திங்கள், 24 ஏப்ரல், 2017

கொடநாடு காவலாளி கொலையும் ஜெ.மரணம் போல் ஊத்தி மூடப்படும் .. நன்றி மோடி ?

Image may contain: 1 person, text and outdoorகொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணி புரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது


கொடநாடு எஸ்டேட்டில் கொலை : காரணம் என்ன?
மின்னம்பலம் ;மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் இன்று ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்குள்ள பங்களாவை மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் இடமாகவும், பல முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய இடமாகவும் பயன்படுத்தி வந்தார். கொடநாடு எஸ்டேட் என்றால் காற்றுகூட உள்ளே போகமுடியாது என்பார்கள். ஆனால், அது ஜெயலலிதாவுக்குச் சொர்க்க பூமியாக இருந்தது. அப்படிப்பட்ட கோட்டைக்குள்தான் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை 2.00 மணியளவில், கொடநாடு எஸ்டேட்டுக்குள் இரண்டு பொலிரோ கார் உள்ளே நுழைந்தது. அதைக்கண்டு காவலாளிகள் ஓடிவந்தபோது, காரில் இருந்தவர்கள் கேட்டை திறக்கச் சொல்லியுள்ளார்கள்.
காவலாளிகள் யாரென விசாரித்துக் கொண்டிருக்கும்போது, எஸ்டேட்டுக்குள் காரில் நுழைந்தார்கள். பின்னர், காரிலிருந்து டிரைவர் உட்பட 10 பேர் இறங்கியதும், நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி ஓம்பகதூரைச் சுற்றிவளைத்து பலமாகத் தாக்கி, அவரைத் தூக்கில் தொங்கவிட்டு, மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் கையை அரிவாளால் வெட்டி, பங்களாவுக்குள் புகுந்து கொள்ளையடித்துக்கொண்டு தப்பித்துள்ளார்கள். இதில் ஓம்பகதூர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கிருஷ்ண பகதூர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி காவல்துறை எஸ்.பி. முரளிரம்பா தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளை முயற்சி காரணமாக இந்தக் கொலை நடந்ததா ? இல்லை வேறு காரணங்களுக்காக இந்தக் கொலை நடந்ததா என்று பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலாளி கிருஷ்ண பகதூர் “10 பேர் கொண்ட கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்” என்று முதற்கட்ட வாக்கு மூலம் கொடுத்தாக தகவல் வந்துள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் ஒருவேளைப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த ஆவணங்களை அபகரிக்க முயன்றபோது இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததா? என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும், கொடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்களில் பதிவானதைப் பார்த்து ஆய்வு செய்துவரும் காவல்துறை அதிகாரிகள், விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என்று உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள் . தமிழக முதல்வர் வாழ்ந்த இடத்திலேயே கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது என்றால், சாதாரண மனிதர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று அந்தப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி சிறுதாவூர் பங்களா அருகில் உள்ள 9 ஏக்கர் புல்வெளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 3 வாகனங்களில் அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையின் துரித நடவடிக்கையால், ஜெயலலிதாவின் பங்களாவிற்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கொடநாடு எஸ்டேட்டில் மர்மநபர்கள் புகுந்து காவலாளிகளை தாக்கி ஆவணங்களைத் தூக்கிச் சென்ற சம்பவத்துக்கும், சிறுதாவூர் பங்களா சம்பவத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ என்று போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக