வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தினகரன் உதவியாளர்கள் இசக்கி , ராஜேந்திரனை தாக்கிய பாலிமர் ஊடக ரவுடிகள் ...

ஊடக ரவுடித்தனம்.
டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது முதலாகவே, அவரின் அடையாறு வீட்டின் வாசலில் டிவி சேனல்களின் ஓபி வேன்களும், செய்தியாளர்களும், கேமராக்களோடு குவிந்து இருந்து வருகிறார்கள். இரு நாட்களுக்கு முன்பு, டிடிவி வீட்டுக்கு சம்மன் வழங்குவதற்காக, டெல்லி காவல்துறையிலிருந்து ஒரு உதவி ஆணையரும், ஆய்வாளரும் மற்றொருவரும் இரவு வந்திருந்தனர். சம்மன் வழங்கிய பின்னர், வாசலில் செய்தியாளர்கள் குழுமியிருப்பதால், அந்தத் தெருவின் முனையில் நிறுத்தியிருக்கும் தங்கள் வாகனம் வரையில் தங்களை விட்டு விடுமாறு டெல்லி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, தினகரனுக்கு உதவியாக இருந்த இசக்கி, ராஜேந்திரன் மற்றொருவர் மூவரும் டெல்லி காவல்துறையினரை அவர்கள் வாகனம் வரையிலும் கொண்டு விட்டனர். அவர்களிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயற்சித்தபோதும் அவர்கள் பேசவில்லை. காவல்துறையினர் சென்றதும், பாலிமர் செய்திச் சேனலின் செய்தியாளர் ஜெபர்சன் என்பவர், தன் மைக்கால் எங்களை ஏன் கேள்வி கேட்க விடாமல் தடுத்தாய் என்று இசக்கியை அடித்துள்ளார். இசக்கிக்கு வயது 65க்கு மேல் இருக்கும். இசக்கியை காப்பாற்றுவதற்காக ராஜேந்திரன் அவரை தடுத்துள்ளார். இசக்கியை விட்டு விட்டு ராஜேந்திரனை ஜெபர்சன் தாக்கியுள்ளார். ஜெபர்சனை தொடர்ந்து இதர செய்தியாளர்களும் ராஜேந்திரனை தாக்கியுள்ளனர்.

காவல்துறையினர் உடனடியாக வந்து ராஜேந்திரனை மீட்டு, காவல்துறை வாகனத்தில் அமர வைத்துள்ளனர். அப்போதும் ஜெபர்சன் சென்று, காவல்துறை வாகனத்தின் ஜன்னல் வழியாக மீண்டும் ராஜேந்திரனை தாக்கியுள்ளார்.
டிடிவி தினகரன் கேள்வி கேட்கப்பட வேண்டியவர்தான். மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அவரிடம் பணியாற்றுபவர்களை அடிக்கும் உரிமையை இத்தகைய ஊடக ரவுடிகளுக்கு யார் கொடுத்தது ?
இது போன்ற ஒன்றிரண்டு ஊடக ரவுடிகளால், ஒட்டுமொத்த ஊடகத் துறையினருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
ஜெபர்சனுக்கு செய்தியாளர் பணியை விட ரவுடியிசம் பிடித்திருந்தால் அவர் அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யலாம். செய்தியாளர் என்ற போர்வையில் 65 வயது நபரை தாக்குவது கோழைத்தனம் மட்டுமல்ல. அயோக்கியத்தனம்.  முகநூல் பதிவு  சவுக்கு சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக