிப்பாக உயர் இமாலய சிகரங்களில் அவர்கள் தனித்துவமானவர்கள். அவர்களின் உடல்கூறில் ஏதோவொன்று அசாதாரமாணதாக உள்ளது,'' என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.
இந்த அசாதாரணமான விஷயத்தை பற்றிய ஆராய்ச்சியை நடத்துவதற்காக எவெர்ஸ்ட் மலையின் அடிவாரத்தில், 10 ஆராய்ச்சியாளர்கள் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள் மற்றும் 15 சிறந்த ஷெர்பாகள் ஆகியோர் கொண்டு செல்லப்பட்டு , அந்த அதிக உயரத்தில் அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற ஜேம்ஸ் ஹார்ஸ்கிராஃப்ட் என்ற ஆராய்ச்சியாளருக்கு உலகின் தொலைதூர பகுதி ஒன்றை ஆராயக் கிடைத்த வாய்ப்பாக மட்டும் இல்லாமல், அங்கு வந்தது ஒரு அழுத்தமான விஷயமாக இருந்தது.
"இது மிகவும் அழுத்தம் தருவதாக இருந்தது. ஏனென்றால் இதுதான் எங்களுக்கு இமயமலையின் உயரமான பகுதியில் இருந்து தரவுகளை பெறுவதற்கான ஒரே வாய்ப்பாக இருந்தது,'' என்றார்.
ஜேம்ஸைப் பொறுத்தவரை, அவருக்கு, மற்றவர்களைப் போலவே, இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களில் தொடை பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தசை மாதிரிகளும் அடங்கும். சில மாதிரிகள் தங்களது பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சிகூடத்தில் வைத்து சோதனை செய்வதற்காக உறையவைக்கப்பட்டன; சில மாதிரிகள் எவெரெஸ்ட் மலைஅடிவாரத்தில் உள்ள
தற்காலிக ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டன. ''நாங்கள் காலை ஏழு மணிக்கு தொடங்கினோம். ஏனெனில் ஒரு மாதிரியை சோதனை செய்வதற்கு சுமார் நான்கு மணிநேரம் ஆகும்,'' என்றார் ஜேம்ஸ்.
''அப்போது வெப்பநிலையானது உறைநிலைக்குக் கீழ் 10 டிகிரி என்ற அளவில் இருக்கும். இதனால் நாங்கள் எங்களை காத்துக்கொள்ள உடலை மூடியவாறும் கையுறைகளையும் அணிந்துகொண்டும் ஆய்வு செய்வோம். பின் காலை பொழுதில் வெப்பநிலை உயரும்போது எங்களது ஆய்வுக்கு தேவையான பொருட்களை வெளியே எடுப்போம்,'' என்றார்.



தனித்துவமான மரபணுவுக்கு என்ன காரணம்?
புதிய தசை மாதிரிகளை உயிர்வேதியல் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஷெர்பா மக்களின் திசுக்கள், உடல் கொழுப்பு எரிவதை கட்டுப்படுத்தி, குளுக்கோஸ் நுகர்வவை அதிகரித்து, கிடைக்கும் பிராணவாயுவை சிறப்பாக பயன்படுத்தி கொள்கின்றன என்பது தெரிய வந்தது.
''கொழுப்பு என்பது ஒரு சிறந்த எரிபொருள் ஆனால் அது குளுக்கோஸை காட்டிலும், அதிமான பிராணவாயுவை எடுத்துக்கொள்ளும்,'' என்றார் பேராசிரியர் முரே. வேறு வகையில் சொல்லப்போனால், ஷெர்பாக்களின் உடல்கள், உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதை விட, உடலில் உள்ள சர்க்கரைச் சத்தை எரித்துக்கொள்வதன் மூலம், ஒரு ஆக்ஸிஜன் யூனிட்டை சுவாசிப்பதால் கிடைக்கும் கலோரிகளை அதிகப்படுத்திக்கொள்கின்றன.
இந்த முடிவுகள் லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் உள்ள பேராசிரியர் ஃபெடெரிகோ ஃபோர்மென்டியை கவர்ந்தன.
அவர் பத்தாண்டுகளுக்கு முன்பாக மலையேறுவது தொடர்பாக நடத்திய ஆய்வில் பிராணவாயுவை சென்சார்களை கொண்டு கண்காணித்து, ஷெர்பா மக்கள் தரைமட்டத்தில் வசிக்கும் மக்களைவிட 30 சதவீதம் அதிகமான ஆற்றலை அவர்களின் உடல் மூலம் தயாரிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார் .



ஷெர்பா மக்கள் நேபாளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்நதவர்கள். அவர்கள் சுமார் 6,000 ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த பகுதியான திபெத் பகுதியில் இருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பாக
நேபாளத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள். ஒரு பயனுள்ள மரபணு அவர்களுக்குள் உருவாக இது அதிகமான நேரம்தான்,'' என்றார் முர்ரே.
''இது ஒரு மரபணு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இவர்களின் ரத்த குழாய்களில் நல்ல ரத்த ஓட்டத்தைக் காண்கிறோம்; அவர்களுக்கு வளமான தசைநார்களின் வலையமைப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் திசுக்களுக்கு பிராணவாயு சிறப்பாக அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த மரபணுவும் அவர்களுக்கு சாதகமான பயன்களை வழங்கியுள்ளது,'' என்றார் முரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக