திங்கள், 10 ஏப்ரல், 2017

கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் மண்ணின் மைந்தர்களை ... தருண் விஜயின் உண்மை முகம் !

என்ன செய்தாலும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் ஆதிக்க உணர்வை எங்கேயும் மறைக்க முடியாது என்பதற்கு தருண் விஜயின் நழுவாத நாக்கு ஒரு சான்று!
வினவு: ஃபேஸ்புக்கில் தருண் விஜயின் திமிருக்கு விதவிதமான எதிர்வினைகள் வந்து கொண்டே இருக்கின்றன
"தருண் விஜயைக் கழுவி ஊற்றும் தமிழ் பேஸ்புக்" நாங்கள் என்றால் சிவப்பானவர்கள் இந்தியர்கள், அவர்கள் என்றால் கருப்பர்கள் தென்னிந்தியர்கள் என்று நனவிலி மனதிலிருந்து உண்மை பேசியிருக்கிறார் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்! என்ன செய்தாலும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் ஆதிக்க உணர்வை எங்கேயும் மறைக்க முடியாது என்பதற்கு தருண் விஜயின் நழுவாத நாக்கு ஒரு சான்று! ஃபேஸ்புக்கில் தருண் விஜயின் திமிருக்கு விதவிதமான எதிர்வினைகள் வந்து கொண்டே இருக்கின்றன! அவற்றில் எம் கண்ணில் பட்டவைகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.


தருண் விஜய் குரலில் பேசும் திமுக எம்.பி!
தருண் விஜய் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் எனவும் கறுப்பர்கள் மட்டமானவர்கள் என்ற அர்த்தத்திலும் கூறியிருக்கிறார். தருண் விஜய்க்கு பதில் சொன்ன இளங்கோவனும் தனது ஒரிஜினல் நிறமான கருப்பை மட்டமாக நினக்கிறார். “தென்னிந்தியர்கள் அனைவரும் கறுப்பர்கள் அல்ல கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெள்ளையானவர்களே” என்பது கருப்பை மட்டமாக, தாழ்வாக நினைக்கும் மனதில் வெளிப்பாடுதான்.
– Arul Ezhilan
“நாங்கள் கறுப்பர்களுடன் வாழ்கிறோம் என்கிறார் தருண் விஜய், நான் கேட்கிறேன் நாங்கள் என்றால் யார்? ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. ஆகியோர் மட்டும்தான் இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறீர்களா?” – ப.சிதம்பரம்
– Tamilnadu Congress Committee
வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் வரலாற்று ரீதியாக இருந்த முரணை தருண் விஜய் இன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாவம்..! இங்குள்ள நம்மூர் பாஜகவினருக்கு அடிமை விசுவாசம். அதனால் தான் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புனிதமாக கருதுகிறான்.
தென்னிந்திய கறுப்பர்கள் என தருண் விஜய் யாரை சொல்லுகிறார் ? நமது தமிழிசை உட்பட உள்ள பாஜகவினரையும் சேர்த்து தான் சொல்லுகிறார். நாங்கள் ஒரு தலித்தான கங்கை அமரனை தேர்தலில் விட்டிருக்கோம் என வானதி புளகாகிதம் அடையும் போது கங்கை அமரன் மீது பெரியாரும் மார்க்ஸும் என்ன மாதிரியான பார்வையை வீசியிருப்பார்கள் ?
ஆர்.கே நகரில் சுய மரியாதையை கங்கை அமரன் அடகு வைத்தார் எனில் தற்போது சுயமரியாதையை தமிழிசை, பொன்னார் போன்றோர் அடகு வைக்கின்றனர். தமிழிசையும், பொன்னாரும் குமரி மாவட்ட பின்னணியில் வந்தவர்கள் ஆனதால் பெரியாரை தெரியாமல் கூட போகலாம். ஆனால், அய்யா வைகுண்டரும், அய்யங்காளியும், சட்டம்பி சாமிகளும் கற்று தந்த சுயமரியாதையை இவ்வளவு வேகமாக பணயம் வைக்க வேண்டிய தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.
பல நேரங்களில் பிராமணீய தலைமை இன்னும் தெளிவாக சொன்னால் ஆர் எஸ் எஸ் தலைமை மத்திய ஆசியாவிலிருந்து வந்த வந்தேறிக் கூட்டம் தான் என்பதை தங்களையும் அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக வட இந்திய தலித்கள் மற்றும் தென்னிந்திய மக்கள் தொடர்ந்து வருகிறார்கள். கறுப்பான தோற்றமிக்கவனாக சித்தரிக்கப்பட்ட மன்னன் மாவேலியை வஞ்சனையாக கொன்ற ஆரியன் வாமனனின் வழியாக இந்த முரண்பாட்டின் வரலாறு தொடருகிறது.
இன்று தருண் விஜய் மூலம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. நான் தருண் விஜயை மத்திய ஆசியாவிற்கு திரும்பி செல்லுங்கள் கூற மாட்டேன். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மக்களின் வரிசாக வந்தவர்கள் நாங்கள். எங்களை அடிமைப்படுத்த வேண்டாம். –
– Govindaraj Ramaswamy
செவப்பு…தருண் விஜய், பி ஜே பி, M P யின்….திராவிட கருப்பு விமர்சனத்துக்கு….. தமிழிசையும், பொன்னாரும் சொல்லும் பதில் என்ன….? நாங்களும் சிகப்புத்தோலுதான் என்று சொல்லப்போகிறீர்களா…..? நீங்கள் பி.ஜே.பியில்…பட்டம்.. பதவியில்…. இருந்தாலும்…அவர்களுக்கு நீங்கள்…..சூத்திர திராவிடர்களே….
புரிஞ்சுதா…..
– Msrm Murugan
தருண் விஜய் தனது ஆர்எஸ்எஸ் வளர்ப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.இப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
இதை மறைத்துக்கொண்டு நடிப்பதற்கும்.தமிழர் ,திருவள்ளுவர் போன்ற நாடகங்களை நாமும் பார்த்தோம். எல்லாம் பயிற்சிதான்.
மக்களை நிறம்,சாதி,மதம்,பாலின பாகுபாட்டுடன் நடத்துவதே அவர்கள் கொள்கை. உண்மையில் அவர்கள் பின்பற்றும் நூல் பகவத்கீதை அல்ல மனுஸ்மிருதி. அவர்கள் சொல்கிற ஹிந்துத்துவாவும், நாம் நினைக்கிற இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அங்கே மக்கள் இந்துக்கள் அல்ல கருப்பர்களும் இன்னபிறவும். இதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
– jothimani Sennimalai

மதிப்பிற்குரிய தருண் விஜய் அவர்களே…
பொறுப்பான மனிதராய் இருந்தால்… நாங்கள் நிறவெறி இன்றி வாழ்கிறோம் என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.. எதற்கு தென் இந்தியர்களை கருப்பாக இருப்பதாக கூற வேண்டும்.. என்னவோ பெருந்தன்மையாக இவங்க கூட எல்லாம் நாங்க வாழுறோம்ன்னு சொல்லிக்கிறா மாதிரி இருக்கு. இந்தியாவை தாண்டி விட்டால் நீங்களும் ப்ளடி பிளாக் இந்தியன்தான் என்று மறந்து போனது ஏன்..
திருக்குறள் படித்தால் மட்டும் திருவாளர் ஆகி விட முடியாது என்பதற்கு நீங்கள் உதாரணம்….
– Manojkumar Pandian

தருண் விஜய் அன்று திருவள்ளுவரை அவமானப்படுத்தினார் – இன்று நம்மையே அவமானப்படுத்துகிறார். இதற்குக் கீழாக அவமானப்படுத்த இயலாது, தமிழனுக்கு மான உணர்ச்சி குறைகிறதோ? ஆன்மீகம் நம் அறச்சீற்றத்தை குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.
  • ராஜா ஜி  feeling sad.

தருண் விஜய் சொன்னது கூட கவலை இல்லடா
ஆனா அதுக்கு நம்ம அக்கா எமிஜாக்சன் தமிழைசையும்,டிகாப்ரியோ பொன்னரும் கொடுக்க போற விளக்கத்த நினச்சாதான் பயம்மா இருக்கு
– Alagendran R Alagendran R

தருண் விஜய்: நுண்ணிய நூல் பல கற்பினும்…
தருண் விஜயுடைய திருக்குறள் ஆர்வம், தமிழ்க்காதல் இதையெல்லாம் பெரும்பாலும் நான் கிண்டலடிப்பதில்லை. மனுசங்களுக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்கலாம்.
கடந்த முறை சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கே வைத்து ஒரு நிகழ்வில் தருண் விஜயின் பேச்சைக் கேட்டேன். தமிழ், தமிழர் வரலாறு, ராசேந்திரசோழன், வேலு நாச்சியார் என எல்லாவற்றையும் பேசினார். தமிழர்களின் வரலாற்றை அறியாத வட இந்தியர்களான தாங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று கூட கூறினார்.
தமிழ்நாட்டில் காவி அரசியலை நுழைப்பதற்கான சதிகளில் ஒன்றுதான் தருணுடைய செயல்பாடு என்பதைக் கூட நாம் பொருட்படுத்தாமல், தருணுக்கு உண்மையிலேயே குறள் மீது பற்று இருக்கிறது, தமிழ் தருண் என்று அழைக்கப்படுவதில் பெருமை கொள்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் தனனை மிகவும் பாதித்ததாகவும் உத்தரகாண்டில் தலித்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டதற்குக்கூட அந்த குறள்தான் காரணம் என்றும் அந்தக் கூட்டத்தில் கூறினார். நான் கூட கொஞ்சம் நெகிழ்ந்து போய்விட்டேன்!
ஆனால் ஒரு சங்கியால், ஒரு சாவர்ண கருத்தாளரால், ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தவாதியால் – அதில் ஊறிப்போன ஒருவரால் – ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை உண்மையிலேயே உட்கிரகிக்க முடியுமா?
முடியாது என்பதுதான் உண்மை. அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள்தான் அதற்கான ஒரே அத்தாட்சி. அவர் தென்னிந்தியர்களை கருப்பர்களாகப் பார்ப்பது மட்டும் சிக்கல் இல்லை, இந்தக் கருப்பர்களோடு நாங்கள் இணைந்து வாழவில்லையா என்று அவர் கேட்கிறாரே அந்த பார்வைதான் சங்கியின் பார்வை.
இந்தியா என்பது இந்து மேல்சாதிக்கார்ரகள் – மூவர்ணர்களின்- நாடு என்பதுதான் அவரது பார்வை. அவர் தென்னிந்தியாவிலும் வடக்கு மத்திய மாநிலங்களிலும் கோடிக்கணக்கான கருப்புத் தோலர்களை சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. நாங்கள் வெள்ளையர்கள், நீங்கள் கருப்பர்கள் என்கிற எதிர்வை அவர் முன்வைத்திருக்கிறார். இதுதான் தருண். இதுதான் ஆர்எஸ்எஸ்.
எங்கிருந்து வந்தது இந்த வெள்ளை vs கருப்பு பிரிவு? இது பழைய பிரிவா? கார்மேனியனையும் பச்சை மா மலை போல் மேனியை உடையவனையும் காளியையும் கும்பிட்டவனிடமிருந்து வந்த பிளவு அல்ல இது. ஒரே சமயத்தில் பொன்னார் மேனியனையும் காக்கை நிறத்துக் கண்ணனையும் கும்பிட்டவர்களின் குரலா இது?
உண்மையில் ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவா என்பது மேலைநாட்டு ஆரியவாதத்திடமிருந்து, வெள்ளை நிறவெறி சித்தாந்தங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது. தருணின் ஆழ்மனத்திலுள்ள வெள்ளை vs கருப்பு என்பது பாசிசத்தின் நாங்கள் vs நீங்கள் என்ற உளவியலோடும் ஐரோப்பிய நிறவெறியோடும் இணைகாண வேண்டிய ஒன்று.
இந்திய வர்ண சித்தாந்தமும் ஐரோப்பிய வண்ண சித்தாந்தமும் இணைந்த ஒரு புள்ளியில்தான் இந்தியாவில் தோலின் நிறம் பார்க்கப்படுகிறது. அதை மேலும் அழகூட்டுகிறது சிவப்பழகு மோகச் சந்தை.
உண்மையில் இந்தியாவில் யாரும் கருப்பும் அல்ல வெள்ளையும் அல்ல என்பான் அமெரிக்கன், நாமெல்லாம் அவனுக்கு colored people.
தோலின் நிறம் பற்றிய தமிழர்களின் கலாச்சாரப் பதிவுகள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். எப்போது தோல் நிறம் சார்ந்த உயர்வு, தாழ்வு மனப்பான்மைகள் நம்மை பீடிக்க ஆரம்பித்தன என்பதைப் பார்க்கவேண்டும்.
தருணுடைய குரல் என்பது வட இந்திய / தென் இந்திய மேல்சாதிகளின் குரல்தான். அது வண்ணம் தொடர்புடையது மட்டுமல்ல, வர்ணம் தொடர்புடையது.
ஆனால் அவர் தென்னிந்திய “வெள்ளைத் தோலர்களை” சட்டென்று கைகழுவிவிட்டார் என்பதில் இங்கு பலருக்கு அவர் மீது கோபம் ஏற்படலாம். நாங்களும் வெள்ளைதான் அல்லது சிவப்புதான் என்று அவர்கள் குதிக்கலாம்.
இந்துவத்துவ சக்திகளின் கலாச்சார தேசிய அடையாளங்களில் ஒன்றாக திருக்குறளை ஆக்க முயன்ற தருணால், ஒருபோதும் திருவள்ளுவரை புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் உண்மை.
இறுதியாக ஒரு திருக்குறளைப் பார்ப்போம்.
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்”
இதற்கு தமிழ்நாட்டு ‘வெள்ளையர்’ (நன்றி: டிகேஎஸ் இளங்கோவன்) கலைஞர் எழுதிய உரை:
“கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.”
இங்கே உண்மை அறிவு என்பது என்ன? ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிக்கு உண்மை அறிவு என்பது என்னவாக இருக்கமுடியும்?
–  ஆழிசெந்தில்நாதன்

தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பை விரிவுபடுத்துவோம்:
இதுவும் நன்மைக்கே. ஆம். பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான தருண் விஜய் சொன்னது நன்மைக்கே. நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால், தென்னிந்திய கருப்பர்களோடு சேர்ந்து வாழ்வோமா? என்று அவர் சொன்னதன் பிறகு, தென்னிந்தியாவில் பலருக்கும், பரந்த இந்த இந்திய தேசத்தில், தங்களுக்கான அடையாளம் என்னவென்று புரியத் தொடங்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன், தமிழ் நாட்டின் எல்லை ஓர மாவட்டங்களில், மைல்கற்களில் ஆங்கிலத்தை அழித்து, ஹிந்தியை எழுதி, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பை தமிழ் நாட்டில் மீண்டும் புதுப்பித்துடும் ஓர் வாய்ப்பை தந்தார்கள்.
ஹிந்தி படித்தால்தான், இந்தியாவில் சிறப்பான கல்வியும், வேலையும் கிடைக்கும் என்ற பொய் தோற்றத்தை, மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்லூரி தரப்பட்டியல் அம்பலப்படுத்தி விட்டது. முதல் நூறு தரவரிசைக் கல்லூரிகளில், முப்பத்தேழு கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை; அறுபத்து ஏழு கல்லூரிகள் தென்னகத்தைச் சேர்ந்தவை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்போது தன் பங்குக்கு, தருண் விஜய், தென்னிந்தியர்களைக் கருப்பர்கள் என்ற உண்மையைக் கூறி உள்ளார். இராமாயணம் எனும் கதையே, ஆரியர் திராவிடர் போராட்டம்தான் என இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் தெளிவாக்கினார்கள். அதில் வரும் அரக்கர்கள், குரங்குகள் அனைவரும் திராவிடர்களைக் குறிப்பனவே என்றும் கூறினார்.
ஏதோ தென்னிந்தியாவின் கருப்பர்களை வட நாட்டில் வாழும் இவர்கள் சுமந்து செல்வதுபோல் தருண் விஜய் கருத்தினைக் கூறினார். இப்போது எதிர்த்தவுடன், பின்வாங்கி உள்ளார். எனினும், உண்மை நிலை என்ன?
கல்வி, வேலைவாய்ப்பு என தமிழகமும், தென்னிந்தியாவும், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே எடுத்துக் காட்டுகின்றன.
GDP எனப்படும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் எந்தெந்த விகிதத்தில் தங்கள் பங்களிப்பைத் தருகின்றன என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால், தென்னக மாநிலங்களின் பங்களிப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திடுகிறது என்பது விளங்கும்.
இந்தியா முழுமைக்குமான முப்பத்திரெண்டு மாநிலங்களும் சேர்த்து 161 லட்சம் கோடி ரூபாய்; இதில் தென்னகத்தின் பங்கு 48.71 லட்சம் கோடி ரூபாய். அதாவது, மொத்த ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கு தென்னக மாநிலங்கள் அளிக்கின்றன.
இத்தகைய பங்களிப்பை தென்னக மாநிலங்கள் தந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு இதே அளவில் மத்திய அரசால் திரும்பவும் தரப்படுகிறதா? என்பதை தென்னக மாநில அரசுகள் ஆராயும் காலம் வந்துள்ளது.
திராவிடர் இயக்கம் துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1917-ல் இங்கே துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை கூட்டமைப்பு, பின்னாளில் நீதிக்கட்சியாக ஆட்சியைப் பிடித்து, அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக, பொருளாதார புரட்சிக்கு வித்திட்டது.
நூறாண்டு முடியும் இன்றைய நிலையில், இதன் நீட்சியாக தென்னக மாநிலங்களோடு, தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பை புதுப்பித்து, தென் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க, இதுவே நல்ல தருணம்.
–  திராவிடர் கழகம் ( DK )
****
யார்டா அது தருண் விஜய் எப்டியாது நாக்கபுடுங்குற மாதிரி இழுத்து திட்டிபுடனும்-ங்கிற கனலாக எரிகிற கோபத்தோடு போனேன். அங்கிட்டு பாத்தாக்க பயபுள்ள அம்பது நூறு லைக் வாங்கிண்டு பொழப்பு நடத்துது. நம்ம ரேஞ்சுக்கு இந்த சல்லிப்பயலயா திட்டுறதுன்னுட்டு அப்டியே உ டர்ன் அட்ச்சு வந்துட்டேன்.
–  மாக்கான் மாக்ஸ்

தருண் விஜய் உள்நோக்கத்தோடு அந்த கருத்தை சொன்னாரா? அல்லது அவருடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா என்று தெரியாது. ஆனால் தமிழர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடக் கூடிய அளவுக்கு அவர் தகுதியானவர் அல்ல என்பதை தாமதமாக இருந்தாலும் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி..
–  $Honey Kumar

ஆப்பிரிக்க நாட்டவர் மீது டில்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், “நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?” என்று கேட்டுள்ளார்.
உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும். கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் காரரான இந்த மனிதரைத்தான் புனிதராகக் காட்டும் முயற்சியில் இங்கு சிலர் ஈடுபட்டுள்ளனர்.
கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வங்கி அதிகாரிகளைப் பார்த்து, ‘பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா?’ என்று கேட்டார் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அதுபோல், ‘தமிழுக்கு அரண் தருண்விஜய் என்றும் தலித்களின் குரல் தருண்விஜய் என்றும் கூறி முலாம் பூசுவதன் மூலம், அவரது வர்ணாசிரம கொள்கை மாறிவிடுமா?’ என்பதை, அவருக்கு கொடி பிடிக்கும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்.
–  Aloor Sha Navas

ஆர்எஸ்எஸ்-க்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று டெர்ரஸ் பேஸ். மோகன் பகவத்திலிருந்து துவங்கி எச்.ராஜா வரை உதாரணங்களை நாம் கூறமுடியும். மற்றொன்று பேபி பேஸ். வாஜ்பாயிலிருந்து துவங்கி தருண் விஜய் வரை. சண்டமாருத கலவர உரை வீச்சு செய்து கிலியை உருவாக்குவது டெர்ரல் முகங்கள். தடுமாற்ற மாயையை உருவாக்கி மீன்பிடிப்பது குழந்தை முகங்கள். 20 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இதழான பஞ்சசன்யாவின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் தருண் விஜய். காவியிசத்தின் தத்துவார்த்த எதிரிகளை வீழ்த்துவதற்கு நாக்பூர் பீடத்தால் தீட்சையளிக்கப்பட்டு பஞ்சஜன்யாவிலிருந்து 2008 இல் விடுவிக்கப்பட்டு சமூகத்தின் பல தளங்களிலும் வேலை செய்ய அனுப்பப்பட்டவர்தான் தருண்விஜய்.
நீண்ட காலம் சுதந்திர இதழாளராக பல மொழி ஏடுகளில் எழுதிய காலங்களில் 2013 செப்டம்பரை வரை தருண் விஜய் தமிழை அல்லது திருவள்ளுவரைப் பற்றியோ அப்படியொன்றும் புகழ்ந்து பிரமாதப்படுத்தி எழுதியவரல்ல. பேசியவரும் அல்ல. 13.9.2013 இல் பாராளுமன்றத்தில் தமிழைப் பற்றி முதன்முறையாக தருண் விஜய் பேசியபோது தமிழ்கூறும் நல்லுலகின் முக்கிய புள்ளிகளும் கூட க்ளீன் போல்டானார்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவை இழந்தார்கள். 2014 பாராளுமன்ற மற்றும் 2016 தமிழ்நாட்டின் தேர்தல்களில் தமிழ்மக்களின் கவனத்தை பெற தமிழ்நாட்டின் ஆர்எஸ்எஸ்-இன் காவியிச அஜெண்டாக்களை நோக்கி பைய்யப் பைய்ய முன்னேற பயன்படுத்தப்பட்ட பல உத்திதான் மிக முக்கியமானதுதான் தருண் விஜய்யின் திடீர் தமிழ் பாசம் என்பதை இடதுசாரிகள் மட்டுமே அம்பலப்படுத்தினார்கள்.
இப்போது மீண்டும் தருண் அம்பலமாகி உள்ளார். நொய்டாவில் நைஜீரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று தருண்விஜய் பேசியவர் இந்தியர்களை இனவெறியர்கள் என்று கூறுவதில் நியாயமில்லை தாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ்வோம் என்று தன்னிலை மறந்து காவியிச உளநிலையை ஒப்புவித்துவிட்டார்.ஆர்எஸ்எஸ்-இன் டெர்ரர் முகங்களை பாசிசனத்தின் இந்திய முகங்கள் என எளிதில் கண்டு கொள்ள முடியும். ஆனால் பேபி முகங்களை இனம் கண்டு கொள்வதற்கு தத்துவார்த்த அடிப்படை தேவை.
–  தீக்கதிர்

கோகுலத்தில் சீதை படத்தில் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்ணை ஏதேதோ ஆசைவார்த்தை பேசி விபச்சார தொழிலுக்கு அழைப்பார் தலைவாசல் விஜய். அந்தப் பெண் காறித்துப்பிவிட்டு போவார் என்பது வேறு விஷயம். அதே போல தருண் விஜய் என்பவர் பாஜகவில் இருக்கும் தலைவாசல் விஜய். அதிரடியாக செயல்படுவது தமிழர்களிடம் வேலைக்கு ஆகாது, பணிய மாட்டார்கள் எனத் தெரிந்துகொண்டு திருக்குறள், அது, இது என ஆசைவார்த்தை காட்டி இந்துத்துவ சகதிக்குள் ஐக்கியமாக அழைத்தார். ஆனால் எப்படி வேடமிட்டு வந்தாலும் கொண்டையை எளிதில் கண்டுபிடித்துவிடும் தமிழர்கள் அதற்கும் மசியவில்லை. அந்த கடுப்பிலோ என்னவோ இதுவரை ஒரே தாய் ஒரே பிள்ளைகள் என புழுகிவந்தவர் கடுப்பாகி, “தென்னிந்தியர்கள் கருப்பர்களாக இருந்தாலும் நாங்கள் அவர்களோடு இணைந்து வாழவில்லையா?” என கேட்டிருக்கிறார். இதுதான் தருண் விஜய்யின், பாஜகவின் உண்மையான சுயரூபம்.
ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களும் உண்டு. தென்னிந்தியாவில் பெரும்பாலானோர் கருப்புதான் என்றாலும் வட இந்தியாவில் கூட எல்லோரும் சிகப்பு மனிதர்கள் இல்லை. தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களில் ஏனையோரும் மொகஞ்சாதரோ நாகரீகத்தின் எச்சமாக இன்னமும் திராவிட நிறத்தில்தான் இருக்கிறார்கள். சிகப்பு என்பது இந்த நிலப்பகுதியில் வந்தேறிய ஆரிய நிறம்தான் என்பதால் கலப்பின் அடிப்படையிலேயே சிகப்புத்தோல் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் தருண் விஜயோ ஏதோ இந்த நிலப்பகுதி மொத்தத்திற்கும் சிகப்புத்தோல்காரர்கள் தான் உரிமைபோலவும், ஏனையோர் எல்லோரும் அடிமைகள் போலவும் பேசியிருக்கிறார்.
மதப்பற்று என்ற பெயரில் இப்படி உயர்சாதி திமிர் பிடித்து அலைவதுதான் பாஜகவின் அரசியல். அவர்களுக்கு கூட்டாக எல்லோரையும் அரவணைத்து சமத்துவத்துடன் வாழ்வதெல்லாம் ஆகவே ஆகாது, வரவும் வராது. நிறத்தில் உயர்ந்தவர்கள் சிகப்புத் தோல்காரர்கள் மதத்தில் உயர்ந்தது இந்து மதம். சாதியில் உயந்தவர்கள் பார்ப்பனர்கள். மொழியில் உயர்ந்தது சமஸ்கிருதம்/இந்தி. ஏனைய எல்லாமும் அவர்களுக்கு இரண்டாம் தரம்தான். சுருக்கமாக பாஜகவின் கொள்கை என்பது இவ்வளவுதான்.
தருண் விஜய் தனக்கே தெரியாமல் தன் பேச்சில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். என்னதான் பாம்பு வேடமிட்டு பல்லிளித்தாலும் அதன் பல்லில் விஷம்தான் இருக்குமே தவிர பாயசம் இருக்காது என்பதற்கு தருண்விஜய்யின் பேச்சு ஒரு சோற்றுப் பதம்.
–  Don Ashok

தான் சொல்ல வந்த கருத்து சரியாக வெளிப்பட வில்லை என்கிறார் தருண் விஜய் …
இல்ல தருண் விஜய் சரியாகவே வெளிப்பட்டுஉள்ளது உங்களது மேலாதிக்க மனப்பான்மை.. உங்கள் சுயரூபத்தை காட்டியதற்கு நன்றி ..
–  Sajeev Narayan

#கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் இணைந்துதான் வாழ்கிறோம்.#தருண் விஜய்
#பொன்னர் அண்ண! பொன்னர் அண்ண! உங்க மூஞ்சில கறுப்பு மைய அள்ளி பூசன மாதிரி இருக்குதாம்.
–  Anand Anandan

தம்பி தருண் நாங்கள் தென் இந்தியர்கள் அல்ல. முதலில் இது இந்தியா அல்ல பாரதம். நாங்கள் ஆரியர் அல்ல திராவிடர். நாங்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல இங்கே தோன்றியவர்கள். உங்களை போல் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்கள் இல்லை நாங்கள். உனக்கு நாங்கள் வாழ்தற்க்கான சான்று வேண்டுமா? போய் பார் பாகிஸ்தானில் மெகந்சாதாரோ, அரப்பா என்னும் இடத்தில் திராவிடர் வாழ்ந்த தொல்லியல் சரித்திரம் சொல்லும்.
–  Pandurangan Venugopal

பாஜக மத்திய இணை அமைச்சர் பொண் ராதா கிருஷ்ணனை வேற்றின வாசியாகத் தான் இதுவரை பார்த்திருக்கிறார் தருண் விஜய்….
இதுகூட புரியாமத் தான் அவர்களோடு சேர்ந்து குப்பை கொட்டுகிறார் போல மன்னாரு…
–  தமிழன் டி. சிவா

தென்னிந்தியர்கள் இந்தியர்கள் அல்ல.ஏனெனில் அவர்கள் கருப்பாக இருக்கிறார்கள்.- பாஜக மு.எம்பி தருண் விஜய்.
டேய்…செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்டா… கரெக்ட்டு நாங்க இந்தியர்கள் அல்ல… தமிழர்கள்.
–  அலையாத்தி செந்தில்

ஆந்திரா தெலுங்கானா வில் தருண் விஜய்க்கு வலுக்கிறது எதிர்ப்பு!! உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் தருண் விஜய் மன்னிப்பு கோர வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு!!
ஜெய் சென்னகேசவா.
–  Naveen Kumar

தருண் விஜய், வழக்கமான வெள்ளைத் தோல் ஆணவத்துல, கருப்பான தென்னிந்தியர்களை சகிச்சு வாழ்றோம்னு சொல்லிருக்காரு… திமுக எம்பி இளங்கோவன், எல்லா தமிழனும் கருப்பு இல்ல… எங்க தலைவரு வெள்ளை கலருதான்னு பதிலடி குடுத்திருக்காரு….
இவங்களை எல்லாம் பார்லிமென்ட்ல சகிச்சிட்டிருக்கோமேன்னு ஒரு வேளை தருண் விஜய் மீன் பண்ணிருக்கலாமில்லையா….
–  Nanjil Aravintha

என்னடா பொழுது போயிடுச்சே, ஒன்னும் நடக்கலையேனு பார்த்தேன்……இந்தா சிக்கிடுச்சில்ல தருண் விஜய் னு ஒரு பீஸு……இன்னும் ஒரு வாரம் வச்சு செய்வோம்….
–  கரூர் மகேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக