ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

விருதுநகர் .. தண்ணீர் பிரச்னையால் எரிக்கப்பட்ட தலித் குடிசைகள்:


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கே.தொட்டியப்பட்டியில் கடந்த 30.03.2017இல் மாலை ஆதிக்க சாதியைச் சேர்ந்த வன்முறையாளர்கள், தலித்துகள் வசிக்கும் குடிசைகளுக்குத் தீ வைத்து எரித்துள்ளனர்.
குடி தண்ணீர் பிரச்னை காரணமாக ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புக்குச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் 19 தலித்துகள் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 15 பேர் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலில் மூன்று வீடுகள் தீ வைத்து முழுமையாக எரிக்கப்பட்டும், 33 வீடுகள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.

வன்னியப்பட்டி காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து குற்ற எண்.48/2017 பிரிவுகள் 147, 148, 294(b), 448, 354, 336, 307 இந்திய தண்டனைச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r)&(s), 3(2)(va, 3(1)(wi), 3(2)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கிராமத்தில் தலித் குடியிருப்பில் குடிநீர் குழாய் எதுவுமில்லை. இவர்கள் குடிநீருக்காக மற்ற சமூகத்தினர் வாழும் தெருவை அடுத்துள்ள சுடுகாட்டுப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு குடிநீர் குழாய்களில் நீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருக்கிறது. இதனால், ஒடுக்கப்பட்ட மக்களாகிய இவர்கள், ஆதிக்க சமூகத்தினர் பயன்படுத்தி வந்த பொது குடிநீர் தொட்டியினை பயன்படுத்தி வந்தனர். இதனால், இரண்டு சமூகத்து மக்களிடையே தண்ணீர் பிடிப்பதில் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வப்போது எழுந்த சிறுசிறு பிரச்னைகள் காவல்நிலையம் வரை சென்று காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்து, இரண்டு சமூக மக்களையும் காவல்துறை அனுப்பி வைத்திருக்கிறது. அதோடு, எல்லோரும் ஒரே நேரத்தில் தண்ணீர் பிடிக்க வேண்டாம் என்று கண்டித்த காவல்துறை, தலித்துகள் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை தண்ணீர் பிடிக்கவும், அதன்பிறகு மற்ற சமூகத்தினர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தண்ணீர் பிடிக்கவும் முடிவெடுத்து இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 30.03.2017 அன்று தலித் மக்கள் அனைவரும் உறவினர் வீட்டு நிகழ்வுக்குச் சென்று விட்டு, மாலையில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அங்கிருந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலித் மக்களை சாதி ரீதியாக இழிவாகப் பேசியதோடு, ‘நீங்கள் எப்படி இந்த நேரத்தில் தண்ணீர் பிடிக்க வரலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தலித் பெண்கள், ‘உங்களுக்கான நேரம் 6 மணியுடன் முடிந்துவிட்டது. எங்களது தண்ணீர், தொட்டியில் இருக்கிறது. அதைத்தான் பிடிக்க வந்தோம்’ என்று கூற, அதற்கு முருகன் தலித் பெண்களை ஆபாசமாக பேசியிருக்கிறார்.
இதை அறிந்த தலித் இளைஞர் பாண்டி என்பவர் முருகனைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், அப்போது அங்கிருந்த சிலர், தலித் இளைஞர்கள் பாண்டி, சக்திவேல், பேச்சிமுத்து, லட்சுமணன், ராகுல்பாண்டி ஆகியோரைத் தாக்கியிருக்கிறார்கள். வலி தாங்காமல் அவர்கள் தெருவுக்குள் ஓடியபோது விரட்டிச் சென்ற ஆதிக்கச் சாதியினர், மூன்று தலித்துகளின் குடிசைகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, கொடுமையான ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் கதவு, வீட்டின் ஓடுகள் என்று 33 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பீரோ, சமையல் பாத்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் 19 தலித்துகள் காயமடைந்துள்ளளனர். இதில் படுகாயமடைந்த 15 பேர் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது இந்த பிரச்னையை விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பினர், “இந்த பகுதியில் கடுமையான தீண்டாமை கொடுமைகள் நடந்து வருகின்றன. பொது சமுதாயக்கூடத்தில் தலித் மக்கள் நிகழ்ச்சி நடத்த முடியாது. பொது மயானக் கொட்டகை இருந்தும் தலித் மக்கள் அந்த கொட்டகையில் சடலங்களை எரிக்க முடியாது. சலூன் கடையில் தலித்துகள் முடிவெட்ட அனுமதியில்லை. கோயிலுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதியில்லை” என்ற அவர்கள், “பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தலித் வீடுகளுக்கு தீ வைத்த 100 பேர் கொண்ட வன்கொடுமை கும்பலுக்கு தலா ஒவ்வொருவரும் ரூ.3 இலட்சம் அபராதம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் கிடைக்கக்கூடிய ரூ.3 கோடி அபராதத் தொகையினை தொட்டியப்பட்டி தலித் மக்களின் மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
வன்கொடுமையில் ஈடுபட்ட 26 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். தீ வைத்து எரிக்கப்பட்ட மூன்று வீடுகளைச் சேர்ந்த தலித்துகளுக்கு தலா ரூ.3 இலட்சம் நிவாரணமும் வீடும் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான தலித்துகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான தலித் பெண்களுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணமும் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். சேதப்படுத்தப்பட்ட வீடு மற்றும் பொருள்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
தொட்டியப்பட்டி தலித் மக்களின் குடும்பத்தினருக்கு மூன்று மாதங்கள் தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகையும் சமையல் பொருள்களும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தொட்டியப்பட்டியில் நிலவக்கூடிய தீண்டாமை பாகுபாடுகளை ஆய்வு செய்து அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்” என்று கூறினார்கள்.
அந்தக் கிராமம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிலிருப்பதால் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படும் ஆண்கள் யாரும் அங்கில்லை. அதனால், அவர்கள் தரப்பு நியாயங்களை அறிய முடியவில்லை. சக மனிதர்களுக்குள் பற்றி எரியும் சாதித் தீ எப்போதுதான் அணையுமோ?  மின்னமலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக