செவ்வாய், 25 ஏப்ரல், 2017

முழு கடை அடைப்புப் போராட்டம் :மு.க.ஸ்டாலின் கைது!

முழு கடை அடைப்புப் போராட்டம் :மு.க.ஸ்டாலின் கைது!
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் செவ்வாய்க்கிழமை(இன்று) காலையில் இருந்து தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி தொண்டர்கள் தங்களது கட்சி கொடியுடன் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 கிமீ தூரம் பேரணி நடத்திய திமுகவினர் திரூவாரூர் பேருந்து நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.

இதற்கிடையே திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் கட்சி கொடிகளுடன் சென்ற திமுகவினர் திடீர் ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர்.
அங்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகுமாறு வலியுறுத்தினர். இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான இன்றைய போராட்டம் வெற்றிக்கரமான முறையில் நடைபெற்று வருகிறது.
அனைத்து மாவட்டங்களின் முக்கிய பெருநகரங்கள், சிற்றூர்கள் உள்ளிட்ட பகுதிகிளில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசு பேருந்துகளும் மிக குறைவான அளவிலேயே இயங்குகின்றன. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி போன்ற பொது போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை.

போராட்டத்தில் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,
''ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எங்களை 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து திருமண மண்டபத்திற்கு போலீஸார் அழைத்து வந்துள்ளனர். இதனால் அந்தப் பாதை முழுவதும் ஒரு எழுச்சிப் பேரணியை நடத்திட வாய்ப்பு கிடைத்தது, இன்றைய கடையடைப்பு போராட்டத்தைப் பொறுத்தவரை 200% வெற்றி பெற்றுள்ளது.இந்த பேரணியானது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு விவசாயிகள் பிரச்சினையில் தொடர்ந்து மவுனம் காத்து வந்தால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக இணைத்து மீண்டும் அடுத்தகட்டப் போராட்டத்தை தொடருவோம். 1938 முதலே இந்தி திணிப்புக்கு எதிரான தீவிர களத்தை திராவிட இயக்கங்கள் கட்டியெழுப்பியுள்ளன. அப்படியொரு தீவிரமான போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், போராட்டத்தை நடத்துவதற்கு திமுக எப்போதும் தயாராகவே இருக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.  minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக