புதன், 26 ஏப்ரல், 2017

இளங்கோவன் :4½ வருடங்களில் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்க இணைப்பு பிணைப்பு எல்லாம்

மனதில் பட்டதை மறைக்காமல் பேசி, அரசியல் களத்தை தெறிக்கவிடுபவர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். தற்போதைய அரசியல் சூழல் குறித்த நக்கீரன் கேள்விகளுக்கு அவர் தந்த பதில்கள்.     

அ.தி.மு.க.வுக்குள் நிலவிவரும் குழப்பங்களுக்கு பா.ஜ.க.தான் காரணம் என்கிறார்களே?  முதல் காரணம், ஜெயலலிதாவின் மரணம்தான். அதனைத்தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கவேண்டும் என்பதற்காகவும்; தனக்கு ஜால்ரா போடுகிறவரை, தனக்கு தலையாட்டுகிறவரை பதவியில் அமர வைக்கவேண்டும் என்பதற்காகவும்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டிவிட்டு ஓ.பி.எஸ். அணியும் இ.பி.எஸ். அணியும் ஒன்றுசேருவதை ட்ராமா என்று விமர்சிக்கிறது பா.ஜ.க. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் கமிஷனுக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டால் அவரை விலக்கி வைப்பதாக சொல்கிறார்கள். அதே, தினகரனின் பணத்தை ஆர்.கே.நகரில் பட்டுவாடா செய்த பட்டியலில் கிட்டத்தட்ட ஏழு அமைச்சர்கள் இருக்கிறார்கள். தினகரனை விலக்கவேண்டும் என்பவர்கள் முதலில்... விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் போன்ற அமைச்சர்களை எல்லாம் பதவியிலிருந்து தூக்கியெறியவேண்டும்.
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளுமே ஒன்றாவதற்கு உண்மையான காரணம், எம்.ஜி.ஆரின் அரசியலை தொடரவேண்டும் என்பதற்காகவோ ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறவேண்டும் என்பதற்காகவோ அல்ல. இருக்கின்ற 4½ வருடங்களில் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.   

பொறுப்பு ஆளுநரே போதும் என்கிறதே பா.ஜ.க.? தமிழகம் என்பது பெரிய மாநிலம். அதுவும், மக்கள் சந்திக்கின்ற கஷ்டங்கள், பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சினை, துணைவேந்தர்கள் நியமனம் என பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கும்போது தமிழகத்திற்கு தனி கவர்னர் இருந்தே ஆகவேண்டும். அதைச் செய்வதற்கு பா.ஜ.க. ஏன் தயங்குகிறது என்று புரியவில்லை. ஒருவேளை அவர்கள் சொல்லக்கூடிய காரியங்களை முடிக்கக்கூடியவர் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்புகிறது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தியிடம், கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர கோரிக்கை வைத்திருக்க வேண்டியதுதானே என்கிறாரே தமிழிசை?  காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருக்கும்போது தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்தார். பெரிய பெரிய பணக்காரர்களின் கடன்களையெல்லாம் வசூலிக்காமல் வராக்கடன் என்று ரத்து செய்யும்போது... கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கக்கூடிய, நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய  விவசாயிகளின் சுமார் 6,000 கோடி ரூபாய் கடனை ரத்து செய்வதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? விவசாயிகளை சந்திக்காத மோடி ஜனநாயக நாட்டில் வாழத்தகுதியற்றவர். 
சசிகலா சிறைக்குப் போவார்,…சின்னம் முடக்கப்படும்,… இடைத்தேர்தல் நிறுத்தப்படும்… என பா.ஜ.க. ஒவ்வொன்றையும் முன்கூட்டியே சொல்லி அடிக்கிறதே? அதுவும், 2021-க்கு முன்பே சட்டமன்றத்தேர்தல் வரும் என்கிறதே?  பா.ஜ.க. சொல்வது பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால், சசிகலா குற்றம் செய்திருக்கிறார். ஜெயலலிதாவும் சசிகலாவும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், சசிகலா சிறைக்குப் போகவேண்டியவர்தான். தினகரன் சிவாஜிகணேசனையே மிஞ்சிவிடும் அளவுக்கு நடிக்கிறார். அதேபோல், இரண்டு அணிகளாக பிரியும்போது குழப்பம் ஏற்பட்டு சின்னத்தை முடக்குவது நியாயமானதுதான். தேர்தல் கமிஷன் தன்னிச்சையாகத்தான் செயல்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறீர்களே?  துணைவேந்தராக இருந்த ராஜாராம் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி நீக்கப்பட்டார். இப்போது, மீண்டும் துணைவேந்தராவதற்காக 50 கோடி ரூபாயை எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துவிட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பது குறித்து நானும் பேசியிருக்கிறேன். ஆனால், இதுவரை அதற்கு எந்தவிதமான பதிலையும் கூறாமல் எடப்பாடி அரசாங்கம் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சியை மோடி நடத்துகிறார் என்கிறதே பா.ஜ.க.? என்னது காமராஜர் ஆட்சியை மோடி நடத்துகிறாரா? இப்படி பா.ஜ.க. சொன்னால் அது கேடித்தனம். எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உணவு என்பதுதான் காங்கிரஸின் கொள்கை. ஆனால், உணவு விஷயத்திலேயே யார், யார் என்ன சாப்பிடவேண்டும்? இறைச்சி சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சர்வாதிகார ஆட்சியை செய்கிறார்கள்.

ஐம்பதாண்டு காலமாகியும் தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்காததற்கு என்ன காரணம்?  காமராஜருக்குப் பிறகு காங்கிரஸை பொறுத்தவரை தமிழகத்தில் மிகப்பெரிய தலைவராக யாரும் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை என்பதுதான் காரணம்.

கலைஞர் நலமுடன் இருந்திருந்தால் இப்படியொரு அரசியல் சூழ்நிலை இருந்திருக்காது என்கிறார்களே?  ஆக்டிவ் பாலிடிக்ஸில் கலைஞர் அவர்களால் ஈடுபட முடியாதது தமிழ்நாட்டுக்கு துரதிர்ஷ்டம்தான். கலைஞர் இருந்திருந்தால் சூழ்நிலைகள் வேறுமாதிரி இருந்திருக்கும். 

ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? ஸ்டாலினை பொறுத்தவரை சிறந்த எதிர்க்கட்சித்தலைவராக இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் பண்பாடு என்பது, நாகரிகத்துடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.  இன்னும் கொஞ்சம் அவரது செயல்பாடுகளை வேகப்படுத்துவார் என்று நம்புகிறேன்.              
      

-சந்திப்பு: மனோசௌந்தர்
படம்: எஸ்.பி.சுந்தர் நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக