செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மணல் ராமச்சந்திரன் பன்னீருக்கும் தினகரனுக்கும் பணம் கொடுத்தார் ... பன்னீர்செல்வம் தினகரனை டெல்லியில் போட்டு கொடுத்தார்


டிஜிட்டல் திண்ணை:மாட்டிவிட்ட 'மணல்' ராமச்சந்திரன்  : தேர்தலை  ...”கடந்த மார்ச் 23ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் வெளியானதை முதலில் நினைவுபடுத்துகிறேன்.
ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தம்? பி.ஜே.பி-யின் அடுத்த திட்டம் என்ற தலைப்பில் நாம் சொல்லியிருந்தது இதுதான். ’கட்சிப் பெயரும் இல்லை... சின்னமும் இல்லை... இனி, தினகரன் கையிலெடுக்கப் போகும் ஒரே ஆயுதம் பணம். எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக பணத்தை தொகுதிக்குள் இறக்க ஆரம்பிப்பார். அதைத்தான் பி.ஜே.பி.யும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அப்படி ஆர்.கே.நகர் முழுக்க பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறது. ஏற்கெனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப் பட்டுவாடா என்பது பெரிய பூதாகரமாக வெடித்தது. அதையே காரணமாக வைத்துதான் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இப்போதும் ஆர்.கே.நகரில் அதே ஃபார்முலாவில் பணப் பட்டுவாடா என்ற காரணத்தை வைத்து தேர்தலை நிறுத்திவிடலாம் என்பதுதான் பி.ஜே.பி. போடும் திட்டம் என்கிறார்கள். கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இதுபற்றி நம்மிடம் பேசிய பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர், ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில்தான் அதிகளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. அதில் அரவக்குறிச்சியும், தஞ்சாவூரும் கேட்கவே வேண்டாம். தேர்தல் ஆணையத்துக்குப் போன புகாரை தொடர்ந்துதான் அங்கே தேர்தல் நிறுத்தப்பட்டது. இப்போது ஆர்.கே.நகரில் அதையெல்லாம் விஞ்சும் அளவுக்கு பணத்தை இறக்க தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆர்.கே.நகரில் ஒரு ரவுண்டு பணம் கொடுத்து முடித்துவிட்டார்கள். சின்னம் இல்லை என்றதும் இப்போது பணம் அடுத்த ரவுண்டு விளையாட ஆரம்பிக்கும். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்.கே.நகரில் பணம் கொட்டப் போகிறது. அதையெல்லாம் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். அதிக அளவு பணப் புழக்கம் இருப்பது உறுதியானால் தேர்தல் நிறுத்தப்படும். ஜெயிப்பதற்கு பயந்துகொண்டு பணம் கொடுத்தது அதிமுக என்பது உறுதியாகிவிடும்’ என்று சொன்னார். பி.ஜே.பி.யை பொருத்தவரை, தமிழகத்தில் இனி தேர்தல் என்று நடந்தால், அது தங்களுக்கு சாதகமான தேர்தலாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறது. இப்போது பி.ஜே.பி. வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிட்டாலும் அவரால் ஜெயிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் டெபாசிட் வாங்குவதே கஷ்டம். அதற்கு தேர்தலையே நிறுத்திவிட்டால் பரவாயில்லை என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது” என்பதுதான் நாம் அப்போது சொன்னது. ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தம் என்று கடந்த மார்ச் 23ஆம் தேதியே நாம் சொல்லியிருக்கிறோம்” என்று முடிந்தது முதல் மெசேஜ்.
அடுத்த மெசேஜ் தொடர்ந்து வந்தது. “கடந்த 22.12.16 தேதியிட்ட டிஜிட்டல் திண்ணையில் சொன்ன இன்னொரு விஷயத்தையும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். “சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினமும் புதுக்கோட்டை ராமச்சந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சேகர் ரெட்டி கைதை தொடர்ந்து, தற்போது இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்தினத்துக்கு புதுக்கோட்டைதான் சொந்த ஊர். ஆரம்பத்தில் திண்டுக்கல்லில் சர்வேயராக பணியாற்றி வந்தார். அப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தில், இவரும் சர்வேயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். அத்துடன் மணல் தொழிலிலும் கால் பதித்தார். இவரது நிறுவனங்களுக்கு தரணி குழுமம் என்ற பெயரும் சூட்டினார். பணம் கொட்ட ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் கல்லூரி ஒன்றையும் விலைக்கு வாங்கி நடத்த ஆரம்பித்தார். தொழிலதிபர் கல்வித் தந்தையும் ஆனார். புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரது உறவினர் ராமச்சந்திரன். அவருடன் சேர்ந்து மணல் பிசினஸில் இன்னொரு பக்கம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார். ராமச்சந்திரனுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த புதுக்கோட்டை விஜயபாஸ்கர் நண்பர். அவர் மூலமாகத்தான் சேகர் ரெட்டி அறிமுகமாகியிருக்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் காலப்போக்கில் தொழில் பார்ட்னர்களாக மாறியிருக்கிறார்கள். திண்டுக்கல் ரத்தினத்தையும், புதுக்கோட்டை ராமச்சந்திரனையும் தெரியாதவர்கள் அதிமுக-வில் இல்லை’’ என்பதுதான் அப்போது சொன்ன தகவல்.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். இந்த புதுக்கோட்டை ராமச்சந்திரன் சில நாட்களுக்கு முன்பு தினகரனை சந்தித்திருக்கிறார். தேர்தல் நிதியாக ஒரு தொகையை தினகரனிடம் அவர் கொடுக்க... அவரோ, ‘பணத்தை நீங்க விஜயபாஸ்கர்கிட்ட கொடுத்துடுங்க... அவர்தான் வரவு செலவுகளை பார்க்கிறாரு...’ என்று சொல்ல, ராமச்சந்திரனும் உடனடியாக விஜயபாஸ்கரை சந்தித்து பணத்தைக் கொடுத்திருக்கிறார். அத்துடன் அவர் நிற்கவில்லை. அங்கிருந்து நேராக பன்னீரை போய்ப் பார்த்திருக்கிறார். அவருக்கும் தேர்தல் நிதி கொடுக்க பணம் கொண்டுபோயிருக்கிறார். பன்னீரோ, ‘பணத்தை நீங்க பாண்டியராஜன்கிட்ட கொடுத்துடுங்க...’ என்று சொல்ல, மாஃபா பாண்டியராஜனை போய்ப் பார்த்திருக்கிறார் ராமச்சந்திரன். அப்போது, விஜயபாஸ்கருக்கு தேர்தல் நிதி கொடுத்த தகவலை அவரிடம் சொல்லியிருக்கிறார். மாஃபா பாண்டியராஜனும் எதுவும் சொல்லாமல் நிதியை வாங்கிக் கொண்டார். அடுத்து களத்தில் உள்ள முக்கிய கட்சியின், முக்கிய நபர் ஒருவருக்கும் பெருந்தொகையை நிதியாக கொடுத்திருக்கிறார் ராமச்சந்திரன்.
விஜயபாஸ்கர் வீட்டில் ராமச்சந்திரன் கொடுத்த பணம் இருப்பது தெரிந்ததும் உடனடியாக பன்னீரிடம் சொல்லி, விஷயத்தை டெல்லியில் உள்ளவர்கள் கவனத்துக்கு கொண்டுபோகச் சொன்னார். மாஃபா போட்டுக் கொடுத்த ரூட்டில் பன்னீரும் அதன்படியே செய்ய... பன்னீர் சொல்வதைக் கேட்டு செயல்பட்டுவந்த மத்திய அரசும், உடனடியாக வருமான வரித் துறை அதிகாரிகளை அனுப்பினார்கள். பி.ஜே.பி.யும் எந்தவகையில் தேர்தலை நிறுத்தலாம் என்று கண்கொத்திப் பாம்பாக பார்த்து வந்தது. இப்படி ஒரு விவகாரம் சிக்கினால் சும்மா இருப்பார்களா? பன்னீர் தரப்பில் யாரையெல்லாம் கைகாட்டினார்களோ அவர்கள் வீட்டுக்கெல்லாம் ரெய்டு போனார்கள். இப்படித்தான் விஜயபாஸ்கர் குறிவைக்கப்பட்டார். ‘பணத்தைக் கொடுத்துட்டு ஊரெல்லாம் போய் சொல்லிட்டுப் போயிருக்காரு அந்த ராமச்சந்திரன்... அவரை நம்பித்தான் நான் விஜயபாஸ்கரை பார்க்கச் சொன்னேன்... இப்படி செய்வாருன்னு நினைக்கல..’ என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் தினகரன்” என்று முடிந்தது அந்த நீளமான மெசேஜ்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக