திங்கள், 17 ஏப்ரல், 2017

செங்கோட்டையன் சமாதான தூது .... சம்மதிக்காத பொள்ளாச்சி ஜெயராமன் ..

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கிடையே துணைசபாநாயகராக உள்ள பொள்ளாச்சி ஜெயராமன், டி.டி.வி. தினகரனுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். இந்த நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனை சமாதானப்படுத்துவதற்காக மூத்த அமைச்சரான செங்கோட்டையன் சனிக்கிழமை இரவு கோவை வந்து நேரில் பொள்ளாச்சி சென்றார். அங்கு பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் வைத்து சுமார் 3 மணி நேரம் இருவரும் பேசியுள்ளார்கள். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி மற்றும் ஆட்சி இரண்டின் எதிர்காலம் கருதி நாங்களெல்லாம் ஒற்றுமையாக இருந்தோம். ஆனால் தற்போது நடக்கிற விஷயம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவமானத்தை சந்திக்க வேண்டியதாக உள்ளது.

ஆகவே இனிமேலும் தினகரன் தலைமையில் தான் ஆட்சி நடத்த முடியாது என கூறியிருக்கிறார். அதற்கு செங்கோட்டையன், நாம் இந்த நிலையில் பிளவுபட்டால் அது திமுகவுக்கு சாதகமாக போய்விடும். ஏற்கனவே கொங்குமண்டலத்தில் 10 எம்எல்ஏக்களுக்கு மேல் நம் மீது அதிருப்தியில் உள்ளனர். நீங்கள் முக்கிய பொறுப்பில் உள்ளீர்கள், ஏதாவது வெளிப்படையாக செய்துவிடாதீர்கள் என கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த சமாதானத்தை ஏற்காத ஜெயராமன், என்னால் நீங்கள் கூறியதை ஏற்க முடியாது என கூறி அவரை அனுப்பிவிட்டார். தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க தினகரனுடன் இணக்கமாக போவதற்கு கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரிய எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் திணறி வருகிறார் செங்கோட்டையன். முன்பே பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் உள்பட வடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்பிரமணி, சூலூர் எம்எல்ஏ கனகராஜ், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன் உள்பட பலபேர் அணி திரண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த தினகரன் தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க பலவித முயற்சிகளை எடுக்க தயாராகி வருகிறார் செங்கோட்டையன். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை கோபிச்செட்டிப்பாளையம் வந்த செங்கோட்டையனுக்கு குடிநீர் பிரச்சனைக்காக வேட்டைக்காரன்புதூர் என்ற கிராமத்தில் சாலை மறியல் செய்து அவரிடம் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர் பொதுமக்கள். கட்சி, ஆட்சி என பலவித டென்ஷனில் இருந்த அவர், விரைவில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சமாதானப்படுத்தி பொதுமக்களை அனுப்பி வைத்துவிட்டு, இந்த வாரம்... பொள்ளாச்சி வாரம்... என நினைத்துக்கொண்டே சென்றார். ஜீவா தங்கவேல்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக