செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி கோக்கிற்கு தடை .. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பெப்சி - கோக் : தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கத் தடை!தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் லட்சக்கணக்கான ஏக்கர் விவாசயத்துக்கு ஆதாரமாகவும், குடிநீருக்கு ஆதாரமாகவும் மட்டுமல்லாமல் குமரி, விருதுநகர், மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெப்சி, கோக் உள்ளிட்ட 15 பன்னாட்டு நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து நீரை எடுத்து வந்தன. கோக், பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சுவதற்கு தடை விதிக்கக்கோரி, டி.ஏ.பிரபாகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு, தாமிரபரணி ஆற்றிலிருந்து உபரி நீரை மட்டுமே எடுப்பதாகவும், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கின்றன. ஆனால் குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மட்டுமே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று, குளிர்பான நிறுவனங்கள் சார்பில் கடந்த மார்ச் 2ஆம் தேதி விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தற்போது கடும் வறட்சியால் திருநெல்வேலியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பெப்சி, கோக் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விடக்கூடாது என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் உள்ள தண்ணீர் வரும் 30ஆம் தேதி வரை மட்டுமே கைகொடுக்கும் நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தாமிரபரணியில் இருந்து பெப்சி, கோக் நிறுவனங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் எடுக்கக் கூடாது என்று ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இவ் வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது பன்னாட்டு நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து பொதுப்பணித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக