வெள்ளி, 21 ஏப்ரல், 2017

திராவிடத்தால் எழுந்தோம் - நிமிர்ந்தோம் என்பது எதிரிகளுக்கு தெரிந்திருக்கிறது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற அண்மைக்கால சிலரின் குரல் -ஆழமான  வரலாற்றுப் புரிதல் இல்லாமையாலோ -திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால பணியையும், பங்களிப்பையும், தாக்கத்தையும் தாண்டிக் கடைபரப்ப முடியாத விரக்தியாலோ அதன் மீது ஏதாவது குற்றப் பத்திரிகை படித்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியாலோ எழுந்த ஒன்றே!
திராவிட கட்சிகளின் ஆட்சியின் 50 ஆண்டுகள் என்பதைக் கடந்து, கடந்த ஒரு நூற்றாண்டுக்கால திராவிட இயக்கத்தின் பிரச்சாரங்களும், போராட்டங்களும் ஆட்சியின் விளைவுகளும் சாதாரணமானதல்ல. இன்னும் சொல்லப்போனால் கவுதம புத்தர் தொடங்கிக் கொடுத்த ஆரிய வருணாசிரம, கலாச்சார போர்த்தொடுப்பு எதிர்ப்பின் தொடர் பணியைத் தூக்கிச் சுமந்து வருவதுதான்  திராவிடர் இயக்கம்.

வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட ‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையை (20-12-1916) ஒருமுறை படித்தவர்களுக்குக்கூட அது தெளிவாகவே விளங்கும். சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மதம் இந்து மதம். உலகில் வேறு எங்கும் காணமுடியாத வெங்கொடுமை இது.சென்னை மவுண்ட்ரோடு ஜார்ஜ் டவுன்களில் நாய்களும், குஷ்டரோகிகளும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்ற விளம்பரப் பலகைகளை மாட்டி ‘பிராமணாள் ஓட்டல்கள்’ நடத்தப்பட்டதே - அந்த செய்தியெல்லாம் தெரியுமா? 

பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கும் உரிமை, பொதுக் கிணறுகளில், குளங்களில் அவர்கள் புழங்கும் உரிமை, பேருந்துகளில் பயணிக்கும் உரிமை, பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் கட்டாய சேர்ப்பு, மதிய உணவுத் திட்டம் இவற்றை எல்லாம் கொண்டுவந்தது திராவிடர் இயக்கக் கட்சியான நீதிக்கட்சி அல்லவா? (1924)t;">மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் தடையிருந்ததே. இவற்றையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் வேரோடு பெயர்த்து எறிந்த இயக்கம் எது?<">இந்தியைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடித்த தலைவர்கள் யார்? இயக்கம் எது? மடாதிபதிகளையும், சைவ மெய்யன்பர்களையும்கூட வீதிக்கு அழைத்து வந்து இந்தி எதிர்ப்புப் போர் நடைபெறுவதற்குக் காரணமாய் இருந்த இயக்கம் எது? அந்த இந்தி எதிர்ப்பு கொண்டுவந்த தமிழ் மறுமலர்ச்சியை மறுக்கத்தான் முடியுமா?  நமஸ்காரம் - வணக்கம் ஆனதே! உபந்நியாசம் -சொற்பொழிவு ஆனதே! அக்ராசனாதிபதி -தலைவர் ஆனாரே! வந்தனோபசாரம் -நன்றி என மறுமலர்ச்சி பெற்றதே! 

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்த சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைக் கொண்டு வருவதற்குக்கூட திராவிடர்  இயக்கம் போராட வேண்டியிருந்ததே! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆட்சியில்தானே! புலவர்கள் மத்தியில் இருந்த திருக்குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய திருக்குறள் மாநாடு நடத்தியவர் திராவிடர் தந்தை பெரியார் அல்லவா! (1940)

1938இல் ஆச்சாரியார் சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினாரா இல்லையா? 1952இல் மறுமுறை ஆட்சிக்குவந்தபோதும் 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு அல்லாமல், அரை நேரம் படித்தால் போதும். மீதி அரைநேரம் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்தால் போதும் என்ற குலக்கல்வித் திட்டத்தைப் பூண்டோடு ஒழித்து தமிழர்களின் வயிற்றில் பாலை வார்த்த தலைவரும் இயக்கமும் எது? நீதிக்கட்சி ஆட்சியில் 10,035 பள்ளிகள் தொடங்கப்பட்டன என்பது சாதாரணமா?

பார்ப்பனர் அல்லாதார் கல்வி உரிமைக்காக முதன்முதலில் வகுப்புரிமை ஆணை கொண்டுவந்தது நீதிக்கட்சியல்லவா? அந்த ஆணை செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தபோது தமிழ்நாட்டையே போராட்ட எரிமலையாக்கி முதன்முதல் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்?

தமிழ்நாட்டில் இன்று சட்டரீதியாகவே 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநிறுத்தச் செய்ததற்குக் காரணம் யார்? இந்திய அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் நூறு தர வரிசையில் தமிழ்நாட்டில் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளனவே - முதல் 16 வரிசையில் 8 கல்லூரிகள் தமிழகக் கல்லூரிகள் என்பது திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனையில்லையா?">இந்தியா முழுமைக்கும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டுவர 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் -நடத்திக் காட்டியவர் திராவிடர் கழகத் தலைவர் என்பதை ஊரும் உலகமும் அறியுமே! அதற்கு வழிசெய்த பிரதமர் வி.பி.சிங் அவர்களே அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைத் துறக்க வழி செய்த 1929ஆம் ஆண்டு மாநாட்டின் தாக்கத்தை இன்றளவும் தமிழ்நாட்டில் காண முடிகிறதே! தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்கமாகக் கருதும் நிலை வேறு மாநிலங்களில் உண்டா? மார்க்ஸியத் தலைவர்கள்கூட விதிவிலக்கு இல்லையே, இந்த அறிவுப் புரட்சியை நடத்தியது திராவிடர் இயக்கம் அல்லவா! இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை (இங்கிலாந்திற்கு முன்பாகவே கூட) 1921ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் நீதிக்கட்சி அல்லவா?

பெண்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக உரிமை, சொத்துரிமை, விவாக ரத்து உரிமை, விதவைத் திருமணம், இராணுவத்திலும்கூட பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்று அடுக்கடுக்கான தீர்மானங்கள் மாநாடுகளில் நிறைவேற்றியதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கு, முதலீட்டில் பங்கு என்ற புரட்சிகரமான தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் யார்? மூடப் பண்டிகைகளைக் கொண்டாடிவந்த நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல்நாளை பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடச் செய்த இயக்கம் எது?

தமிழ் மொழிக்குச் ‘செம்மொழி’ தகுதி வந்தது எந்த ஆட்சியில்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்டம் இயற்றியது எந்த ஆட்சி? &>தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை -தமிழும், ஆங்கிலமும்தான்’ என்று சட்டம் செய்தது முதல் அமைச்சர் அறிஞர் அண்ணாதானே! ஜாதி ஒழிப்பு இணையருக்குத் தங்கமும், ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையும், நாகம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள், டாக்டர் தருமாம்பாள், டாக்டர் மீனாம்பாள், டாக்டர் முத்துலட்சுமி, மணியம்மையார், சத்தியவாணிமுத்து போன்ற மகளிர் வீராங்கனைகளின் பெயரில் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களைத் தொகுத்து மாலையாக்கிக் கொடுத்தவர் முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அல்லவா!

கை ரிக்ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கூடுதல் சலுகைகள், குடிசைமாற்று வாரியம் என்று பொருளாதார வளர்ச்சித் திட்டத்திலும்கூட ஒரு சமூகநீதிப் பார்வை என்பது தி.மு.க. ஆட்சிக்கே உரித்தான தனித் தன்மையல்லவா?

தமிழர் வீட்டுத் திருமணத்திற்குத் தமிழர் தலைமை தாங்கும் அருகதையில்லை; தமிழுக்கும் ஆங்கு இடம் இல்லை என்றிருந்த அவல நிலைமைக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்திய தலைவர் யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த ஆட்சி எது? அந்தத் திருமணம் இந்தியாவையும் கடந்து சிங்கப்பூரிலும், மலேசிய நாட்டு அரசாங்கத்தாலும் சட்ட சம்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதே. இதனை இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில் சாதிக்க முடிந்ததா?<">சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி  ஏ.வரதராஜன் அமர்வதற்கு வித்திட்ட தலைவர் பெரியார் அல்லவா? அதற்கு செயலாக்கம் கொடுத்தவர்முதல் அமைச்சர் கலைஞர் அல்லவா? உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியும் அவர்தான் அன்றோ!

இந்துத்துவா  மதவாதம் தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமைக்கான அடித்தளத்தை அமைத்த -அமைத்துக்கொண்டிருக்கிற, போட்ட போட்டுக்கொண்டிருக்கிற இயக்கம் எது? பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் இந்தியாவிலேயே அமைதி காத்த மாநிலம் தமிழ்நாடு தானே!- அந்த நிலைக்குக் காரணம் யாது?;">தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் இவற்றைவிட வேகமாக, மேலாகச் செய்த  இயக்கம் உண்டா? தலைவர்கள் உண்டா? வாழ்நாள் எல்லாம் திராவிடர் இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய  ம.பொ.சி. கூட கடைசியில் அந்தத் திராவிட இயக்கத்தை சார்ந்து நின்றுதானே பதவிப் பெருமைகள் பெற்றார்.

திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. என்ன வருத்தம் என்றால், "இரட்டைக்குழல் துப்பாக்கி' என்றார் அறிஞர் அண்ணா. குறிப்பாக பகுத்தறிவுக் கொள்கைகளை மக்களுக்குப் பரப்புவது ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்காரர்களை பெரும்பாலும் ஆஷாடபூதிகளாக ஆக்கியிருக்க வேண்டாமே! அதுவும் அ.இ.அ.தி.மு.க. ‘அக்மார்க்’ முத்திரை ஆன்மிக தி.மு.க.வாகவே ‘அவதாரம்’எடுத்துவிட்டதே! ஆட்சிக் காலத்தில் திராவிட இயக்கம், சமூகநீதி தொடர்பான பாடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்காததும் பெரிய குறைபாடே! நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக