சனி, 1 ஏப்ரல், 2017

நன்கொடையில் முதல் இடம் பிடித்த ஷிவ் நாடார்!

அதிக நன்கொடை வழங்கியத் தமிழர் கடந்த ஆண்டில் அதிக நிதி நன்கொடையாக அளித்தவர்கள் பட்டியலில்  ஹெச்.சி.எல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். பணத்தில் மட்டுமல்ல, குணத்திலும் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பதை இந்தியாவுக்கு எடுத்துக் காட்டியுள்ளார் ஷிவ் நாடார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார், கடந்த 1976-ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்த நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 32 நாடுகளில் ஹெச்.சி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றபிறகு, டெல்லியில் உள்ள டி.சி.எம் (DCM)  நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ஷிவ் நாடார், ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன், ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

தொடந்து, 1982 -ம் ஆண்டு, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் விற்பனைக்கு வந்தது. ஹெச்.சி.எல். நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலகம் முழுக்க மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்தியாவின் 5-வது பெரும் பணக்காரர் இவர். தொழிலில் மட்டுமல்லாமல் சமுதாயப் பணிகளை மேற்கொள்வதிலும் ஷிவ் நாடார் ஆர்வம் காட்டினார். கடந்த 2008-ம் ஆண்டு ஷிவ் நாடார் அறக்கட்டளையை நிறுவினார். அந்த அறக்கட்டளை வழியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்க உதவிகள் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு ஷிவ்நாடாரின்  மகள் ரோஷினி அறங்காவலராக உள்ளார்.
இந்த ரோஷினிதான் 6.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. ஷிவ் நாடார் அறக்கட்டளை சிறந்த சேவையாற்றி வருவதாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் நகரில் உள்ள பாப்சன் கல்லூரி அண்மையில் 'Changemaker award ' விருது வழங்கி கௌரவித்தது. கல்லூரி  முதல்வர் கெர்ரி ஹீலே,  ரோஷினியிடம் விருதை வழங்கினார். 'எங்களது பணிகளை பாப்சன் போன்ற தலை சிறந்த நிறுவனங்கள் அங்கீகரிக்கும் போது நாங்கள் இன்னும் ஊக்கம் பெறுகிறோம்' என்று விருதுபெற்ற போது தெரிவித்தார் ரோஷினி.
சிறந்த சேவைக்கான விருதை பெறும் ரோஷினி
இது ஒரு புறமிருக்க, கடந்த 2016-ம் ஆண்டு  நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள் பட்டியிலிலும் ஷிவ்நாடார்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் நாட்டு நலப்பணிக்களுக்காக தனது அறக்கட்டளை  மூலம் 630 கோடி ரூபாய் வரை அவர் செலவிட்டுள்ளார். ஏழை மக்களுக்காக சுகாதாரத் துறையில் ஷிவ் நாடார் அறக்கட்டளை அதிகமாக முதலீடு செய்துள்ளது.
இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ரூ.313 கோடி நன்கொடை அளித்து, இரண்டாவது இடம் பிடிக்கிறார். நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி ரூ.303 கோடி தானம் செய்துள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, 21 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இந்த ஆண்டு விப்ரோ தலைவர் ஆஷிம் பிரேம்ஜி , இன்போசிஸ் நிறுவனர்கள் நந்தன் நீல்கேணி, என்.ஆர்.நாராயணமூர்த்தி ஆகியோர் பின்தங்கி விட்டனர்.
'போர்ப்ஸ்' இதழின் சமீபத்திய பட்டியலின் படி, சொத்து மதிப்பில் ஷிவ் நாடாருக்கு 122-வது இடம். இவரது மொத்த சொத்து மதிப்பு. 13.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.  ஹெச்.சி.எல் நிறுவனத்தின் மதிப்பு  6.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.  2,043 பேர் கொண்ட உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் இரு தமிழர்கள்தான் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் ஷிவ் நாடார். இன்னொருவர் மலேசியாவைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன்.  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக