செவ்வாய், 25 ஏப்ரல், 2017

புதிதாக மதுக்கடைகளை திறக்க தடை: திமுக, பாமக வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசுக்கு தடையில்லை ஆனால் மறு உத்தரவு வரும்வரை இந்தச் சாலைகளில் புதிதாக மதுக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல்அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. மூடிய மதுக்கடைகளை திறப்பதற்கு வசதியாக மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, பாமக ஆகிய கட்சிகள் நேற்று (திங்கள்கிழமை) முறையீடு செய்தன. இந்த மனுக்களை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றுவதற்குக் காரணம் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவேத் தவிர மதுக்கடைகளை திறப்பதற்காக அல்ல என வாதிட்டார்.
திமுக தரப்பில் வழக்கறிஞர் வில்சனும், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் அதன் தலைவரும், பாமக வழக்கறிஞருமான கே.பாலுவும் தத்தம் வாதத்தை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட அமர்வு, "மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசுக்குத் தடையில்லை.
ஆனால் மாற்றப்பட்ட உள்ளாட்சி சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம் என அரசு உத்தரவாதம் தர வேண்டும்" என்றது.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசித்து முடிவை அறிவிக்கிறோம் என்றார்.
உத்தரவாதம் தரப்படாத நிலையில், மறு உத்தரவு வரும்வரை தமிழகம் முழுவதும் புதிதாக மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கு விசாரணை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக, பாமக மனு விவரம்:
"மூடிய மதுபானக் கடைகளை திறக்க நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றக் கோரி நகராட்சி நிர்வாக ஆணையர் ஒரு அறிவிப்பாணையை அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி இந்த சாலைகளை வரும் ஏப்ரல் 25-க்குள் உள்ளாட்சி சாலைகளாக மாற்ற நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது எந்த உள்ளாட்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கிடையாது. தனி அலுவலர்கள் தான் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வருகின்றனர்.
அவர்கள் தன்னிச்சையாக தீர்மானம் போட முடியாது. மதுக்கடைகளை திறப்பதற்காக இவ்வாறு உள்ளாட்சி சாலைகளாக மாற்றுவது சட்டவிரோதமானது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல். இதுதொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யவுள்ளோம். ஆகவே அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
முன்னதாக, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் ஏராளமான மதுபானக் கடைகள் அகற்றப்பட்டுள்ளது.  tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக