சனி, 22 ஏப்ரல், 2017

பெரம்பலூர் .. இறந்த உடலை வைத்து மாந்திரீகம் ... நரபலி பூசாரி கைது

மந்திரவாதியை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
இளம்பெண்ணின் உடலை வைத்து பூஜை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரவாதியை காவலில் எடுத்து விசாரிக்க பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் எம்.எம்.நகர் அருகே, செட்டிக்குளம் கிராமத்தில் இரண்டு மாடி குடியிருப்பில் மாந்திரீகம் செய்துவந்த கார்த்திகேயன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கார்த்திகேயன் மூடநம்பிக்கையாக பல மாந்திரீக செயல்களைச் செய்துவந்துள்ளார். இறந்த இளம்பெண்ணிண் உடலை வைத்து பூஜை செய்வது, மண்டை ஓடுகளை வைத்து மை தயாரிப்பது, பில்லி சூனியம் வைத்து எடுப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர், சிறுமி ஒருவரை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், மீண்டும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த இளம்பெண் அபிராமி என்பவரது உடலை ரூ.5 ஆயிரம் கொடுத்து எடுத்துவந்து அகோரி பூஜை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. எனவே, மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ரூ.7 லட்ச மதிப்பிலான கடல்குதிரைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின், பறிமுதல் செய்யப்பட்ட கடல்குதிரைகளை உடனடியாக மாவட்ட வனத்துறை அலுவலர் சொர்ணப்பன், வனச்சரக அலுவலர் ரவீந்திரன் ஆகியோரிடம் கடந்த மார்ச் 14ஆம் தேதி ஒப்படைத்தனர். இதையடுத்து, வனத் துறையினர் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி தடை செய்யப்பட்ட உயிரினத்தை சட்டத்துக்குப் புறம்பாக வீட்டில் வைத்திருந்த குற்றத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி கார்த்திகேயன் மற்றம் அவரது மனைவி நசீமா ஆகியோர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், மீண்டும் மே 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார்.
இந்நிலையில், இருவரையும் மே 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் காவலில் எடுத்து, கார்த்திகேயன் கடல்குதிரை எங்கிருந்து வாங்கினார், அவருக்கு விற்றவர் யார்? என விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக