புதன், 26 ஏப்ரல், 2017

வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட்டுகள் எம். எம். மணிக்கு எதிராக பெண்களை பற்றிய சர்ச்சையை கிளப்புகிறார்கள்

சதன் தக்கலை
கேரளாவில் சில தினங்களாக, கேரள மின்துறை அமைச்சர் பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசிவிட்டார் என்று எதிர் கட்சிகளும் வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களும் தொடர்ந்து ஊளையிட்டு வருகின்றன. கேரளத்தின் மூணார் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் மலயோர சிறு நகரம்…சுற்றுலாத்தலம், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி, டாடா போன்ற பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் தேயிலைத்தோட்டங்கள் இங்கு இருக்கின்றன. இங்கு எராளமான தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

இத்தகைய வளம் மிகுந்த பகுதியில் தங்கள் உடமைகளைப் பெருக்க, வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிக்க, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த நிலங்களில் பெரிய ரிசார்ட்டுகள் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க முயன்று வருகின்றன.
அந்தப் பகுதியிலும் இடுக்கி மாவட்டத்தின் பிற மலைப் பிரதேசங்களிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை CPIM-மும் இடதுமுன்னணி அரசும் போராடி வருகின்றன…ஒவ்வொரு காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் தனியாருக்கு சட்டவிரோதமாக பட்டா போட்டு கொடுத்த நிலங்களை அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, அதற்கடுத்து வரும் இடதுமுன்னணி அரசுகள் மீட்பதும் தொடர்கதையாகி வருகின்றன. ஆனாலும் ஆக்கிரமிப்புகள் பலவித தந்திரங்களைப் பயன்படுத்தி நடந்து வருகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அமைக்க என்ற பெயரில் ஏக்கர் கணக்கில் நிலத்தை அபகரிப்பதும் அதன் ஒரு பகுதியாகும்.
அதோடு வழிபாட்டுத்தலங்களை கேடயமாகப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை தொடரலாம் என்ற குதர்க்க தந்திரமும் அதில் மறைந்துள்ளது.
அத்தகைய முறையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுவதற்கு சில அதிகாரிகள் முயன்றனர். அதிகாரிகளில் சிலர் மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகிறார்கள். அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவது போல் நாடகமாடி சில அதிகாரிகள் இந்த வழிபாட்டுத் தலங்களை முதலில் அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கி, அதன் மூலம் சாதாரண மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்களின் கோபத்தைத் திருப்ப முயன்றுள்ளனர். அத்தகைய முயற்சியாக மூணார் பகுதியிலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தைத் தேர்ந்தெடுத்து அதை அகற்ற முயன்றனர். அந்த தேவாலயத்தின் முகப்பில் இருந்த பிரம்மாண்ட சிலுவையை நம்பிக்கையாளர்கள் மனம் புண்படும்படி ஆக்ரோஷத்துடன் உடைத்தனர். இதனை ஊடகங்கள் கேரள இடதுமுன்னணி அரசுக்கு எதிராக பயன்படுத்த முயன்றனர்.
ஆனால கேரள முதல்வர் உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டியது அத்தியாவசியம் ஆனால் யாருடைய நம்பிக்கையிலும் இந்த அரசு தேவையில்லாமல் தலையிட்டு நம்பிக்கையாளர்களை வேதனைப் படுத்தாது. அங்கு அந்த ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகள் மறைமுகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுக்கவே, இத்தகைய செயல்களை செய்கின்றனர் என்று கூறியதோடு ஆக்கிரமிப்பு அகற்றம் முறைப்படுத்தப் பட்டு மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்றும் ஆக்கிரமிப்பும் வாழ்க்கைக்காக குடியேறுவதும் இரண்டும் வெவ்வேறு என்றும் வாழ்வாதரத்திற்காக குடியேறிய மக்களுக்கு குடிமனைகளுக்குத் தேவையான அளவு நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்றும் மே மாதம் முதல் இந்தப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்காக ஒரு அரசு உயர்மட்டக்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இது நில மாபியாக்களுக்கும் கார்பரேட்டுகளுக்கும் பெரும் பின்னடைவானது. இந்தப் பின்னணியில் நில மாபியாக்களின் இத்தகைய நரிதந்திரங்களை அம்பலப்படுத்திப், CPIM சார்பில் தோழர் M.M.மணி ஒரு கூட்டத்தில் பேசினார். அதில் கார்ப்பரேட் ஊடகங்களின் ஊழியர்களும், நில மாபியா கைகூலிகளும், சில அரசு அதிகாரிகளும் யாரால் வழி நடத்தப்படுகிறார்கள் என்று அம்பலப்படுத்தினார். அதோடு அவர்கள் அனைத்துவிதமான கேளிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதையும் வெட்டவெளிச்சமாக்கினார்.சில ரிசார்டுகளும் கேளிக்கை விடுதிகளும் இவர்களுக்கு அத்தகைய வசதிகளை செய்து கொடுத்ததையும், இவர்கள் அத்தகைய கேளிக்கைகளில் பங்கேற்றதையும் கோடிட்டு காட்டினார். அப்போது ஏற்கனவே மூணார் கண்ணன்தேவன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் “பொம்பிளை ஒருமை” என்ற அமைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்ட காலகட்டத்திலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பிரச்சனையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு மூணாறில் முகாமிட்டு, நில மாபியா, கார்பரேட் ஆதரவு கும்பல் இதே கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ரிசார்ட்டுகளுக்கு பதிலாக காட்டிற்குள் அவற்றை செய்து கொண்டிருந்தார்கள் என்று அந்த நில அபகரிப்புக் கும்பலையே தாக்கிப்பேசினார்.
இந்த விடியோ காட்சியை மலையாள மனோரமா நியுஸ் தொலைக்காட்சி திரித்து “பொம்பளை ஒருமை” பெண்களை தான் தோழர் மணி குறிப்பிட்டதாக செய்தி பரப்பியது.”பொம்பிளை ஒருமை போராட்டக்காலத்திலும்” என்று குறிப்பிடுவதற்கு பதிலாக “பொம்பிளை ஒருமை நடந்த காலத்திலும்” என்று குறிப்பிட்டிருப்பார். அவ்வளவு தான்…
இதை அவரது பேச்சை முழுமையாக கேட்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும்…ஆனால் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் எடுத்து விபச்சார ஊடகங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றின. தோழர்.M.M.மணி ஒரு எளிமையான கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் என்பதும் அவரது இயல்பான கிராமப்புற மொழிநடை பற்றியும், அலங்காரமற்ற உரைகள் பற்றியும் அறிந்தவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதோடு அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் செய்தார்கள். அதோடு எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரசும் பாஜகவும் இதை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட முயன்றனர். சிலர் அவரது உருவத்தையும் நிறத்தையும் ஆதாரமாக வைத்து சமூக ஊடகங்களில் கேலிச்சித்திரங்களை உலாவ விட்டார்கள். தமிழகத்தில் இதை கேரள-தமிழ்நாடு மாநிலப் பிரச்சனையாக்க சிலர் முயன்று வருகிறார்கள். தோழர். M.M.மணி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூடத் தெரியாமல் மலையாளி என்று கருதி எதிர்ப்பது நகைப்புக்குரியது.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பல பொது இடங்களிலும் பெண்களை அவமானப்படுத்தியும் மானபங்கப் படுத்தியும் சர்ச்சைகளில் மாட்டிய, ராஜ்மோகன் உண்ணித்தான், பீதம்பரப் குறுப்பு, குஞ்ஞாலிக் குட்டி, அப்துல்லாக் குட்டி மற்றும் சரிதா நாயர் பிரச்சனையில் சிக்கியவர்கள் போன்ற உத்தமர்களே அதிகமாக வாய் கிழிய பேசி வருகிறார்கள்…
எல்லாவற்றுக்கும் மேலாக, ஷோபா சுரேந்திரன் என்ற BJP பெண் தலைவர், எம் எம் மணியை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமென்றால் அவரை “வைத்துக்கொள்ளுங்கள்” என்று என்று அதரவு தெரிவித்துப் பேசிய பெண் தொழிலாளர்களைப் பார்த்து எரிச்சலைடைந்து தரக்குறைவாக கூறியுள்ளார்… ஆனால் இதை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை என்பதும் இப்பிரச்சனையிலுள்ள உள்நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது. எனினும் இப்பொழுது உண்மை வெளியான பின்னர் தோழர் M.M.மணியை பலரும் ஆதரிக்கிறார்கள். ஆதரவு இயக்கங்கள் பெருகி வருகின்றன.
கேரள இடதுமுன்னணி ஏராளமான மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவது எதிரிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக தோழர்.M.M மணியின் பொறுப்பிலுள்ள, மின்சாரத் துறை ஒரு முக்கிய சாதனையயை நிகழ்த்தப் போகிறது. கேரளம் நாட்டிலேயே முழுமையாக மின்சார வசதி பெற்ற மாநிலமாக மாற இருக்கிறது.
தோழர். பிணராயி விஜயன் பாசிசத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களில் முக்கிய அடையாளமாக பலராலும் முன் நிறுத்தப்படுகிறார்… எதிர்காலத்தில் நாடு, பாசிச சக்திகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து இந்நாட்டையும் மக்களையும் மீட்கும் போராட்டங்களை வலுவாக நடத்தும் வல்லமை கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உள்ளது என்ற அபாயமணி எதிரிகளின் காதுகளுக்கு கேட்கத் தொடங்கிவிட்டது எம்பதன் அறிகுறியே இத்தகைய பொய்ப் பிரசாரங்கள் என்பதில் ஐயமில்லை.
சதன் தக்கலை, அரசியல் செயல்பாட்டாளர். thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக