திங்கள், 10 ஏப்ரல், 2017

இந்திய கப்பல் சோமாலியாவில் மீட்பு .. சீன இந்திய கூட்டு படைகள் அதிரடி

; புதுடில்லி: சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்ற வர்த்தக கப்பலை, இந்தியா, சீனா நாடுகளின் கடற்படையினர் இணைந்து, வெற்றிகரமாக மீட்டனர். இந்தியா - சீனா நாடுகள் இடையே, எல்லை பிரச்னை, புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா உதவி வருவது உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரசல் போக்கு காணப்படுகிறது. திடீர் தாக்குதல் : <>இந்நிலையில், ஏடன் வளைகுடா பகுதியில், நேற்று முன்தினம் இரவு, சோமாலியா கடற் கொள்ளையர்கள், வர்த்தக கப்பல் ஒன்றை கடத்தும் நோக்கில், திடீர் தாக்குதல் நடத்தினர்.அது குறித்து, இந்தியா, சீனா நாடுகளின் கடற்படை அதிகாரிகளுக்கு, அவசர தகவல் கிடைத்தது. சோமாலியா கடற் கொள்ளையர்களிடம் இருந்து, வர்த்தக கப்பலை காப்பாற்றும்படி, பிரிட்டனை சேர்ந்த, கடற்பகுதி வர்த்தக அமைப்பான, யு.கே.எம்.டி.ஓ., அவசர தகவலை அனுப்பி இருந்தது.
இதையடுத்து, இந்திய போர்க் கப்பல்கள், ஐ.என்.எஸ்.மும்பை, ஐ.என்.எஸ்.தார்கேஷ் ஆகியவை, உடனடியாக, வர்த்தக கப்பல் தாக்கப்பட்ட பகுதிக்கு விரைந்தன.
இந்திய ராணுவ ஹெலிகாப்டர்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. அவசர செய்தி கிடைத்த, சீன கடற்படையும், தன் பங்கிற்கு போர்க்கப்பலை வீரர்களுடன் அனுப்பி வைத்திருந்தது. இந்திய, சீன கடற்படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, சோமாலியா கடற்கொள்ளையர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். கடத்தப்படவிருந்த, வர்த்தக கப்பலையும், அதில் இருந்த மாலுமிகளையும், கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

பாராட்டு :

தாக்குதலுக்கு ஆளான வர்த்தக கப்பலில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த, 19 மாலுமிகள் இருந்தனர். அந்த கப்பல், மலேஷியாவின் கெலாங் பகுதியில் இருந்து, ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்ததாக, தகவல்கள் கிடைத்துள்ளன. வர்த்தக கப்பலை மீட்பதற்கு உதவியதற்காக, இந்தியா, சீனா நாடுகளின் கடற்படை வீரர்கள், பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர். இரு நாடுகளின் வீரர்களுக்கு, கப்பலின் கேப்டனும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.   தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக