செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அரசு நிர்வாகம் முடக்கம் ..4 லட்சம் அரசு ஊழியர்கள் காலவரையின்றி வேலை நிறுத்தம்!

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காததால் ஏப்ரல் 25-ஆம் தேதி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களின் சங்கம் சார்பாக 6 அம்ச கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது குறித்து பரிசீலனை செய்ய வல்லுநர் குழு அமைப்பு, 8-வது ஊதியக்குழு அமைத்து அரசு ஊழியர்களின் ஊதிய பிரச்னையை தீர்ப்பது போன்றவை குறித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலவரையற்ற போராட்டம் நடத்தப்பட்டது . அப்போது, இந்தப் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர், விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்குப் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய பென்ஷனை அமைப்பதற்கான வல்லுநர் குழு அமைக்கப்பட்டது

30 ஆண்டுகளாகப் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள், அங்கன் வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் என சுமார் 3 லட்சம் பேர் வரையறுக்கப்படாத ஊதியத்தின் கீழ் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊதிய உயர்வுடன் வரையறுக்கப் பட்ட ஓய்வூதியமும் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக் கப்பட்டது. அந்த வாக்குறுதிகளும் இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை. இதுகுறித்து, அரசு ஊழியர்களின் சங்கம் சார்பாகப் பலமுறை அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அரசு தரப்பிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வரவில்லை. அதன் காரணமாக இன்று ஏப்ரல் 25-ஆம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து,தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒட்டு மொத்த அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நிலையான அரசு இல்லாதநிலையில், அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் அரசு இயந்திரம் முழுமையாக பாதிப்படையும்நிலை உள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக