சனி, 22 ஏப்ரல், 2017

வைகை தண்ணீருக்கு போர்வை போர்த்திய அமைச்சர் செல்லூர்ராசு


மதுரையிலுள்ள ஆஸ்பத்திரிகளில் ICU வில் அவசர கேஸ்களின் ஆவி போகாம இருக்க அதிரடியா தெர்மாகோல் ரூப்பிங் போட்டுட்டு இருக்காங்களாம்!!!

வைகை அணையில் தேங்கியுள்ள நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மாகோல் வைத்த, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் பலே ப்ளான் தான், தமிழகத்தின் சமீபத்திய சென்சேஷன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன், ஷின்டக்ஸ் குடிநீர் தொட்டி வைக்க பத்துலட்ச ரூபாய் செலவு பண்ணியதாக சொன்னது, மக்களிடையே சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், அப்பிரச்னையை ஓவர் டேக் செய்துவிட்டது, 200 சதுர அடியில் வைகை அணையில் 10 லட்ச ரூபாய் செலவில் தெர்மாகோல் வைத்த திட்டம்.
சுமார் 6091 மில்லியன் கன அடி நீர்பிடிப்புப் பகுதியான வைகை அணையில், ஏப்ரல் 21ஆம் தேதியான நேற்று சுமார் 200 சதுர அடி அளவுள்ள தெர்மாகோலை மிதக்கவிட்டு, அதற்கு 10 லட்ச ரூபாய் செலவளித்தாக முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்தார், செல்லூர் ராஜூ.

இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பேசுகையில், ' சுமார் 142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை நிலவுவதால், வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க, இந்த தெர்மாகோல் வைக்கும் முயற்சியை எடுத்திருக்கோம். இது சம்பந்தமாக வைகை அணையில் முழுமையாக இல்லாமல் சுமார் 200 சதுர அடியில், தெர்மாகோலை மிதக்கவிடுகிறோம். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு நீர் ஆவியாகாமல் தடுக்கலாம். இந்தத் திட்டத்தை வெளிநாடுகளில் எல்லாம் வலுப்படுத்தியிருக்காங்க. இதற்கு முதல் கட்டமாக 10 லட்ச ரூபாய் செலவு பண்ணியிருக்கிறோம். இருக்கிற தண்ணீர் மிகக்குறைவாக இருப்பதனால், பரிசோதனை முயற்சியா...இந்தத் திட்டத்தை பண்றோம்' என்றார் பகீரென்று.
அவர் சொன்ன பத்துலட்ச ரூபாய்க்கு அந்த தெர்மாகோலில் எதுவும் சாதனங்கள் மாட்டியிருக்கிறார்களா...? என விசாரித்தோம். ஆனால், அவர் மிதக்கவிட்டது என்னவோ..வெறும் 300 தெர்மாகோல்களை மட்டும் தான்.
தெர்மாகோல் விலைநிலவரம் குறித்து ஒரு கடைக்காரரிடம் விசாரித்தபோது,
' நேற்று செல்லூர் ராஜூ வைகை அணையில் மிதக்கவிட்ட ஒரு தெர்மாகோலின் விலை வெறும் 17 ரூபாய் தான் வரும். அப்போ, நீங்களே கணக்குப் பார்த்துக்கங்க' என்றார்.
ஆக கடைக்காரர் சொன்ன கணக்குப்படி பார்க்கையில் 300 தெர்மாகோல் அட்டைகளுக்கு 5,100 ரூபாய் தான் செலவாகியுள்ளது. அதிகபட்சமாகப் பார்த்தாலும் 6,000 ரூபாயைத் தாண்டாது என்பது மட்டும் உண்மை.
இதுகுறித்து தேனிமாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் கூறுகையில் , 'மதுரை மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்பட்றக்கூடாதுனு அமைச்சர் ஒரு புதுமுயற்சி எடுத்தாரு. அது தோல்வியில் முடிஞ்சிருக்கு. இதனால், அமைச்சர் அடுத்த திட்டத்தை யோசிட்டு இருக்காரு' என அமைச்சருக்கு சப்போர்ட் செய்தார் மனிதர்.
இதுகுறித்துப் பேசிய வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்,
' இத்திட்டத்துக்கு மொத்தம் 5 கோடி ஒதுக்குவதாகப் பேச்சு. இதில் முதற்கட்டமாக,10 இலட்ச ரூபாய் செலவு செய்ததாக சொல்றாங்க. ஆனால் உண்மையில் நடந்தது என்னவோ, இதில் 8 லட்ச ரூபாய் அமைச்சர் தரப்பில் எடுத்துகிட்டாங்க. தொகுதி எம்.எல்.ஏ-வான கதிர்காமு ஒரு லட்ச ரூபாய் எடுத்துக்கிட்டாரு. இதில் ஒரு லட்ச ரூபாய் தான் நேற்று செலவு செய்யப்பட்டது' என்றார்.
ஆனால், சாமானிய மக்களுக்குத்தான் 10 லட்ச ரூபாய்க்கான கணக்கு என்ன ஆனது என்று புரியவில்லை  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக