திங்கள், 29 மே, 2017

குஷ்பூ :இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது

மத்திய அரசு கால்நடைகளை வெட்ட தடை விதித்துள்ளதற்கு தமிழக முதலமைச்சரின் பதில் என்ன? என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மே 28-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதை ஏன் தடை செய்யவில்லை? இவ்வளவு பேசும் பாஜகவினர் தோல் பொருட்களை பயன்படுத்துவதை முதலில் கைவிட வேண்டும். லெதர் பைகள்,பெல்ட், செருப்பு போன்றவற்றை அவர்கள் பயன்படுத்தக் கூடாது.
மேலும்,மாடுகள் கண்காணிப்பு என்ற பெயரில் மனிதர்களை துன்புறுத்தி வருகிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக எத்தனை பேரை சாகடித்தார்கள்? இந்த சம்பவங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடந்தது. அதை ஏன் தடுக்கவில்லை? தனக்கு பயன்படாத மாட்டை அல்லது ஏதோ தேவைக்காக சாதாரண விவசாயி தனது மாட்டை விற்று சில ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறான். எப்படி சுற்றி வந்தாலும் அந்த விவசாயிகள் மடியில்தானே கை வைக்கிறீர்கள்?
இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் 40 சதவீத தோல் ஏற்றுமதி நடக்கிறது.
மேலும், இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்யப் போகிறார்? தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக அனைத்து கட்சிகளும் மாட்டிறைச்சிக்கான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் முதலமைச்சர் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் மத்திய அரசு மீதான பயம்தான். எதிர்த்தால் மத்திய அரசின் ஆதரவு கிடைக்காமல் போய் விடுமோ? எப்படியாவது அவர்கள் தயவை பெற்றாக வேண்டுமே என்று நினைக்கிறார்கள். முதலில் மக்கள் பிரச்சினையை பாருங்கள். அதன் பிறகு கட்சி பிரச்சினையை பாருங்கள்,”என்று அவர் தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக