திங்கள், 10 ஏப்ரல், 2017

ஒரு முசுலீம் மாடு வாங்கினாலே ஆர்.எஸ்.எஸ் கொல்லும் ! தலித்தும் முஸ்லிமும் ஐநா வில் முறையிடவேண்டும் !

ஒரு முசுலீமோ, தலித்தோ தாக்கப்படும்போது, இங்கு தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நிலை உருவாக்கப்பட்டால் தான் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் நச்சுப் பிடியில் இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் மீட்க முடியும் !
பெஹ்லுகானின் மனைவி மகன்கள்பசுவைக் கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்கு” என்கிறது மனுநீதி ! மோடியின் ஆட்சியில் அந்த தண்டனையை வழங்குகிறது சங்க பரிவாரம். ஆயினும் பழைய நீதிப்படி பசுவை கொன்றிருக்க வேண்டும் என்பதல்ல ! பசுவை கொல்வதற்காகத்தான் நீங்கள் வாங்குகிறீர்கள் என்ற சந்தேகமே போதும் !
பெஹ்லுகானின் மனைவி மற்றும் மகன்கள்
இந்தியா முழுவதும், கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி பசுவதைத் தடுப்பின் பெயரில் முசுலீம்கள், தலித்துக்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தல்களில் உ.பி., உத்திரகாண்ட் தவிர கோவா மற்றும் மணிப்பூரில் குதிரைப்பேர மோசடி மூலம் ஆட்சியைப் பிடித்த பிறகு பாஜக – ஆர்.எஸ்.எஸ். கிரிமினல் கும்பல்களின் பார்ப்பனியத் தாக்குதல்கள் இன்னும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் குஜராத்தில் பசுவதைக்கு ஏற்கனவே இருந்த 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி சட்டதிருத்தம் கொண்டுவந்திருக்கிறது பாஜக மாநில அரசு. அதை மரண தண்டனையாக்க வேண்டும் எனக் கொக்கரிக்கிறார், உ.பி. யின் ரவுடி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இச்சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று ஹரியானா மாநிலம் மேவட் மாவட்டத்தின் ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெஹ்லு கான் தனது இரண்டு மகன்களான இர்ஷாத், ஆரிஃப் ஆகியோருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த அசுமத் கான் என்பவரோடு சேர்ந்து தங்களது பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஹத்வாரா சந்தையிலிருந்து பசுக்களை வாங்கி, இரண்டு வாகனங்களில் அவற்றை ஏற்றிக் கொண்டு நால்வரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது விசுவ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்தியது. பசுக்களை மாட்டிறைச்சிக்காக ராஜஸ்தானிலிருந்து ஹரியானாவிற்கு சட்டவிரோதமாகக் கடத்துவதாகக் குற்றஞ்சாட்டி அவர்கள் நால்வரையும் உடன் வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. பசுக்களை பால் பண்ணைக்கு வாங்கிச் சென்று கொண்டிருப்பதாக பெஹ்லுகான் கூறி, அதனை வாங்கிய ரசீதைக் காட்டிய பின்னரும் கூட அவர்களை விடாமல் தாக்கியது
வாகன ஓட்டிகளில் ஒருவரான அர்ஜூன் என்பவர் தான் ஒரு ஹிந்து என்று கூறியதும் அக்கும்பல் அவரை மட்டும் விடுவித்து விட்டு மீதமுள்ள ஐவரையும் சுமார் அரை மணி நேரம் கம்புகளையும், கற்களையும், இரும்புப் பைப்புகளையும் கொண்டு கடுமையாகத் தாக்கியது. அதோடு அவர்களிடமிருந்து சுமார் 75,000 ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போலீசு, தாக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தது. பெஹ்லு கானின் மகனான இர்ஷாத், போலீசிடம்  நடந்தவற்றை எல்லாம் குறிப்பிட்டு, மாடு வாங்கிய இரசீதையும் காட்டியிருக்கிறார்.

தாக்குதலின் போது பெஹ்லுகான்
அனைத்தையும் கேட்டுக் கொண்ட போலீசு மறுநாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் இருந்து ஒரு புகாரைப் பெற்றுக் கொண்டு “சட்டவிரோதமான முறையில் மாட்டை அடிமாட்டுக்கு கடத்துவது“ என்ற பிரிவின் கீழ் முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்தது. அதன் பின்னர் தான், தாக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையில், குறிப்பாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறது இராஜஸ்தான் மாநிலப் போலீசு.
ஹிந்துத்துவக் கிரிமினல் கும்பலின் கொடுந்தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் பெஹ்லுகான் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 5 அன்று மருத்துவமனையிலேயே மரணமடைந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்கள் எடுத்த வீடியோக்கள் இணையத்திலும், போலீசுக்கும் பகிரப்பட்டும், இராஜஸ்தான் போலீசு இதுவரையிலும் அக்கும்பல் சம்பந்தமாக வெறும் 3 பேரை மட்டும் கண் துடைப்புக்காகக் கைது செய்திருக்கிறது
இச்சம்பவம் குறித்து இராஜஸ்தான் மாநில பாஜக அரசின், உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா கூறுகையில், “ பசுக்களை கடத்துவது சட்டவிரோதம் எனத் தெரிந்தும் அவர்கள் (முசுலீம்கள்) அதனைச் செய்திருக்கிறார்கள். பசுப்பாதுகாவலர்கள் (வி.எச்.பி, பஜ்ரங்தள் காலிகள்) அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது தவறு” என பார்ப்பனிய இந்துமதவெறிக் கும்பலைச் செல்லமாக்க் கடிந்து கொண்டு, ஒரு பச்சைப் படுகொலையை மிகச் சாதாரணமாக நியாயப் படுத்தியுள்ளார்.
பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான அஸ்ஸாமில் இதே போன்று மற்றொரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜோராத் நகரில் ஒரு சிறுவன் உட்பட மூன்று முசுலீம்களை மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி கடந்த ஏப்ரல் 4 அன்று இரவில் கைது செய்திருக்கிறது அஸ்ஸாம் மாநிலப் போலீசு. மிரிதுபவன் போரா என்ற இந்து வெறியனிடமிருந்து புகார் பெற்று இந்நடவடிக்கையை போலீசு எடுத்துள்ளது.

பஞ்சாப்பின் கவ் ரக்‌ஷா தள் முகநூல் முகப்பு பக்கம்
குறிப்பாக சொல்லப் போனால், அஸ்ஸாமில் மாட்டிறைச்சி மக்களின் முக்கிய உணவாகும். அங்கு அங்கீகரிக்கப்பட்ட  மாட்டிறைச்சிக் கூடங்களில் இருந்து மாட்டிறைச்சி விற்பதும், மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சட்டப்பூரவமானதே. இந்நிலையில் சமைப்பதற்கு மாட்டுக்கறி வாங்கிச் சென்ற ‘குற்றத்திற்காக’, ”மாற்று மதத்தினரின் மனதைப் புண்படுத்திய” குற்றப் பிரிவின் கீழ் அவர்களைக் கைது செய்திருக்கிறது போலீசு.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலுமே மாட்டுக்கறியை முகாந்திரமாக வைத்து முசுலீம்களை அச்சுறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதனால் தான் இராஜஸ்தானில் தான் ஒரு இந்து எனக் கூறிய வாகன ஓட்டி அடிவாங்காமல் தப்பிக்கவும், இசுலாமியத் தோற்றம் கொண்ட வாகன ஓட்டி அடி வாங்கவும் நேர்ந்தது. அதே போல, சட்டப்படி மாட்டுக்கறி சாப்பிடலாம் என அனுமதி உள்ள ஒரு மாநிலத்தில் இசுலாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் மாட்டுக்கறி தின்பதையே ’குற்றமாக்கி’யிருக்கிறது அஸ்ஸாம் மாநில பாஜக அரசு.
இந்து மதவெறி பிடித்த பாஜக பாசிஸ்ட்டுகள் ஆளும் மாநிலங்களில் படிப்படியாக இந்து மத வெறியும், முசுலீம்கள் மற்றும் தலித்துகளின் மீதான வெறுப்புணர்வும் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன.  மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அப்பிளவை தமக்குச் சாதகமாக்கி தேசத்தின் வளங்களையும், அவர்களது வாழ்வாதாரங்களையும் கபளீகரம் செய்து வருகிறது இந்துத்துவக் கும்பல்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்களை சாதிய ரீதியாகப் பிரித்து, சாதியப் படிநிலையில் மேல்நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மக்களைச் சுரண்டிக் கொழுத்த பார்ப்பனீயம், இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் வாயிலாக தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
உழைக்கும் மக்களின் பொது எதிரிகளான முதலாளித்துவத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் எதிராக மக்கள் கொதித்தெழா வண்ணம், அவர்களை இருத்தி வைப்பது தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் நோக்கம். அதற்கு பெரும்பான்மை இந்துக்களின் பொது எதிரியாய் முசுலீம்களைக் காட்டி, அப்’பயங்கரவாதி’களிடமிருந்து காக்க வல்ல இரட்சகனாகத் தம்மை முன்நிறுத்தி பெரும்பான்மை மக்களை முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் பார்ப்பனிய ஒடுக்குமுறையின் நுகத்தடியில் சிக்க வைத்திருக்கிறது பாஜக கும்பல். இதை நாம் முறியடிக்கவேண்டும்.
ஒரு முசுலீமோ, தலித்தோ தாக்கப்படும்போது, இங்கு தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நிலை உருவாக்கப்பட்டால் தான் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் நச்சுப் பிடியில் இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் மீட்க முடியும் ! மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “இந்து நண்பன் இல்லாத ஒரு முசுலீமும், முசுலீம் நண்பன் இல்லாத ஒரு இந்துவும் இங்கு இல்லை, தமிழன்டா” என்று முழங்கிய தமிழகம் அதை நடைமுறையிலும் நிரூபிக்க வேண்டும்.  இல்லையேல் விரைவில், பசு மாட்டு மூத்திரத்தை முகஞ்சுழிக்காமல் ‘மடக்’ ’மடக்’ கென்று குடிக்காத ’தேசவிரோதச்’ செயலுக்காக நமக்கும்  7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
  • நந்தன்
செய்தி ஆதாரம்: வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக