திங்கள், 17 ஏப்ரல், 2017

7.8 கோடி நகர்புற வீடுகளில் கழிப்பறை இல்லை ...அதிர்ச்சி புள்ளிவிபரம் . ..

நகர்புறங்களில் கழிப்பறை இல்லாத வீடுகள் 7.8 கோடி அதிர்ச்சி  ...பொதுவாக கழிப்பறை இல்லாத வீடுகள் கிராமங்களில் தான் அதிக அளவில் உள்ளது என்ற ஒரு பொது நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சரகம் அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு புள்ளி விவரத்தில், இந்தியா முழுவதும் நகர்புறங்களில் 7.8 கோடி வீடுகளில் கழிப்பறை இல்லை என்று தெரிவித்துள்ளது.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஆண்டுவிழா நாளில் 2019ம் ஆண்டுக்குள் இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 31.14 லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.15 லட்சம் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் நகர்புறங்களில் மொத்தம் 7.8 கோடி வீடுகளில் கழிப்பறை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 74.64 லட்சம் வீடுகளில் மேற்கூரை இல்லாத கழிப்பறையை பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், 1.42 கோடி வீடுகளில் தனியாக சமையலறை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறையால் நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு பரவிவருகிறது.
கழிப்பறை, சமையலறை சரியாக இல்லாத வீடுகளில் கழிப்பறை, சமையலறைக் கட்டுவதற்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் படி மத்திய அரசு ரூ.1.5 லட்சம் வரை நிதி உதவி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக