சனி, 22 ஏப்ரல், 2017

எவிடென்ஸ் கதிர்: எங்கள் சேரி மைந்தன் இளையராஜா இதுவரை நீ கலையாய் கொடுத்தாய் ! இனி களமாக கொடு !

Vincent Raj :  அவர் சேரியில் வந்தவர் என்று சொல்லிவிட்டால் எங்கே இசை அறிவு எல்லாம் சேரிக்கு சொந்தமானது என்று பேர் கிடைத்துவிடுமோ என்று நீங்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். உங்கள் ஊருக்குள் எங்கள் சேரியில்லை. எங்கள் சேரிக்குள் வேண்டுமானால் உங்கள் ஊரை வைத்துக் கொள்ளுங்கள்.
இசையை இதுவரை நீ கலையாய் கொடுத்தாய், இனி நீ களமாக கொடுக்க வேண்டும். உரிமையோடு கேட்கிறேன். முடியாது என்றால் பிரச்சனையில்லை. காற்று காசு பார்த்தா மூச்சுக்கு கொடுக்கிறது. எங்கள் சேரியும் அப்படித்தான்.
இனி இசையை களமாக கொடு
சமீபத்தில் அரசியல் சாசன மேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிய பட்டியல் சாதி மக்களிடம் இராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியிருந்தனர். அதாவது அம்பேத்கர் பாடலை ஒலிபரப்பக்கூடாது. மாற்று சமூகத்தினர் வசிக்கிற வீதிகளில் அம்பேத்கர் படம் ஏந்தி ஊர்வலம் செல்லக்கூடாது போன்ற பல கெடுபிடிகள் இருந்தன. இந்தியாவிற்கே அரசியல் சாசனத்தை எழுதிக் கொடுத்த அம்பேத்கர் அவர்களை பட்டியல் சாதி மக்களின் தலைவராக இங்கே சுருக்கி பார்க்கப்படுகிறது. அரசும் அப்படித்தான் மக்களிடத்தில் பரப்புரை செய்கிறது.

அரசியல் சாசனம் மட்டுமல்ல பொருளாதாரம், சமூகநீதி என்று உலகத்தின் முக்கியமான ஒரு ஆளுமை அம்பேத்கர். அத்தகைய ஒரு தலைவரை பொதுத் தலைவராக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை நம்மிடையே இல்லை. ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தலித் சமூகத்தில் பிறந்தவர் என்று சொல்கிறபோது, அப்படி சொல்லாதீர்கள். அவர் பொதுவானவர் என்கின்றனர்.
சமூகநீதியை வலியுறுத்திய ஒரு தலைவனை சாதியாகவும், இசையமைப்பாளர் ஒருவரை பொதுவாகவும் பார்க்கக்கூடிய மனநிலை நம்மிடம் எப்படி வருகிறது?
நான் சவால் விடுகிறேன். தலித் அல்லாத மற்ற சமூகத்தினர் அம்பேத்கரை வழிபடுகிற ஏற்றுக் கொள்கிற தங்கள் வீடுகளில் குடியிருப்புகளில் அவரது புகைப்படத்தை வைத்துக் கொள்பவர்களின் சதவீதம் இந்தியாவில் ஒரு சதவீதத்திற்கு குறைவுதான். ஆனால் தலித் குடியிருப்பில் பெரும்பாலும் அனைவரும் அம்பேத்கரை ஏற்றுக் கொண்டுள்ளனர். அது ஏன்?
இளையராஜா சேரிக்கு வரவேண்டும் அதுதான் அவரது பிறப்பிடம் என்று சொல்கிறபோது, இளையராஜாவை சாதிக்குள் அடக்கப்பார்க்காதீர்கள் என்று எகிறுகிறார்கள். சேரி என்பது சாதியா? இங்கே ஊரும் சேரியும் என்று சொல்லப்படுகிறது. ஊர் என்றால் பொதுவானவர்கள். சேரி என்றால் பட்டியல் சாதி மக்கள் வசிப்பவர்கள். ஊரில் தான் சாதி இருக்கிறதே தவிர சேரியில் சாதியில்லை. ஊர் ஒடுக்குகிற சக்தி. சேரி பாதிக்கப்படுகிற சமூகம். ஆகவே ஊர்தான் சாதியே தவிர சேரி சாதியல்ல.
போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்கிற பாடலை உருவாக்கியதால் அவர் பொதுவானவர். கண்ணுபடிப் போகுதய்ய சின்னக் கவுண்டரே என்கிற பாடலை உருவாக்கியதிலும் அவர் பொதுவானவர். ஒருவேளை போற்றிப்பாடடி பெண்ணே பள்ளர் காலடி மண்ணே அல்லது போற்றிப்பாடடி மண்ணே பறையர் காலடி மண்ணே என்று இளையராஜா பாடலை உருவாக்கியிருந்தால் அவரை இந்த சமூகம் சாதியாக பார்த்திருக்கும்.
ஒரு நண்பர் என்னை தொலைபேசியில் அழைத்து நீங்கள் இளையராஜா சேரிக்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்ததை என்னால் ஏற்க முடியவில்லை. நான் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு அவரை பிடிக்கும் என்றார். அதற்கு நான், உங்களுக்காக அவர் பாட்டு போட்டதனால் அவரை உங்களுக்கு பிடிக்கும். எங்களுக்காக அவர் பாட்டு போடவில்லை என்றாலும் அவரை எங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னேன். மன்னித்துவிடுங்கள் அண்ணா என்று கூறி போனை துண்டித்துவிட்டார்.
இளையராஜா ஒரு இசையமைப்பாளர். ஒரு கலைஞன். அவரை எதற்கு சேரிக்கு அழைத்து சங்கடப்படுத்த வேண்டும். அவரது இயல்பிலேயே விட்டுவிடுங்கள் என்று பலரும் எனக்கு கூறுகின்றனர். ஆனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து எங்கள் மனதில் இருந்த ஆதங்கத்தை நீங்கள் கொட்டிவிட்டீர்கள். அவர் சேரிக்கு வந்துதான் ஆக வேண்டுமென்று வலுவாக என்னிடத்தில் கூறினார்கள்.
இளையராஜா சேரிக்கு வந்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று நான் சொல்லவில்லை. தீண்டப்படாத எங்கள் சேரி பகுதிக்கு உலகத்தையே இசையால் ஆட்டிப்படைக்கும் ஒரு கலைஞன் உறவுரீதியாக வருகை தந்தால் அது பெருமையாக இருக்கும். வலிமையற்ற மக்கள் எங்களை ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே, எங்களை சாதி ரீதியாக புறம் தள்ளியிருக்கிறீர்களே. ஆனால் உங்களுக்கு இசையை சொல்லிக் கொடுத்த கலைஞன் எங்கள் சமூகத்தில் இருந்து வந்தவன் என்று சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் அவ்வளவுதான். அவரை நான் அம்பேத்கர் போன்றோ, ரெட்டமலை சீனிவாசன் போன்றோ இமானுவேல் சேகரன் போன்றோ, ஒன்டிவீரன் போன்றோ பார்க்கவில்லை.
எனக்கு இசை முக்கியமா சமூக நீதி முக்கியமா என்று வருகிறபோது சமூக நீதிதான் முக்கியம் என்பேன். உங்களுக்கு இசையை ரசிக்கிற அளவிற்கு நேரம் கிடைப்பதற்கு காரணம் நீங்கள் பிறந்த சமூக சூழல். ஆனால் எங்களுக்கு இசையை ரசிக்கிற அளவிற்கு நேரம் இல்லை. வீட்டை எரிக்கிறான், பாலியல் பலாத்காரம் செய்கிறான், சாதி ரீதியாக தீண்டாமை பார்த்து கேவலமாக ஒதுக்கி வைக்கிறான். ஆகவே எங்களுக்கு சமூக நீதிதான் முக்கியம். எங்கள் கலைகள் எங்கள் விடுதலையை வென்றெடுப்பதில் தான் முதன்மை பெறவேண்டுமென்று விரும்புகிறேன்.
என் தம்பி ரஞ்சித் இயக்கிய மூன்று படங்களும் தலித் வாழ்வியலை கூறிய படங்கள். அந்த படங்கள் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படங்கள் தான். கலை என்பது சாதியால் மிகுந்து கிடந்தது. அந்த கலையை தன்னுடைய தலித் அடையாளத்தின் மூலம் வென்றெடுத்து சாதியை உடைக்கிற வேலையை ரஞ்சித் செய்தார். அதனால் தான் ரஞ்சித்தை எனக்கு பிடிக்கிறது. ரஞ்சித்தை சாதி வளையத்திற்குள் நாங்கள் அடக்கவில்லை. யாரும் சொல்லாத அல்லது வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்கிற எங்கள் வாழ்க்கையை அவர் சொல்லுகிற போது ஏழை எளிய தலித் மக்கள் பெருமை கொள்கின்றனர்.
இளையராஜா அப்படி சொல்ல வேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. அவர் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டவர். அதை எல்லாம் நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. அவருக்கு வயது 75 கடந்து விட்டது. சாதிய அடக்குமுறையை எதிர்கொண்டு சினிமா உலகத்திற்கு சென்றவர், ஒரு கட்டத்தில் ஆதிக்கசாதியினரும் சரி தலித்துகளும் சரி தன்னை நெருங்க முடியாமல் ஒரு வளையத்தை போட்டுக் கொண்டவர். அது அவரது தனிமனித சுதந்திரம். ஆனால் இதற்கு மேலும் ஏன் மௌனம் காக்க வேண்டும்? நீங்கள் ஒடுக்குகிற சேரியில் தான் என் இசை வந்தது. அங்கிருந்து தான் நான் வந்தேன் என்று அவர் சொல்ல வேண்டுமென்பது எங்களது விருப்பம். முடிவு அவர் எடுக்கப்பட்டும்.
நீங்கள் பதட்டமடைய வேண்டாம். அவர் சேரியில் வந்தவர் என்று சொல்லிவிட்டால் எங்கே இசை அறிவு எல்லாம் சேரிக்கு சொந்தமானது என்று பேர் கிடைத்துவிடுமோ என்று நீங்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். உங்கள் ஊருக்குள் எங்கள் சேரியில்லை. எங்கள் சேரிக்குள் வேண்டுமானால் உங்கள் ஊரை வைத்துக் கொள்ளுங்கள்.
இசையை இதுவரை நீ கலையாய் கொடுத்தாய், இனி நீ களமாக கொடுக்க வேண்டும். உரிமையோடு கேட்கிறேன். முடியாது என்றால் பிரச்சனையில்லை. காற்று காசு பார்த்தா மூச்சுக்கு கொடுக்கிறது. எங்கள் சேரியும் அப்படித்தான்  vincent raj  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக